சனி, 30 மார்ச், 2013

கவிதைக் கீற்றுகள் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


கவிதைக் கீற்றுகள் !

நூல் ஆரிசியர்கள் சச்சிதானந்த  ஜோதி நிகேதன்  மாணவர்கள் !
தொகுப்பு  ஆசிரியர் வீ .கே .கார்திகேயன் தமிழ்த்துறை !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சச்சிதானந்த  ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் கவிஞர் கவிதாசன் அணிந்துரை மிக நன்று மலருங்கள் மாணவர்களே !என்று சிறப்பாக  தொடங்கி உள்ளார் .கோவை சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் ஜே .கமலநாதன் வாழ்த்துரை ,தொகுப்பு  ஆசிரியர் வீ .கே .கார்திகேயன் தமிழ்த்துறை அவர்களின் தொகுப்புரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .

.மாணவ மாணவியருக்கு கவிதை எழுதுவது  குறித்த பயிற்சி தந்து படைப்ப்பாற்றலை உருவாக்கி படைக்க வைத்து நூள்ளாகி உள்ளனர் .பாராட்டுக்கள்  
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப வருங்கால கவிஞர்களான நிகழ கால மாணவர்களின் சிந்தனை மிக்க கவிதைகளின் தொகுப்பு ஆசிரியர்கள் படைப்பும் நூலில் உள்ளது .  

மற்ற பள்ளிகளிலும் இதுபோன்ற நூல்கள் வெளியிட  முன் வர வேண்டும் .மாணவர்களை கல்வி தாண்டிய திறமைகளை வளர்க்க முன் வர வேண்டும் .தலைப்புகளில் வீரியம் மிக்க புதுக்கவிதைகளை வடித்து உள்ளனர் .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

ஆசிரியர் !
ஏ .சுதிக்ஷா  !7ஆம் வகுப்பு அ .

சிலை செதுக்க
சிற்பி வேண்டும் !
அறிவைச் செதுக்க
ஆசிரியர் வேண்டும்
---------------------
தாயே! 
ப. மு .ஜெய் .வைஷ்ணவி 6ஆம் வகுப்பு அ .

ஓர் அன்பு இல்லம்
முதுமையில் அவள் ஏன்
அனாதை இல்லத்தில் ?

----------------------
அம்மா  !  
சு .மந்த்ரா  பிரதொஷினி 8 ஆம் வகுப்பு ஆ 

ஒவ்வொரு ஊருக்கும்
தெய்வம் கோவிலில்
எனக்குத் தெய்வம்
என் வீட்டில் ...
தாய் !
-----------------------
 மழை !   
வி .கா .செந்தில்குமார் 6 ஆம் வகுப்பு இ .

மரம் வளர மழை வேண்டும் !
ஆனால்
மழை வர மரம் வேண்டும் !
-------------------------------
கடிகாரம் ! 
ஏ .கிஷோர் குமார் 6ஆம் வகுப்பு இ .

முட்களை நகர்த்தி
நாள் முழுவதும் உழைக்கிறாய் ...
மாணவர்க்கு
நீயே வழிகாட்டி !
-------------------------
கல்வி !    
ல .ரிதன்யா 7ஆம் வகுப்பு அ .

கண்ணாடி முகம்   காட்டும் !
கடிகாரம் நேரம் காட்டும் !
கலங்கரை விளக்கு கரை காட்டும் !
கல்வியே உலகைக் காட்டும் !
 ----------------------------------

  மரம் !  
கு .ரேஷ்மி 5 ஆம் வகுப்பு ஆ .

பூக்கள்   கொடுக்கிறாய் !
பட்டாம்பூச்சிக்குத் 
தேன் கொடுக்கிறாய் !
பறவைகளுக்கு 
வீடு கொடுக்கிறாய் !
மனத்தான் ஏன் உனக்கு 
அழிவையே கொடுக்கிறான் ?
.-------------------------------------------------
பசி ! 
சு .சக்திவேல் !முதுநிலைத் தமிழாசிரியர் !

வயிற்று ப் பசி தீர 
உண்டால் 
உறக்கம் வரும் !
அறிவுப் பசி தீர 
படித்தால் 
உயர்வு வரும் !

புதுக் கவிதைகளின் மூலம் சிந்தனை மின்னல் விதைத்து ஊலனர் .கவிதைக் கீற்றுகள் அல்ல மின்னல் கீற்றுகள் .சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் உள்ளது .
மாணவர் , மாணவியர் ,ஆசிரியர் மூவரின் புதுக் கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .இது கன்னி முயற்சி .முதல் முயற்சி .தொடர்ந்து வருடா வருடம் வெளியிடுங்கள் .இன்னும் செறிவான கவிதைகள் மலரும் .மொட்டுகளின் வாசம் மிக நன்று .மலராகும் போது இன்னும் மணம் வீசும் .மாணவர்களை பாடநூல்கள் மட்டுமன்றி வேறு பல இலக்கிய நூல்களையும் படித்து படைப்பாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள உதவிய சிந்தைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கும் ,பள்ளி நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள் .
-- 

வெள்ளி, 29 மார்ச், 2013

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !  
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !தொலைபேசி 0422-256313
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

குமரன் பதிப்பகம் ,19.கண்ணதாசன் சாலை ,சென்னை .17.தொலைபேசி 044- 24353742.
விலை ரூபாய் 70.

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களை கோவை வசந்த வாசல் கவி மன்றம்  நடத்திய விழாவில் கோவையில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் .அவரது படைப்புகளை படித்து மகிழ்ந்தவன் .கோவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர் .எழுத்து பேச்சு செயல் மூன்றிலும் தன்னம்பிக்கை விதைத்து வருபவர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராகவும் ,கோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலாரகவும் பணியாற்றி வருகிறார் .

நமது நம்பிக்கை மாத இதழில் ஜனவரி 2011 தொடங்கி 20 மாதங்கள் தொடராக வந்தது .கட்டுரையாக இதழில் படித்தப் போதும் நூலாக மொத்தமாக படித்ததில் சுகம்.கவிதை உறவு இதழில் ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களும் மிகச் சிறப்பாக இந்நூலுக்கு விமர்சனம் எழுதி இருந்தார்கள் .சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நூல் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது .புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எட்டாம் வகுப்பு படித்தப்போது அவரை முதன் முதலில் மேடை ஏற வைத்து அழகு பார்த்த நற்றமிழாசிரியர் திரு .கா .ச .அப்பாவு அவர்களின் புகைப்படத்தை வாங்கி அச்சிட்டு அவருக்கு நூலைச்  சமர்ப்பித்தது சிறப்பு .வாய்ப்புத் தந்த ஆசிரியரை  மறக்காமல் நன்றியை நன்கு பதிவு செய்த பாங்கு .இன்றைய மாணவ சமுதாயம் மனதில் நிறுத்த வேண்டிய கருத்து .

.சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளை சிந்தனை வரிகளை அணிந்துரை எழுதிய முனைவர் கோ .சேகர் குறிப்பிட்டு உள்ளார்கள் .

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் 
உன்னைச் சிறைப் பிடிக்கும் !
எழுந்து நடந்தால் எரிமலையும் 
உனக்கு வழி  கொடுக்கும் !

.சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் .இந்நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல் படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இனிமையான மனிதர் ,பண்பாளர் ,எழுத்தாளர் ,கவிஞர் ,பேச்சாளர் ,செயலர் ,அலுவலர் சகலகலா வல்லவர் .
இவரின் இன்றைய நிலைக்கு காரணம் ,அரசியல், திரைப்படம் இரண்டும் இன்றி கோவையில் இருந்து வரும் முதல் தன்முன்னேற்ற மாத இதழின் ஆசிரியர் இல .செ .கந்தசாமி அவர்களின் உரைதான் .கல்லூரி நாட்களில் விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டு இருந்த தன்னை மடைமாற்றம் செய்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டு உள்ளார் .நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளை வாழ்வில் கடை பிடித்த காரணத்தால் வெற்றிப் பெற்று உள்ளார் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் .இன்று  உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் .ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க  முடியாது .அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !

உப்பில்லாமல்  கூட உயிர் வாழலாம் - ஆனால் 
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது !

முற்றிலும் உண்மை ! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் .இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் .இதுதான் படைப்பாளியின் வெற்றி .நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார் ? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் .இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய  வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது .நம்மை புரட்டும் புத்தகம் . 
 
"அவமானங்கள் நம்மைச் சிதைத்துவிடக் கூடாது .சீராகச்  செதுக்க வேண்டும் .யாராவது நம்மை அவமானப்படுத்தினால் ,நாம் வார்த்தைகளால் அவர்களுக்கு பதில் சொல்லக் கூடாது .வாழ்ந்து காட்ட வேண்டும் .அவமானங்களையே  எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும் ."

நூலில் உள்ள மேற்கண்ட வரிகளை வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் .வாழ்வியல் கருத்துக்களை வெற்றிச்   சூத்திரங்களை சொல்லித் தரும் நூல் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உறங்கிக் கொண்டு  இருக்கும் தன்னபிக்கையை உசுப்பி விடும் வரிகள் .

" முற்றுப்புள்ளிகளை முயற்சிப்புள்ளி களாக்கினால் நீங்களே ஒரு முக்கியப்புள்ளி ஆவீர்கள் ."

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கல்லூரி காலத்தில்  கடைப்பிடித்த மூன்று கட்டளைகளை கவனியுங்கள் .

1.இனிமேல் நன்கு படிப்பது , நல்ல மதிப்பெண்களை பெறுவது .
2.எந்தப் போட்டியானாலும் அதில்  கலந்து கொள்வது .வெற்றியோ தோல்வியோ அது குறித்து கவலைப்படுவதில்லை .
3.நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்வது .

மாணவ பேரவைத் தேர்தல் பற்றி ,பெற்ற வெற்றி பற்றி ,காந்தியடிகள் குறிப்பிட்ட 7 பாவங்கள் பற்றி குறிப்பிட்டு வல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ,நல்லவனாகவும் வாழ வேண்டிய அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே நம்பிக்கை விதைக்கின்றன .நம்பிக்கைதான் என் மூலதனம் .
சிந்தனை மின்னல் தெறித்தது ,கூர்மையும் நேர்மையும் சிறகுகள் ,திறமை வளர்ந்தால் நம்பிக்கை பிறக்கும் ,உதவுபோதெல்லாம் உயர்கிறோம் ,முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் சிறகுகள் ,கூட்டு முயற்சி கோடி நன்மை ,மனதில் நம்பிக்கை நாற்று வளர்த்தேன் ,வெற்றியும் தோல்வியும் பாடநூல்களே .

நம்மை நாம் செதுக்கிக் கொள்ள உதவும் நூல் . விதி என்று ஒன்றும் இல்லை மதியால் உயரலாம் ,உழைப்பால் சாதிக்கலாம், முயற்சியால் முன்னேறலாம் என்பதை பயிற்றுவிக்கும் நூல் .வாழ்வில் சந்தித்த அனுபவங்களை , வெற்றியின் ரகசியத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன்  அவர்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
-- 
-- 

சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


சென்னையில் ஒரு நாள் !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ஷாஹித் காதர் .
தயாரிப்பு ராதிகா சரத்குமார் .

உடல் தானம் பற்றி இந்திய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உண்மை நிகழ்வான மூளைச் சாவு அடைந்த இதயேந்திரன் உடல் தான நிகழ்வை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் பாப்பி -சஞ்சய் இயக்கி வெற்றி கரமாக ஓடியது .பாப்பி -சஞ்சயின் உதவியாளர் ஷாஹித் காதர் இயக்கி உள்ளார் .இந்தபடத்தில் சேரன் சரத் குமார் ,சூர்யா ,ராதிகா ,பிரசன்னா ,விஜயகுமார் ,பிரகாஷ்ராஜ் ,கிட்டி ,சந்தான பாரதி, பார்வதி ,இனியா .அய்ஷ்வர்யா என்று நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர் .
 
இந்தப்படம் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல படம் .பிரகாஷ்ராஜ் குடும்பத்தை சரியாக கவனிக்காத பிரபல நடிகராக நடித்துள்ளார் .அவர் மகள் தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள் .மனைவியாக ராதிகா நடித்துள்ளார் .இறுதிக் காட்சியில் பேசும் வசனத்தில் யாராக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்காக தினமும் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் .வசனம் திரு .அஜயன் பாலா இது இவர்க்கு இரண்டாவது படம் நன்றாக வசனம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நடிகர் சூர்யா படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் உடல் தானம் பற்றிய வசங்கள் மிக நன்று  .வசனத்தில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் வருகிறது .இயக்குனர் கேட்டு இருக்கலாம் .இனி எழுதும் படங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள் .
வாய் பேசாத காது கேட்காத குழந்தைகளின் ஆசிரியை காதிலிக்கும் இளைஞன் கார்த்திக் .நேர்முகத் தேர்வில் வென்று வேலை கிடைத்து முதல் முறையாக பிரபல நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் )தொலைக்காட்சியில் நேர்முகம் காண நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறான் .ரவுடிகள் துரத்தி வர கார் ஒட்டி வந்த பெண் மோத கார்த்திக் வந்த வண்டி விபத்துஏற்படதலைக்கவசம் அணிந்து ஒட்டி வந்த  நண்பனுக்கு சிறு காயமும் ,தலைக்கவசம் இன்றி பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திக் மூளைச்சாவும் அடைகிறான் உயிர் இருக்கின்றது .நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் ) மகளுக்கு உடனடியாக  இதயம் மாற்ற வேண்டி உள்ளது . 


.கார்த்திக்கின் இதயத்தை தானமாக கேட்கும் போது கார்த்திக்கின் அப்பா மருத்துவராக இருந்தபோதும் தர மறுக்கிறார் .யாரோ  பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் என் மகனை கொல்ல  நான்  சம்மதிக்க மாட்டேன் என்கிறார். மந்திரி கேட்டபோதும் தர மறுக்கிறார் .பின் மகனின் காதலி வேண்டுகோளுக்கு இணங்க தர சம்மதிக்கிறார் .

சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல வேண்டும் 170கிலோ மீட்டர் தூரத்தை 1 1/2மணி நேரத்தில்  கடக்க  வேண்டும் .வானிலை காரணமாக ஹெலிகாப்ட்டர் வர இயலாது என்று சொன்னதும் ,காரில் கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுத்தி உதவி, காவல்துறை காரில் கொண்டு செல்ல உதவிட காவல் ஆணையாளர் சுந்தரபாண்டியனிடம்  (சரத் குமார் ) வேண்டுகிறார்கள் .முதலில் மறுக்கிறார் இயலாத காரியம் என்கிறார் .விஜயகுமார் தன்னம்பிக்கை தர சமதிக்கிறார் .கார் ஓட்டிச் செல்ல யார் ? தயார் என்று கேட்க்கும் பொது எல்லோரும் தயங்க  காவலர் சேரன் முன் வருகிறார் .

காவலர் சேரன் குடும்ப சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி பிடிபட்டு தற்காலிகமாக வேலை இழந்து மாமன்ற  உறுப்பினர் தயவால் வேலையில் சேர்ந்தவர் .லஞ்சம் வாங்கி பிடிபட்டு தன்  மீது பட்ட அவமானத்தை துடைக்க உயிரைப் பணயம் வைத்து காரை மிக வேகமாக ஒட்டி செல்கிறார் .மிக விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர் .ஒளிப்பதிவு மிக நன்று .பின்னணி இசை நன்று .கடைசியில் குழந்தை காப்பாற்றப் படுகிறது. மருத்துவ்ராக வரும் பிரசன்னாவின் மனைவி இனியாவின் நடத்தையில் சந்திக்கப் பட்டு  அவள் மீது காரை ஏற்றி விடுகிறார் .தப்பித்து வந்தவரை சேரனுடன் இதயத்துடன் காரில் அனுப்புகின்றனர் .அவர் இடை வழியில் காரை வேறு பக்கம் ஓட்டச் சொல்லி நேரத்தை வீணாக்குகிறார் .பிறகு ராதிகா  செல்லில் பேசவும் மனம் மாறி கார் செல்ல உதவுகிறார் .

வெட்டுக் குத்து ,குத்துப்பாட்டு ,மசாலா ,சண்டை ,ஆபாசம்,வெளிநாடு பாடல் காட்சி இப்படி வழக்கமான தமிழ் திரைப்படத்தின் ஆடம்பரம்  இன்றி சமுதாயத்திற்கு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் திரைப்படம் .படத்தில் நடித்த எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து மிக  நன்றாகவே நடித்து உள்ளனர் .
தமிழக காவல்துறை இந்தப்படத்திற்கு மிக நன்றாக ஒத்துழைப்பு  தந்துள்ளனர் .படம் .
தொடங்கும்போது எழுத்தில் நன்றி தெரிவித்து உள்ளனர். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்து மூளைசசாவு ஏற்பட்டு விட்டால் 
உறுப்புதானம் தந்திட முன் வரவேண்டும் .தீயுக்கும் ,மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை .என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும்  அழுத்தமாகவும்  விதைத்து உள்ளது இந்தப்படம் .பாராட்டுக்கள் .ராடான்  டி .வி .தயாரிப்பாக வந்துள்ளது .நன்று .ராடான்  டி .வி .தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களைச் சொல்ல முன் வர வேண்டும் 

புதன், 27 மார்ச், 2013

எண்ணுகிறான் நாட்களை ! கவிஞர் இரா .இரவி !

எண்ணுகிறான் நாட்களை  !    கவிஞர் இரா .இரவி !

அடி மேல் அடி விழுகின்றது .பயத்தில் நாட்களை எண்ணுகின்றான்
தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு பொருளாதர த் தடை விதித்து தீர்மானம் .

சிங்களப் படை வீரர்கள்  ராணுவப் பயிற்சிக்கு வந்தபோது வெளியேற்றப்பட்டனர் .

வெளையாட்டுப் பயிற்சிக்கு வந்த சிங்கள விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் .

அமெரிக்கா கொண்டு வந்த முதல் தீர்மானத்தில் இலங்கை தோல்வி
ராஜபட்சே உறவினர் ராமேஸ்வரத்தில் இருந்து விரட்டப்பட்டார் .

இலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது வாய் திறக்காமல் மவுனமாக இருந்த புத்தப் பிட்சுகள் தஞ்சாவூரில் தர்ம  அடியுடன் விரட்டப்பட்டனர் .

இலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது வாய் திறக்காமல் மவுனமாக இருந்த புத்தப் பிட்சுகள் சென்னயில் இருந்து விரட்டப்பட்டனர் .

சிங்களர் இந்தியா செல்ல வேண்டாம் என்று சுற்று அறிக்கை விட்டது இலங்கை .

மதுரையில் மிகிலங்கா அலுவலகம் தாக்குதல் .

இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை .

அமெரிக்கா கொண்டு வந்த இரண்டாவது  தீர்மானத்தில் இலங்கை தோல்வி

இலங்கை .துணைத் தூதரகம் சென்னையில் இருந்து அப்புறப்படுத்த எச்சரிக்கை .

அய் .பி .எல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து இலங்கை விளையாட்டு விரர்கள் ,நடுவர்கள் நீக்கம் .


தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழம் கிடைக்க இந்திய அரசு அ ய் .நா .வில் தீர்மானம் கொண்டு வர தீர்மானம் .

நடந்தவை முடிவு அல்ல தொடக்கம் இன்னும் இருக்கிறது அடிகள் .

இன ஒழிப்புக்கு துணை நின்ற நாடுகளும் ,கை கொடுத்த நாடுகளும் உலக நாடுகளின் அவமானத்திற்குப் பயந்து இலங்கையை கை விட்டன .

தமிழ் இனத்தை அழித்த கொடியவனுக்கு தண்டனை வழங்கும் வரை ஓயமாட்டோம் .

கொடூரனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை .எண்ணுகிறான் வாழ் நாட்களை .

ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் வாங்கித் தராமல் ஓயாது  தமிழர் அலை
.

செவ்வாய், 26 மார்ச், 2013

வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !


வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !

வரிகள் வரிகள் எங்கும் எதிலும் வரிகள் !
வரிசையாக வாங்கும் வரிகள் !

உப்புக்கு வரியா ? என்று தேசப்பிதா அன்று 
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்தார் !

திருப்பிய பக்கமெல்லாம் வரிகள் !
தவிக்கும் மக்கள் வரிக் கட்டியே !

முகத்தில் வரிகள் விழுந்தது !
மூழ்கி தவித்து மூச்சு திணருகின்றது !

ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி ஆனது 
ஜனங்களுக்கு மார்ச்சு வந்தால் மாரடைப்பு !

மத்திய மாநில அரசு ஊழியர் பலருக்கு !
மார்ச் மாதம் ஊதியம் இல்லாமல் போனது !

நின்றால் வரி நடந்தால் வரிகள் !
சென்றால்  வரி கடந்தால்   வரிகள் !

உண்ண வரி விடுதியில் உறங்க வரிகள் !
உடைக்கு வரி கேளிக்கை வரிகள் ! 

பெட்ரோலுக்கு வரிகள் ! டீசலுக்கு வரிகள் !
பெற்றோருக்கும்  குழந்தைகளுக்கும் வரிகள் !

எங்கும் எதிலும் வரிகள் !வரிகள்! வரிகள் !
இங்கு வரிகள் இன்றி எதுவுமில்லை !

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே !
ஆனந்த சுந்திரம் அடைந்தோம் என்று !

-- 

திங்கள், 25 மார்ச், 2013

மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !


மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? 
 கவிஞர் இரா .இரவி !

சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !

வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும் 
வெட்ட வெளியில் சுட்டவனே !

மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி 
குண்டு மழை  பொழிந்தவனே !

நேருக்கு நேர் மோதிட முடியாமல் 
குறுக்கு வழியில் சதி செய்தவனே !

சிறுவனிடம் வீரம் காட்டிய 
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !

பன்னாட்டு ராணுவத்  துணையுடன் 
உள்  நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !

காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !

புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும் 
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !

வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !

கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு 
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !

கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு 
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !

அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
 
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !

மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?

பயத்தால் தினம் நீ செத்து செத்துப்  பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது  உறுதி !

எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !

உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !

ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை !
ஆதிக்கம்  ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !

விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !

-- 

.

சனி, 23 மார்ச், 2013

."உயிர்க் குருதி " ( குருதி கொடையாளர்கள் முகவரி நூல் ) நூல் வெளியீட்டு விழா !.ரத்ததான முகாம் !

."உயிர்க் குருதி  " ( குருதி கொடையாளர்கள் முகவரி நூல் ) நூல் வெளியீட்டு விழா !.ரத்ததான முகாம் !
மதுரையில் "உயிர்க் குருதி  " ( குருதி கொடையாளர்கள் முகவரி நூல் ) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .
மருத்துவர் கிருஷ்ணன் நூலை வெளியிட காவல் கண்காணிப்பாளர் திரு பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார் .திரு செல்லச்சாமி வாழ்த்துரை வழங்கினார் .நூல் ஆசிரியர் மகாலக்ஷ்மி ஏற்புரையாற்றினார் ..ரத்ததான முகாம் தொடங்கி  வைக்கப்பட்டது .மருத்துவர்களும் , இளைஞர்களும் ,பொதுமக்களும் கலந்துக் கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள் .

புன்னகை வெளிச்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


புன்னகை வெளிச்சம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் அ .கௌதமன் .செல் 8870748997 
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மைவிழி பதிப்பகம்   4/26 ராகவேந்திரா இரண்டாவது தெரு ,சதாசிவம் நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91.

விலை ரூபாய் 30.திருச்சியில் வாழ்ந்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர் அ. கௌதமன் தமிழகஅரசு தணிக்கையாளராகப் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருபவர் .ஹைக்கூ திருவிழாவை மிகச் சிறப்பாக திருச்சியில் நடத்தியவர் .தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நெத்திச்சுட்டி என்ற முதல் நூல் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாவது நூல் இது .திரு கி .நடராசன் அவர்களின் அணிந்துரை மிக நன்று ."வாழ்க்கை விளையாட்டைப் பாதியில் நிறுத்திக் கொண்ட என் அன்புச் சகோதரன் இளவழகனுக்கு காணிக்கை "என்று வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தணிக்கையாளர் என்பதால் விலைவாசி ஏறும் காரணத்தை அறிந்து ஹைக்கூ வடித்துள்ளார் .

இலவசங்கள் தொடர்வதால் 
ஏறுகிறது 
விலைவாசி !

.அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு வீடு தேடி வருவார்கள் .வென்றதும் காணமல் போய் விடுவார்கள் .அரசியல்வாதிகளின் நடப்பை ஹைக்கூவாக்கி உள்ளார் .
தலை காட்டாத வேட்பாளரை 
மவுனமாகத் திட்டினார்கள் 
"முண்டம் " என்று !

ஜோதிடர் கூண்டுக் கதவை திறந்து கிளியை வெளியில் விட்டபோதும் .கிளி நெல்லைத் தின்றுவிட்டு பறக்க முயற்சி செய்யாமல் திரும்பவும் கூண்டுக்குள் சென்று விடும் நிலையை காட்சிப் படுத்தி உள்ளார் .


விரும்பவில்லை விடுதலை 
நெல்லுக்கு அடிமை 
கூண்டுக்கிளி !

கிளி போல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை குறியீடாக உணர்த்தி உள்ள்ளார் .

வாக்களிக்க லஞ்சம் தருகிறார்கள் .மக்களும் சந்தோசமாக வாங்கிக் கொள்கிறார்கள் .வென்றவர்களும்  அய்ந்து வருடங்களில் சின்ன மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதைப் போல கோடி  கோடியாக சுருட்டி விடுகின்றனர் .இதனையும் குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .படைப்பாளி நினைக்காததையும் வாசகனை நினைக்க வைப்பது சிறந்த ஹைக்கூ .

மஞ்சள் பூசியதால் 
மகிழ்ந்தது ஆடு 
பலியாகப் போவதை அறியாமல் !

இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பகல் கொள்ளை நடக்கும் இடமாகி விட்டது .பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க  மிகச் சிரமப் படுகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ .

மகன் புத்தகம் சுமபதற்காகத் 
தந்தை சுமக்கிறார் 
பெருங்கடன் !

அன்று அறங்காவலர்கள் சொந்தப் பணத்தை கோவிலுக்கு செலவளித்தார்கள் .ஆனால் இன்று அறங்காவலர்கள் சிலர் கோயில் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் .அந்த அவலத்தை தணிக்கையாளர் என்பதால் உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .

அறங்காவலர் வீடு 
அலங்கரித்தன 
கோவில் மரங்கள் !

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி பாடாத கவிஞன் கவிஞன் இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் அ .கௌதமன் ஹைக்கூ எழுதி உள்ளார் .

வேறு நாடு போகலாமா ?
புத்தன் கலக்கம் 
இலங்கை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன புத்தரை வணங்கிக் கொண்டு பேராசை பிடித்து அலைந்து தமிழர்களை அழிந்து மகிழ்ந்த சிங்களர்கள் புத்தரை வணங்கும் தகுதி இழந்து விட்டனர் .

சிந்திக்க வைக்கும் நல்ல ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் . 


வெள்ளி, 22 மார்ச், 2013

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !கவிஞர் இரா .இரவி உரை !

மதுரை  அரசமரம் இசை இலக்கிய சங்கம் சார்பில் 18.3.20013 அன்று நடந்தது .

பட்டிமன்றம் !  நடுவர் ! தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் !

மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது 
திறமையா ?  அதிர்ஷ்டமா ?

மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !கவிஞர் இரா .இரவி உரை !

இலக்கிய இமயம் மு.வ .அவர்கள் சொன்னது .ஒருவர் கரடி முடி வாங்கி வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விற்று வந்தார் .பலரும் வாங்க ஆசைப் பட்டனர் .உடல் முழுவதும் முடி வைத்துள்ள கரடி வைத்துள்ளவன் ஏன்?   இப்படி தெருவில் அலைகிறான் .யோசியுங்கள் .என்றார் .

எடை பார்க்கும் கருவியில் எடையின் அளவு வரும் பின் புறம் அச்சடிக்கப்பட்ட சோதிடத் தகவல் வரும் .இதுவும் மிகப் பொருத்தமாகவே வரும் என்றார் நண்பர் .எடை பார்க்கும் கருவி மீது குடையையும் ,சூட்கேசையும் வைத்தேன் .எடை 50 கிலோ. பின்புறம் திருப்பினால்" நீ காதலில் வெற்றி பெறுவாய் "என்று இருந்தது .குடையும் சூட்கேசுயும் காதலில் வெற்றி பெறுமா ? சிந்திக்க வேண்டாமா ?

மன்னரிடம் சோதிடர் சொன்னார் அதிகாலையில் இரட்டைப் புறாக்கள்  முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் வரும் என்றார் .உடன் மன்னன் அதிகாலையில் கண்களை மூடிக் கொண்டு  இரட்டைப் புறாக்கள் முகத்தில் முழிக்கக்  காத்து இருந்தார் ."அம்மா 
தாயே "என்று பிச்சைக்காரன் குரல் வந்தது .விழித்துப் பார்த்த மன்னுக்கு கோபம் வந்து. பிச்சைக்காரனுக்கு சிரச்சேதம் செய்ய தண்டனை வழங்கினார். பிச்சைக்காரன் சிரித்தான் .சாகப் போகிறாய் ஏன் சிரிக்கிறாய் ? என்றார் .பிச்சைக்காரன்  சொன்னான் " என் முகத்தில் விழித்த நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் .உங்கள் முகத்தில் விழித்த நான் சாகப்போகிறேன் .யார் முகம் ராசி இல்லாதது என்று நினைத்துப் பார்த்தேன் .சிரிப்பு வந்தது ." என்றான் .மன்னர் உடனடியாக சிரச்சேதம்  தண்டனையை ரத்து செய்தார் . 
.
அதிர்ஷ்டம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை .அப்படி ஒன்று உலகில் இல்லை .தலைவிதி என்பதும் கற்பிக்கப் பட்ட கற்பனைதான் .ஒருவர் முடி வெட்ட கடைக்கு சென்றார் .அங்கு போய் எல்லாம் என் தலைவிதி என்று புலம்பினார் .முடி வெட்டுபவர் சொன்னார் .முடி வெட்டும் அரை மணி நேரத்திற்கே தலையை ஒழுங்காக காட்டவில்லை .கடவுள் உன் வாழ்நாள் முழுவதும் உள்ள கதை எழுதிட ஒழுங்காக தலையை காட்டி இருப்பீர்களா ?என்றார் .

   கழுதை புகைப்படத்தைப் போட்டு " என்னைப் பார் யோகம் வரும் " என்று எழுதி உள்ளனர் .கழுதையை வளர்த்து  கழுதையுடனே நாள் முழுவதும் இருக்கும் துணி துவைப்பவருக்கு ஏன் ? யோகம் வரவில்லை .சிந்திக்க வேண்டும் .

இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து ,இந்தியாவின் முதற்க்குடிமகனாக  உயர்ந்தவர் .செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்பு செய்தியாக வந்தவர் அப்துல்கலாம் .அவர் பொக்ரானில்  அணுகுண்டை  வெடித்தபோது அமெரிக்காவின் கழுகுக் கண்களான ரெடாராருக்கு தெரியாமலே வெடித்தார் .வெடித்தபின்புதான் அமெரிக்காவிற்கு தெரிந்தது .இந்த திறமையின் காரணமாகவே அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் ஆனார் .அதிர்ஷ்டம் காரணம் அல்ல .

கோவை அருகே  உள்ள கோதவாடியில் பிறந்த தமிழர் மயில்சாமி அண்ணாத்துரை சந்திரனுக்கு சந்திராயான் அனுப்பி சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று உலகிற்கு முதலில் அறிவித்தார் .பிறகுதான் அமெரிக்கவின்  நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது .மயில்சாமி அண்ணாத்துரை அவர்களை உலகம் அறியக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .

பண்ணைப்புரத்தில் பிறந்து பொதுவுடைமைக் கட்சி மேடைகளில் அண்ணன் பாவலர்
வரதராசனுடன் இசை அமைத்து வந்த இளையராஜா அவர்கள் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்து  வளர்ந்து  பின் சிம்பொனி இசையமைத்து மேஸ்ட்ரோவாக இசைஞானியாக ,வளரக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .

இளையராஜா அவர்களிடம் பணி  புரிந்த ஏ .ஆர் .ரகுமான்  ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கிடக் காரணம் திறமையே !

முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் எழுத்திலும் ,பேச்சிலும் ,நிர்வாகத்திலும் தனி முத்திரைப் பதிக்கக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்வார்கள்.  இயங்கிக் கொண்டே இருங்கள் என்பார் .விதைத்துக் கொண்டே சென்றால் அறுவடை வரும் .அதற்காக குரங்கு போல விதைத்தவுடன் தண்ணீர்  ஊற்றி விட்டு தினமும் விதையை கையில் எடுத்துப் பார்க்க கூடாது .உடனடி வெற்றி சாத்தியம் இல்லை .இயங்கிக் கொண்டே இருந்தால் திறமை வளரும் வெற்றிகள் குவியும் .

புற்று நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்ப வந்து சாதனை புரிந்தார் .காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .யுவராஜ் பற்றி நூல் வந்துள்ளது .சச்சின் வெளியிட்டார் .
.சச்சின் அவர்களுக்கு பாராளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் பதவி கிடைக்கக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .

இப்படி சாதனையாளர்களும் ,வெற்றியாளர்களும் சாதிக்க வெற்றிப் பெற காரணம் திறமையே ! அதிர்ஷ்டம் அல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

அறிஞர் அண்ணா அவர்கள் கன்னிமாரா நூலகத்திற்கு முதல் ஆளாகச் சென்று கடைசி ஆளாக வெளியில் வருவாராம் .அப்படி நூலகத்தின் மூலம் திறமை வளர்த்தார் .ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டத்தில் பேச அறிஞர் அண்ணா  சென்று இருந்தார் .உயரம் குறைவாக இருந்த அறிஞர் அண்ணாவை ஏளனமாகப் பார்த்தார்களாம் . என்ற A,B,C,D நான்கு எழுத்துக்கள் வராமல் நூறு ஆங்கிலச் சொற்கள் சொல்லுங்கள் என்றார் . ஆங்கிலப் பேராசிரியர்கள் தெரியாமல் திகைத்தனர் .ஒரு சிறுவனை அழைத்து ONE ,TWO ,THERE வரிசையாக சொல்லச் சொன்னார் .NINATY NINE வந்தும் STOP என்றார் .காரணம் HUNDRED என்றால் D வந்து விடும் என்பதால் ,இதுதான்  A,B,C,D  நான்கு எழுத்து வராத  நூறு ஆங்கிலச் சொற்கள்என்றார் அனைவரும் அசந்தனர் .அறிஞர் அண்ணா சிறக்கக் காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .

அப்புக் குட்டி என்ற நடிகர் அவர் அழக்காக இல்லாவிட்டாலும் நடிப்பு திறமையின் காரணமாக அழகர்சாமி குதிரை என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் .காரணம் திறமையே !அதிர்ஷ்டம் அல்ல .

பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அன்றே பாடினார் .

அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் .விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் .உன் போல குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் .

 தலைப்பிற்கு பொருந்தும் என் ஹைக்கூ கவிதைகள் !

இடித்துக் கட்டியதில் 
நொடித்துப் போனார் 
வாஸ்து பலன் !

பத்துப் பொருத்தம் 
பார்த்து முடித்த மாப்பிள்ளை 
விபத்தில் மரணம் !

சொல்லவில்லை 
எந்த சோதிடரும் 
சுனாமி வருகை !

அட்சய திரிதியில் 
வாங்கிய தங்கம் 
அடகில் மூழ்கியது !

உலகப் பொதுமறை எழுதிய திருவள்ளுவரும் தெய்வத்தால் முடியாததும் முயன்றால் முடியும் என்றார் .மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !
.
பட்டிமன்றம் !  நடுவர் ! தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள்  மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !என்று தீர்ப்பு வழங்கினார் 

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

வியாழன், 21 மார்ச், 2013

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது
.வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார்.

திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்  கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம்  விஸ்வநாதன் ,சந்துரு வாழ்த்துரை வழங்கினார்கள் .

திருச்சி .வெங்கடராமன் மகிழ்ச்சியே வாழ்க்கை என்ற தலைப்பில் தன்  முன்னேற்ற வாழ்வியல் பயிற்சி  அளித்தார் .நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் நல்லதை மட்டும் பார்ப்போம் ,நல்லதை மட்டும்  கேட்போம் ,நல்லதை மட்டும்  பேசுவோம் ,நல்லதை மட்டும் செய்வோம் என்று உறுதி மொழி எடுக்க வைத்தார் .காவல் நிலையம் ,நீதி மன்றம் ,மருத்துவமனை சென்றால் நிம்மதி  போய்  விடும்  .மூன்றுக்கும் முடிந்தவரை செல்லாமல் வாழ்வோம் .பலத்த காற்று அடித்தால் திரும்பி கண்ணில் படாமல் இமை மூடி கண்ணைப் பாதுகாப்பதைப் போல ,பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ..பயனுள்ள பல தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார்

.
.என் .ஜி .ஓ வைச் சேர்ந்த ராமநாதன் நன்றி கூறினார்
--

படித்ததில் பிடித்தது ! தண்ணீர் -அன்றும் இன்றும் முனைவர் ச. சந்திரா

படித்ததில் பிடித்தது !

தண்ணீர் -அன்றும் இன்றும்
முனைவர்  ச. சந்திரா 
            தண்ணீர் -அன்றும் இன்றும்மாதம் மும்மாரி அன்று !
அதனால் அருவியாக . வீழ்ந்தாய் !
நதியாய் பரவினாய் !
ஊ ற்றாய் பெருகி னா ய்!
குளமாய் கிடந்தாய் !
அணையாக தேங்கினாய் !
அனைத்தும் இலவசம் அன்று !
மினரல் வாட்ட ராய்
விலை கொடுத்து வாங்கி
நடுவீட்டில் இன்று !

                              

தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !கவிஞர் இரா .இரவி !

உலக தண்ணீர் தினம் ! 22.3.2013 .

தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !கவிஞர் இரா .இரவி !

இரண்டு நாடுகள் மகிழ்வாகப் பகிர்கின்றன !
இரண்டு மாநிலம் பகிர்வதில் சண்டை !

இயற்கையின் அன்பளிப்பு தண்ணீர் !
இனிதே உயிர் வாழத் தேவை தண்ணீர் !

ஏழைகளின் அவசர உணவு தண்ணீர் !
பணக்காரகளின் கைகளில் தண்ணீர் !

வள்ளுவன் உரைத்தான் அன்றே !நன்றே !
உணவாகவும் உணவு விளைவிக்கவும் தண்ணீர் !

அடிப்படைத்  தேவைகளில் முதன்மை தண்ணீர் !
அத்தியாவசிய அவசியம் அனைவருக்கும் தண்ணீர் !

தாகம்  தணிக்கும் உயர்ந்த உணவு தண்ணீர் !
தேகம் கழுவிட உதவிடும் தண்ணீர் !

ஆரோக்கியம் பேணிட வேண்டும் தண்ணீர் !
அனைவரின் உயிர் காப்பது தண்ணீர் !

முனிவரும் துறக்க முடியாது  தண்ணீர் !
இனிவரும் காலம் காக்க வேண்டும் தண்ணீர் !

காலையில் மறக்காமல் அருந்துக தண்ணீர் !
காணமல் போக்கும் நோயை தண்ணீர் !

உணவு இன்றி கூட உயிர் வாழ்ந்திடலாம் !
தண்ணீர்  இன்றி  உயிர் வாழ்வது கடினம் !

உலக யுத்தம் வரும் தண்ணீருக்காக என்று 
உளறுகின்றனர் சித்தம் கலங்கி !

இனி உலக யுத்தம் வரவே வராது !
இனி வரவும் கூடாது வர விடக் கூடாது !

உலக யுத்தத்தால் அடைந்த இன்னல் போதும் !
உலகில் அமைதி நிலவிட வேண்டும் !

வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர் !
வீணாக விரயம் செய்திட வேண்டாம் தண்ணீர் !

தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !
தண்ணீரை வாரிசுகளுக்கும் விட்டுச் செல்வோம் !


யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...