வெள்ளி, 31 ஜனவரி, 2014

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு நேர்முகம்

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு நேர்முகம்

http://www.puthiyathalaimurai.com/this-week/2781


ஐஏஎஸ் தேர்வுக்கு  இலவசப் பயிற்சி
ஜி.மீனாட்சி

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் ‘புதிய தலைமுறை கல்வி’ இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் இலவசப் பயிற்சியில் சேர என்ன தகுதி வேண்டும்? மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், இருப்பிடமும், பயிற்சியும் இங்கு இலவசம்.

ஆதிதிராவிட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்காக தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தமிழக அரசு அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மையமாக பிப்ரவரி 2000 முதல் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நுழைவுத் தேர்வின் மூலம் முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination) 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி (Main Examination)  அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே மாதிரி ஆளுமைத்தேர்வு (Mock-Interview) நடத்தப்படுகிறது. அவர்கள் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட சலுகைக் கட்டணத்தில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இப்போது அரசு அதை 2,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. பிரதானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஊக்கத் தொகையும், ஆளுமைத் தேர்வுக்கு தில்லி சென்று வர 200 ரூபாய் வழிச் செலவுக்கும் அளிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் சேர ஒரு நுழைவுத் தேர்வை நாங்கள் நடத்துகிறோம். பட்டப்படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு வரவும், நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இங்கிருக்கும் நூலகம் போட்டித் தேர்வுகள் எழுத அனைத்து வசதிகளும் கொண்ட அருமையான நிலையமாகும்.  இங்கு 21,000 புத்தகங்கள் உள்ளன. கணினிக்கென்றே தனி அறையும் உள்ளது. இங்குள்ள கருத்தரங்குக் கூடம் குளிர்சாதன வசதி கொண்ட அருமையான அரங்கமாகும்.  

இந்த நிறுவனத்திலேயே இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த பேராசிரியர்களும், வல்லுநர்களும் அழைப்புப் பேராசிரியர்களாக தருவிக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்ற அலுவலர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கி இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள்.  தில்லி போன்ற நகரங்களில் பயிற்சி மையம் நடத்தும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிகிறவர்களையும் அவ்வப்போது பாடங்களை நடத்தவும், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தவும் பயன்படுத்திக் கொள்கிறோம். மாணவர்களே விருப்பப்படும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களும் இங்கு வந்து வகுப்புகளை கவனிக்க தடையேதும் நாங்கள் விதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து நிறைய பேர் இப்பணிகளுக்குச் சென்று, நம் பெருமையை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.

இந்தப் பயிற்சி மையத்தில் எத்தனை பேர் பயிற்சி பெறுகிறார்கள்? எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்?
தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 300 பேர் ஒவ்வொரு வருடமும் பயிற்சி பெறுகிறார்கள். 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 432 தமிழக மாணவர்கள் பல்வேறு குடிமைப்பணி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய பயிற்சி மையத்திலிருந்து 2010-ஆம் ஆண்டில் 48 பேரும், 2011-ஆம் ஆண்டில் 47 பேரும், 2012-ஆம் ஆண்டில் 49 பேரும் அகில இந்திய அளவில் உயர்ந்த இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு மையத்தை தங்கள் மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் வந்து பார்த்தவண்ணம் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் இருந்தும் இதைப் பார்ப்பதற்காக வருகை புரிய உள்ளார்கள்.

முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவோருக்காக மாதிரி நேர்முகத் தேர்வை (Mock Interview) நடத்துகிறீர்களா?
ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அவசியம். எனவே மத்திய தேர்வாணயம் நடத்துவது போலவே நாங்கள் நான்கு ஐந்து முக்கியமான அலுவலர்கள், தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள், மனநல வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்டு அச்சு அசலாக மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்துகிறோம். இதனால் மாணவர்கள் பயமும், பதற்றமும் இன்றி தில்லியில் நடக்கும் ஆளுமைத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கவும் செய்கிறோம். இவையெல்லாம் அவர்களை மெருகேற்றுகின்றன.

வருங்காலத் திட்டங்கள் எவை?
அண்ணா மேலாண்மை நிறுவனம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு துணை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், வணிக வரி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற அ தொகுதி அலுவலர்களுக்கு ஐந்து வார அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற ஆ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பவானி சாகரில் அரசு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படைப் பயிற்சியும், துணை வட்டாட்சியர்களுக்கு 28 நாட்கள் இடைநிலைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

இந்திய வனப்பணி, முதல் பிரிவு போட்டித் தேர்வு போன்றவற்றிற்கும் அறிமுகப் பயிற்சியை நடத்தலாம் என்று பரிசீலித்து வருகிறோம். அது தவிர அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை குழு விவாதமாகவும், கலந்துரையாடலாகவும், ரோல் ப்ளேவாகவும் நடத்தி பயிற்சியை வாழ்க்கையோடும், பணியோடும் தொடர்புபடுத்தும் விதமாக மாற்ற இருக்கிறோம். இப்போது தமிழக அரசு 36.23 கோடி ரூபாய் ஒதுக்கி, பவானி சாகரில் மிகச் சிறந்த பயிற்சிக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.   

இங்கு பயிற்சியாளர்களுக்கு நல்ல நூலகம், கணினி அறை, விளையாட்டுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் இந்தப் பயிற்சி மையம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி தரப்படாமல் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் அழைப்புப் பயிற்சி அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக பயிற்சியின் தரத்தை எல்லா வகைகளிலும் பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். பயிற்சியாளர்களும் இந்த மாற்றங்களை நேசித்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் போட்டிகள், படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் சஞ்சிகைகள் போன்றவற்றை ஏற்படுத்தி பயிற்சியை அயர்ச்சியில்லாத அனுபவமாக மாற்றியிருக்கிறோம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் தாங்கள் காணும் பொதுவான குறைபாடுகள் என்ன?
நமது மாநில மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி?  
சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.  இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக  நடத்தப்படுகிறது.  பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.  

இத்தேர்வை எழுத குறைந்தபட்ச வயது  21.  பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.  பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.  

இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.  

மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.  

முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.

ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.  

சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாரவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம்.   

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் வலம் வரும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களாக நீங்கள் கருதுவது என்ன?
உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, கனிவு, கருணை, மக்களோடு பணியாற்றும் ஆர்வம், பணத்திற்கு ஆசைப்படாத எளிமை, எப்போதும் மற்றவர்கள் சந்திக்கும் அளவு இயல்பான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட மாணவர்கள் காத்திரமான அலுவலர்களாகப் பரிமளிப்பார்கள்.

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன்

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன்

கவித்துளி ! மாற்றுத்திறனாளிகள் குறும்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவித்துளி !


மாற்றுத்திறனாளிகள்   குறும்பாக்கள் !

தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 40.
செல் 9944391668.  kavignareagalaivan@gmail.com

37 மாற்றுத் திறனாளிகள் குறுந்செய்தி  குறும்பாக்கள் தொகுப்பு நூல். இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் மாற்றுத் திறனாளி மட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் வாசகன் பதிப்பகம் தொடங்கி சிந்தனை விதைக்கும் பல நல்ல நூல்களை தொடர்ந்து பதிப்பித்து வருகிறார் .இந்த நூலும் வாசகன் பதிப்பகம் நூலாக வந்துள்ளது .தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் அவர்கள் நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் வித்தியாசப் படுகிறார் .அட்டைப்பட புகைப்படம் மிக நன்று .


சமர்ப்பணம் !

தரணியிலே 
என்னை தவழ வைத்து 
தவழ இயலாதபோது 
தாங்கிப் பிடித்து 
உலகத்தை 
சுட்டிக் காட்டிய 
சுட்டு விரல்களான
என் தாய் தந்தைக்கு ... 

இனிய நண்பர்களும், ஹைக்கூ கவிஞர்களுமான மு .முருகேஷ், பொன் குமார் ,கன்னிக் கோவில் இராஜா ஆகியோரின்  அணிந்துரை மிக நன்று .
நூல் எனும் மகுடத்தில் பதித்தவைரக்கற்களாக மிளிர்கின்றன.முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகள்களின் ஹைக்கூ கவிதைகள் மிக நன்று. சிந்தனைக் குவியலாக சுரங்கமாக உள்ளன .ஒன்றே முக்கால் ஆண்டுகளாக அலைபேசி வழி குறுந்செய்தியாக அனுப்பிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து  நூலாக்கி  உள்ளார்கள் .தேனீ  தேன் சேகரிப்பது போல சேகரித்து நூலாக்கி உள்ளார்கள் .தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் இருவரின் உழைப்பை உணர முடிந்தது .

உடலில் குறை இல்லாவிட்டாலும் உள்ளத்தில் குறையோடு வாழ்ந்து வரும் சராசரி மனிதர்கள் அல்ல இவர்கள் .உடலில் குறை இருந்தபோதும்  உள்ளத்தில் குறை இன்றி உழைக்கும் ,சிந்திக்கும் சாதனையாளர்களின் சிந்தனை தொகுப்பு மிக நன்று .பாராட்டுக்கள். மாற்றுத் திறனாளிகளின் ஆற்றலை , திறமையை சிந்தனை நுட்பத்தை பறை சாற்றும் நூல் .

தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் அவர்களின் ஹைக்கூ கவிதையோடு தொடங்கி நூலின் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன்  ஹைக்கூ வோடு முடித்துள்ளனர் .

அலைபேசியின் நன்மை அதிகம் தீமை குறைவு .அதனை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

கவித்துளி மு .குமார் !
உலக உருண்டை 
செவ்வக வடிவமானது 
செல்போன் ! 
.
மனிதர்கள் வரிசையில் நிற்கும்போது சண்டை நடப்பதை பார்த்து இருக்கிறோம் .அக்ரிணைகள் உயர் திணைகளை விட உயர்வாக இருப்பதை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் தகடூர் செவ்வியன் !
ஆறறிவு இல்லாது போயினும் 
சட்டத்தை மீறுவதில்லை 
வரிசையில் எறும்புகள் !

புகைப்பிடிப்பதால் வரும் தீமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

கவிஞர் இளசேட் சென்னி ! 
உன்னை மட்டுமல்ல 
சுற்றியிருப்போரையும் 
சுடுகாட்டுக்கு அனுப்பும் சிகரெட் ! 

சாதிச் சங்ககள் ,அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள் பற்றி எல்லால் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .

கவிஞர் ம .பாலன்  
பிராந்தி அரை  பாட்டில் 
பிரியாணி ஒரு பொட்டலம் 
பேரணி !

ஹைக்கூ கவிதைக்கான விளக்கத்தையே ஹைக்கூவாக வடித்து சிறப்பு .

கவிஞர் இரா .சுமதி !
அண்டம் சுருக்கி
அணுவுள் புகுத்தும் முயற்சி 
ஹைக்கூ !  

மரத்தின் நன்மையை அவசியத்தை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .

கவிஞர் சு .லட்சுமணன் !
மரங்களை வெட்டாதீர் 
குறைகிறது 
மனித ஆயுள் !

ஹைக்கூ கவிஞரின் மனதை படம் பிடித்துக் காடும் ஹைக்கூ  இதோ.
 
கவிஞர் சித்தை  பா .பார்த்திபன் !
தேடுதல் வேட்டையில் 
அரிதாய் சிக்கும் 
சரியான ஹைக்கூ 

மாற்றந்தாய் கொடுமை என்பது சொல்லில் அடங்காது .அனுபவதர்கல் மட்டும் உணரும் கொடிய வலி  வேதனை .அதனை நன்கு உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் அ. இந்துமதி !
என் அப்பாவுக்கு கதாநாயகி 
எனக்கோ வில்லி 
மாற்றந்தாய் !

அழகியில் பாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள்  உள்ளன .
  
கவிஞர் கோட்டை மனோஜ் !
பூக்கள் மலர்வதை 
நான் பார்த்ததில்லை 
ஒரு முறை சிரி !  

இயற்க்கையின் சினம் உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் தமிழ் இயலன் !
குடிசைகள் மூழ்கின
கோபுரங்கள் நீந்தின 
பிழையானது மழை ! 

படிக்கும் வாசகர்களுக்கு பறவைகளை காட்சிப் படுத்தும் ஹைக்கூ .

கவிஞர் பவானி கண்ணன் !
பறவைகளின் கோடைக்கால 
சுற்றுலாத்தலம் 
வேடந்தாங்கல் !

மூட நம்பிக்கையில்  ஒன்றாகி விட்ட தேர்தல் பற்றிய ஹைக்கூ .

கவிஞர் க .நீலவண்ணன் !
வெளிச்ச த்தைத் தேடி 
இருட்டுக்குள் பயணம் 
தேர்தல் !

சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ.

கவிஞர் மா .மாணிக்க சந்திரசேகர் !  
முதுகில் குத்துகிறோம் 
வெகுண்டெழுகிறது பூமி 
பூகம்பமாய் !

மூட நம்பிக்கையை உணர்த்திடும் ஹைக்கூ .

கவிஞர் பெ .கவி .பெரியசாமி 
உன் தொழுகைக்குப்பின் 
எங்களூர் மைல் கல்லுக்கு 
தினமும் பூஜை !

ஆலயத்தை விட உயர்வான நூலகம் பற்றிய ஹைக்கூ .

கவிஞர் நா .செல்வராஜ் !
சாதனைகளின் சங்கம் 
சிந்தனைகளின் பிறப்பிடம் 
நூலகம் !

எல்லோருக்கும் எதிர்காலம் சொல்லி கிளி தன் எதிர் காலம் அறியாத சோகம் உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் யாழினி ஸ்ரீ  !
எந்தத் தவறும் செய்யாமல் 
சிறைத் தண்டனை 
கூண்டுக் கிளி  !

இயந்திர மயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் அவலம் .உறவுகளைப் பிரிந்து அயல் நாடுகளில் வாழும் சோகம் .

கவிஞர் ஜி .ஆஸ்டிரின் பிரிட்டோ !
அயல்நாடு மோகத்தில் 
கனவாகிப் போயின 
உறவுகள் !

கொள்ளையோ கொள்ளையாகி விட்ட மணல் கொள்ளை பற்றிய ஹைக்கூ .  .

கவிஞர் கா .இளையராஜா !
பறிபோகும் நீர் ஆதாரம் 
பகல் கொள்ளைக்கு நிகராய் 
மணல் கொள்ளை !

கவிதைகளில் சுவையானது சுகமானது காதல் கவிதை .

கவிஞர் த .நளினி ! 
பொய்யெனத் தெரிந்தும்  
மெய்மறக்கச் செய்கின்றன 
காதல் கவிதைகள் !

எள்ளல் சுவையுடன் மூட நம்பிக்கையைச் சாடும் ஹைக்கூ  .

கவிஞர் தில் பாரதி !
குறுக்கே மனிதன் 
சகுனம் பார்த்தது 
பூனை !

மாற்றுத் திறனாளிகளை  சிந்திக்க வைக்கும் ஹைக்கூ .

கவிஞர் பி .கால்டுவெல்  நியூட்டன் !
இபாடிதான் வாழவேண்டுமென 
உடற்குறை த்தாண்டி 
நீயே தீர்மானி !

தன்னம்பிக்கை தரும் விதமாக  ஊக்கம் தரும் ஹைக்கூ .

கவிஞர் நா .முனியசாமி !
பூபாளம் இசைக்கவே 
பூமிக்கு வந்துள்ளாய் 
முகாரி  ஏனோ ?

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் ! மாமழை போற்றும் ஹைக்கூ .

கவிஞர் க .அகிலா பாரதி!
மனிதநேயம் 
மறவா  இயற்கை 
கோடை மழை !

மரத்தின் நேயம் உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் வேம்பை தி . பாலாஜி !
எனக்கான மூச்சுக் காற்றை 
தினமும் தருகின்றன
மரம் மரங்கள் !

தீபாவளியை இவர் பார்க்கும் பார்வை மிக வித்தியாசமானது.

கவிஞர் ஜனசக்தி !
அகில இந்திய 
சுற்றுச்சுழல் மாசு தினம் 
தீபாவளி !

துணிவின் அபசையத்தை அவசியத்தை வாழ்வி அர்த்தத்தை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் க .மாரிமுத்து 
இறக்க ஒரு நொடி போதும் 
வாழ ஒவ்வொரு நொடியும் தேவை 
துணிச்சல் !

பெருகிவரும் கட்டடங்களின் தீமையை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் இரா .ஆறுமுகம் !
பரிதவிக்கிறது பசுமை 
கான்கிரீட் காடுகளின் 
விரிவாக்கம் !

மனிதநேயம் மறந்து  வருவதை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் தி .சுபத்திரா !
எந்திரமான உலகில் 
தேடப்படும் அறிய பொக்கிசமாய்
மனிதநேயம் 

மாற்றுத்திறனாளிகளின் மாண்பை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் உ .சின்னத்துரை !
மற்றவர்களைக் காட்டிலும் 
திறமைகளால் உயர்கிறான் 
மாற்றுத்திறனாளி !
  
காதலில் ஊடல் பற்றிய ஹைக்கூ நன்று .
கவிஞர் துளிர் !
நீயும் நானும் பேசாதபோது 
நமக்காக பேசுகிறது 
காதல் !
 
தங்கம்  விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது .நாட்டில் வன்முறைகளும் நாளுக்கு நாள்  பெருகிக் கொண்டே போகிறது .

கவிஞர் ந  .ஆனந்தஜோதி !
விலை கேட்டால் 
தலை சுற்றும் 
தங்கம் !

ராசிபலன் எழுதி பக்கம் நிரப்பி பணம் பார்த்து வருகின்றன பத்திரிகைகள் .மூட நம்பிக்கை விதைக்கும் ஊடகங்களை  வெட்கப்பட வைக்கும் ஹைக்கூ . 

கவிஞர் இளங்கோ வரதராசன் !
காடும் பகலாவுமாய் மகிழ்வு 
பொங்குமென்று ராசி பலன் 
சாலையோரப் பிச்சைக்காரன் !

கடவுளின் பெயரால் நடக்கும் கலவரங்களை கண்டிக்கும் ஹைக்கூ .

கவிஞர் செ. முருகேசன் ! 
விநாயகர் ஊர்வலம் 
மரணத்தை நோக்கி 
பிள்ளையார் !

குடும்பத்தின் ஏழ்மையை , குடும்பத்தலைவனின் பொறுப்பற்ற தன்மையை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் சு .ஆரோக்கிய மேரி !
தாலி கட்டியவனோ எந்நேரமும் 
டாஸ்மாக் தண்ணீரில் 
மனைவியோ கண்ணீரில் !

விலைவாசி உயர்வு ஏழைகளை வாட்டுகிறது .விலைவாசி ஒருவழிப் பாதையாக ஏறுகிறது ஆனால் இறங்குவதே இல்லை .

கவிஞர் பொன் .முரு .காமராசன் .
மனிதநெரிசலில் 
சிக்கி தவிக்கிறது 
விலைவாசி ! 

சாலைகள் போடுவதிலும் ஊழல் நடக்கிறது .அதனால் குறுகிய நாட்களில் சாலை குண்டும் குழியுமாகி விடுகிறது .

கவிஞர் இரா .பாக்யராஜ் !
சின்னச்சின்ன குளங்கள் 
சாலை முழுவதும் 
தொடர் மழை ! 

இந்த நூலின் வெற்றியைப் பறை சாற்றும் ஹைக்கூ .

நூலின் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் !
முயற்சி ஊன்றுகோல் துணையுடன் 
துளித்துளியாய் சாதனை 
கவித்துளி பயணம் !

மொத்தத்தில் மாற்றுத்திறனாளிகள்  மட்டற்ற படைப்பாளிகள் என்பதை பறை சாற்றும் நூல் .தொகுப்பு நூலில் பங்குபெற்ற 37 படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

புதன், 29 ஜனவரி, 2014

இப்படிக்குத் தோழன் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


இப்படிக்குத் தோழன் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015.
செல் 9944391668.  kavignareagalaivan@gmail.com

தனது பள்ளி , கல்லூரி தோழிகளை நினைவு கூர்ந்து வடித்த புதுக்கவிதை நூல் .கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .நூல் ஆசிரியரே பதிப்பாளர் என்பதால் நினைத்தபடி மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார் .புகைப்படங்கள் அட்டைப்பட வடிவமைப்பு 
உள்அச்சு யாவும் மிக நன்று .  சிறப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .

முகநூலில் ஆண் பெண் இருபாலரும் ஏன் ? முன்றாம் பாலான திரு நங்கைகளும் தோழமையோடு  கருத்துக்களைப் பகிர்ந்து வரும் காலம் இது .முக நூலால்  சில தீமைகள் வந்த போதும் ,பல  நன்மைகள் உள்ளன என்பது உண்மை .நட்பின் மேன்மையை உணர்த்தும் நூல் .

தன்னம்பிக்கை எழுத்தாளர் லேனா  தமிழ்வாணன் அவர்களின் அணிந்துரையும் ,காந்தி கிராமியப் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவர் முனைவர் அ .ஜாஹிதா பேகம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன .
.
காகங்கள் ஒற்றுமையாக உள்ளன .மனிதர்களுக்கு ஒற்றுமை இல்லை என்றே பலரும் சொல்லி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் மாற்றி யோசித்து புதுக் கவிதை வடித்துள்ளார் .

ஒரே கடலை மிட்டாயை 
காக்கா கடி கடித்து 
புன்னகையோடு 
பங்கிட்டுக் கொள்ளும் 
நம்மைக் கண்டு 
காக்கைகளும் 
பெறுகின்றன 
தோழமையுணர்வை !

நூல் படிக்கும் வாசகர்களுக்கு குழந்தை காலத்து நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகிறார் .

தாய் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள முடியாததை தோழமையுடன் பகிர்ந்து கொள்ள முடியும் .நட்பிற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் மனம் வரும் .அதனை உணர்த்தும் கவிதை .

வெற்றியைத் 
தொடப் போகும் 
நிலையிலும்  
விட்டுக் கொடுக்கும்
மனப்பாங்கை 
உள்ளிருத்தி 
ஒளிர்கிறது 
தோழமை !

நல்ல தோழமை நம்பிக்கை தரும் .தன்னம்பிக்கை விதைக்கும். என்பதை உணர்த்தும் கவிதை .

எல்லாமே 
வெறுத்துப் போய்
எதுவுமே 
வேண்டாமென 
உதறி நடக்கையிலும் 
உடன் வந்து 
ஒட்டிக் கொள்கிறது 
நீ தந்த நம்பிக்கை !

75 வது என் அப்பாவை சில நாட்களாக காணவில்லை தேடாத இடமே இல்லை. மனம் நொந்து நொறுங்கி எழுத்தையே விட்டு விடுவோம் என்று எண்ணியபோது, தமிழ்த் தேனீ முனைவர்  
இரா .மோகன் அவர்கள்  வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் உள்ளிட்ட நண்பர்கள பலர் தந்த ஆறுதலும், சிறந்த சிந்தனையாளர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சொன்ன ஒரு வரியும் தான் என்னை திரும்ப இயங்க வைத்தது . " கஷ்டம் இல்லாதவங்க யாருமே இல்லை .உங்க கஷ்டத்திற்காக   உடைந்து விடாதீர்கள் ." கவலையால் தொய்வுரும் அனைவருக்கும் இந்த வரி ஆறுதல் தரும் .தோழமைக்கு மிகப் பெரிய ஆற்றல் உண்டு என்பதை உணர்த்தும் உன்னத நூல் . 

கல்லூரி காலங்களில் தோழியோடு நட்பாகப் பழகுவதை நண்பர்கள் 
சிலர்  நட்புதான் என்றாலும் அதையும் தாண்டி ஏதோ உண்டு என்று கேலி பேசுவது உண்டு .அதற்கு விடை சொல்லும் கவிதை நன்று .

உனக்கு நான்தான் 
பெண் பார்ப்பேன் என்கிற 
உன் குறு செய்தியை 
பார்த்த பின்புதான் 
விளங்கிக் கொண்டான் 
என் நண்பன் 
நம் தோழமையை !

ஆண் பெண் பேதமின்றி வளர்ந்த , வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ,படைப்பாளிகளுடன் எனக்கு தூய நட்பு உண்டு .குறிப்பாக பெண்பாலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர், பேராசிரியர் ,சிறந்த ஆய்வாளர் , நூல் விமர்சகர் திருமதி சு .சந்திரா அவர்கள்  , சவூதி அரேபியா ,அமெரிக்கா,ஜப்பான் என்று விமானத்தில் பறந்து கொண்டே இருக்கும்  எழுத்தாளர் ,கவிஞர் ,நூல் விமர்சகர் திருமதி விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் ,குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள  நிலக்கோட்டை என்று பயணமாகி வரும் வளர்ந்து வரும் கவிஞர் திருமதி யாத்விகா அவர்கள் .இவர்கள் எல்லாம் எனக்கு குடும்ப நண்பர்கள். ஆரோக்கியமான இலக்கியத் தோழமைகளை நினைவு கொள்ள  வைத்தது இந்த நூல் .

நம்பிக்கை வாசல் மாத இதழ் ஆசிரியர்  நூல் ஆசிரியர் , இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

இலக்கியச்சோலை மாத இதழின் முப்பெரும் விழா அழைப்பிதழ் !

இலக்கியச்சோலை மாத    இதழின் முப்பெரும் விழா  அழைப்பிதழ் !

இலக்கியச்சோலை திங்கள் இதழ்  மதுரை சிறப்பிதழ் வெளியீடு !

கவிதாயினி யாத்விகா எழுதிய உனக்காகவே மயங்குகிறேன் கவிதை நூல்  வெளியீடு !

கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் சிறப்புக் கவியரங்கம் !

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இனிய நண்பர் மருத்துவர்,கவிஞர் சரவணன்

அப்போலோ மருத்துவமனை மதுரை விமான நிலையக் கிளையில் பணி புரிந்த இனிய நண்பர் மருத்துவர்,கவிஞர் சரவணன் கேரளாவில் உள்ள கொட்டியம் ஹோலி ஏஞ்சல் மருத்துவமனைக்கு பணியில் சேர விடைபெற்று சென்றபோது கவிஞர் இரா .இரவி விவேகானந்தர் நூல் வழங்கி வழி அனுப்பி வைத்தார் உடன் நண்பர்கள் .மத்திய காவலர் நல்லசிவம் ,அப்போலோ கார்த்திக் ,ஜி. ஆர் .டி வெங்கடேஷ் ,காத்திக் ராஜா ,அன்பு ,அப்போலோ சுதாகர் உள்ளனர் . 

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்து மடல் .

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்து மடல் .

இனிய நண்பரும் ,தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதி வரும் எழுத்தாளரும் ,ஹைக்கூ கவிஞருமான பேராசிரியர்
 க .இராமச்சந்திரன் அவர்களின் மகன் செல்வன்  இரா .கார்த்திக்  -- செல்வி  விஷ்ணுப்ரியா  திருமண விழாவிற்கு முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்து மடல் .

-- 

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அகவிழி பார்வையற்றோர் விடுதி 8- ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

அகவிழி பார்வையற்றோர் விடுதி 8- ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் 

அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா !

அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா !

அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா நடைபெற்றது .தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. தலைமை அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன் M.A., கவிஞர் இரா .இரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் .விடுதி மாணவ மாணவியர் இசை நிகழ்ச்சி நடந்தது .விடுதி மாணவர் A. முருகசாமி B.A.B.E.D.நன்றி கூறினார் .

முது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும்

முது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில்   ஞாயிறு தோறும் எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் சிந்தனைத் தொடர் படித்து மகிழுங்கள்
-- 
http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16119533&code=3308
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பனித் துளியில் பனைமரம் ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பனித் துளியில் பனைமரம் !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! poetramesh@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர் 
சலவன் பேட்டை 
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.

பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை இயற்கை  இயற்கை தவிர வேறில்லை என்று முழுக்க முழுக்க இயற்கையை பாடு பொருளாக்கி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .

ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் ந .க. துறைவன் அணிந்துரை மிக நன்று .படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும் வகையில் வடிப்பது ஹைக்கூ உத்திகளில் ஒன்று .நூலில் ஏராளமான காட்சிப் படுத்தும் ஹைக்கூ உள்ளன .

பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

பூக்களைப்  பார்த்தும் 
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி  !

படிப்பாளி உணர்ந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ .இந்நூலின் தலைப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

புல்லில் பனித்துளி 
பனித்துளியில் 
பனைமரம் !

ஆமை என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது அதன் ஓடு.ஆமையின்  ஓடு அதற்கு நிழல் தரும் கூடு .தன் நிழலை தானே பயன்படுத்திக் கொள்ளும் கட்சியைப் பார்த்து வடித்த ஹைக்கூ .

கொல்லும் கோடை 
நிழலில் இளைப்பாறும் 
ஆமைகள் !

ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நினைக்க வைக்கும் யுத்தியும் ஹைகூவில் உண்டு . அந்த வகையில் வடித்த ஹைக்கூ ஒன்று .

பூக்களுக்கு அச்சம் 
நெருங்கி வருகின்றன 
வண்டுகள் !

சோகத்திலும் சுகம் காணலாம் .பானை உடைந்து விட்டதே என்று வருந்துவது விடுத்து அதையும், கவிதைக்கண்ணுடன் ரசிக்கும் ரசனை நன்று .

குயவனின் 
உடைந்த பானை 
பிறை நிலவு !

ரோஜாவை பாடாத கவிஞரே இல்லை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் ரோஜா.நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்கள் ரோஜாவைப் பார்க்கும் பார்வை தனி விதம் .புது ரகம் .

சிரிக்கும் ரோஜாவும் 
கண்ணீர் வடிக்கும் 
பனித்துளி !

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள் .ஆனால் விவசாயிகள் இன்று  மகிழ்வாக இல்லை .அண்டை மாநிலங்கள் தமிழக விவசாயிகளை மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன .நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பது இல்லை தமிழக  விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் .சிலர் மனம் வெறுத்து தற்கொலையும் புரிகின்றனர் .விவசாயிகளின் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .என்னதான் இயற்கையை பற்றி பாடினாலும் பிரச்சனைப  பற்றிப் பாடும் போது வாசகர் மனதில் அதிர்வுகள் அதிகம் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு .

உணவின்றி விவசாயி 
வயிறு பெருத்திருக்கிறது 
காவல் பொம்மைக்கு !  

பறவைகளின் சோகத்தையும் ஹைக்கூ கவிதையில் உணர்த்தி உள்ளார் .

கூடு திரும்பவில்லை 
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை ! 

இந்த ஹைக்கூ படிக்கும்போது நம் வீட்டில் இருந்து சென்ற வீடு திரும்பாத உறவை நினைவுப் படுத்தும் .ஒரு ஹைக்கூவை படைப்பாளி மனதில் தோன்றியது போக வாசகர்கள் தனக்குத் தோன்றும் பல பொருள்களில் பொருள் கொள்ளலாம் .ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு .

நிலாவைப் பாடாத கவிஞரும் ஒரு கவிஞரா ? என்பார்கள் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களும் நிலாவைப் பாடி உள்ளார் .

புள்ளிகளை வைத்துவிட்டு 
கோலம் போடாமல் தவிக்கிறாள் 
நிலவுப்பெண் !

நிலா நிலா ஓடி வா ! மல்லிகைப் பூ கொண்டு வா ! என்ற பாடல் யாவரும் அறிந்த ஒன்று .அதையே மாற்றி சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .

எத்தனை பேருக்கு 
மல்லிகை கொண்டு வரும் 
ஒற்றை நிலவு !

இயற்கையை ரசிப்பது ஒரு கலை .அந்தக் கலை கைவரப்
பட்டவர்களுக்கு கவலை காணாமல் போகும் .வாழ்க்கை இனிக்கும்.நோய்கள் வருவதில்லை . மின்மினி ரசிப்பதும் சுகமான அனுபவம் 

யார் அணைப்பார்கள் 
இரவில் ஒளிரும் 
மின்மினி !

இலைகள் உதிர்ந்த மரம் பார்த்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .

வேண்டுதலின்றி 
மரங்களும் மொட்டை 
இலையுதிர் காலம் !

உற்று நோக்கினால் ஹைக்கூ வடிக்கலாம் என்பதை உணர்த்திடும் நூல் .இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார்கள் . தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி படிப்பாளி  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் 

வியாழன், 23 ஜனவரி, 2014

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்திற்கு நூலைஅனுப்பலாம் .

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்திற்கு நூலைஅனுப்பலாம் .ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்திற்கு நூலைஅனுப்பலாம் .


ஸ்ரீவில்லிபுத்தூர் திரு .ரத்தினவேல் அவர்களுக்கு என்னுடைய நூல்களை அனுப்பி இருந்தேன் .அவர் படித்து விட்டு முக நூலில் அறிமுகம் செய்து விட்டு .அந்த நூல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் கொடுத்து உள்ளார் .அவர்கள் நூலை பெற்றுக் கொண்டு ஒப்புதல் நன்றி மடலும் ,சான்றிதழும் அனுப்பி உள்ளனர் .மற்ற படைப்பாளிகளும் நூலை நூலகத்திற்கு அனுப்பலாம் .

விழிகள் சுமந்த கனவுகள் ! நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விழிகள் சுமந்த கனவுகள் !

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
 
இனிய நந்தவனம் பதிப்பகம்  17.பாய்க்காரத் தெரு ,உறையூர் ,திருச்சி 620003.விலை ரூபாய் 50.nandavanam10@gmail.com

இனிய நந்தவனம் பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடாக வந்துள்ளது .இனிய நந்தவனம்  இதழ் ஆசிரியர் இனிய நண்பர் சந்திர சேகர் மதுரையில் சந்தித்து இந்த நூலை வழங்கினார் .நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்கள் சகல கலா வல்லவர் .ஓவியர், பாடகர் ,கவிஞர் என பன்முக ஆற்றல் மிக்கவர் .மதுரை மேலூர் நாகப்பன் சிவல்பட்டி கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் சென்று வாழ்பவர் .

இனிய நண்பர் சந்திரசேகர் அவர்களின் பதிப்புரை ,இலக்கியப் போராளி பாரதி வசந்தன் ,சிங்கப்பூர் புதுமைத் தேனீ  மா .அன்பழகன் ,
திரு .மா .காளிதாஸ் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கான வரவேற்பு தோரணங்கள் . இலக்கியம் பல் வகை உண்டு .அதில் கவிதை சிறந்த வகை .கவிதையிலும்  காதல் கவிதை மிகச் சிறந்த வகை .காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர் அனைவரின் மனதில் கற்கண்டாக இனிக்கும் .அன்றும் இன்றும் இன்றும் காதல் என்பது இனிமை இளமை புதுமை .

காதல் கவிதையிலும் தெரு விளக்கு எரியாத பிரச்சனையையும் சேர்த்து எழுதி உள்ள புதுக்கவிதை நன்று .

எத்தனையோ
வருடங்கள் - எரியாத 
எங்கள் 
தெருவிளக்கு ..
இன்றிலிருந்து எரிகின்றது ..
நீ 
நடத்து போனது 
வீதி விளக்கல்லவா ...

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு .என்பதை உணர்த்திடும் கவிதை .

மண்ணிலிருந்து 
விண்ணைப் பார்த்தேன் -
நட்சத்திரங்கள் 
தெரிந்தன .

விண்ணிலிருந்து 
மண்ணைப் பார்த்தேன் -
உன் பாதச் சுவடுகள் 
நட்சத்திரங்களாகவே 
தெரிகின்றன !

தோழி பின் காதலியாவதும் உண்டு .தோழியாக மட்டும் தொடர்வதும் உண்டு .தோழி காதலி  வேறுபாடு சொல்லும் கவிதை .

மௌனமாக  
இருக்கிறவள் 
காதலியாகிறாள் .

மௌனத்தையே     
வார்தையாய்த் 
தருகிறவள் 
தோழியாகிறாள் !

கவிதைகளுக்கு மிகப் பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ளார்.காரணம் கவிஞர் மட்டுமல்ல ஓவியர் என்பதால் அனைத்துக் கவிதைக்கும் அவரே ஓவியமும் வரைந்துள்ளார்.இந்த நூலில் கவிதை சிறப்பா ? ஓவியம் சிறப்பா ? பட்டிமன்றம் நடத்தலாம். நடத்தினால் தீர்ப்பு எப்படி வந்தாலும் வெற்றி நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்களுக்குதான் .
கவலையில் இருக்கும் தலைவனுக்கு தலைவியின் ஆறுதல் சிரிப்பு இதம் தரும் என்பது உண்மை .அதனை உணர்ந்து வடித்த கவிதை .

நான் அழுது கொண்டிருந்த 
நேரத்தில் - உன் 
சிரிப்பைக் 
கொடுத்து 
சந்தோசப் படுத்தியதில் 
உணர்ந்தேன் 
நமக்கான  நட்பை !

தலைவியின் அன்பே தலைவனை வழிநடத்தும் .புயலை தென்றாலாக்கும்  ஆற்றல் .தலைவியின்   அன்புக்கு உண்டு .

நீ தரும் 
அன்பில்தான் 
நட்பென்னும் - நந்தவனங்களில் 
நிறைய வகைப் பூக்களாகவே
பூக்கின்றன !  
 
கண்டதும் காதலா ? என்று பலர் கேலி பேசுவது உண்டு .ஆனால் பலரின் காதல் இன்றும் கண்டதும்தான் மலர்கின்றது என்பதும் உண்மை .அந்த உண்மை உணர்த்தும் கவிதைகள் நிறைய உள்ளன. . ஒரு பெண் அவன் காதலனுக்கு உலக அழகியை விட அழகியாகவே தெரியும் .இவளையா ? காதலித்தான் என்று சிலர் ஏளனம் செய்தால் கூட  அவனுக்கு அவன் கண்களுக்கு அவள் பேரழகிதான் .

உன் புகைப்படத்தை 
பார்த்தால் 
உலக தேவதையே 
ஒப்பனையைக்  
குறைத்துக் கொள்வாள் 
அறிவாயோ நீ !

இவருடைய காதலியான தோழியின்   பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அதற்கான விடை கவிதையில் உள்ளது .

வாசித்துப் பார்த்த போதுதான் 
உணர்ந்து கொள்ள முடிந்தது 
உன் பெயரும் 
என் பெயரும் -
நட்பாய் 
சேர்ந்திருப்பதை !

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி இவரது காதலி பெயர் உமா .உமாபதியில் உமா அடக்கம் .

காதலன் சிந்தனை வித்தியாசமாக இருக்கும் .மற்றவர்களுக்கு விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் .அந்த வகையில் வடித்த புதுக்கவிதை .

நகத்தை வெட்டி விடாதே !
உன் நகம் கடிப்பதென்றால் 
அவ்வளவு ஆசை எனக்கு !

விழிகள் சுமந்த கனவுகளை கவிதை வரிகளாக்கி படிக்கும் வாசகர்களுக்கு விழிகளுக்கும் சிந்தைக்கும் கவிவிருந்து வைத்துள்ளார் .காதல் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் வயது குறைந்து இன்பம் பிறக்கும் .இளமையாக்கி விடும் என்பது உண்மை . 


நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்கள் பரபரப்பான சிங்கப்பூரில் வாழ்ந்தபோதும் தாய்மொழி தமிழ் மொழி  மறக்காமல் கவிதை வடித்து நூலாக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .காதல் கவிதையோடு நின்று விடாமல் அடுத்து நூலில் உலகத்  தமிழர்களின் பிரச்சனைகளை எழுதி நூலாக்க வேண்டுகிறேன் .

.

புதன், 22 ஜனவரி, 2014

ஒற்றை எறும்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஒற்றை எறும்பு !

நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

எசன்சியல் பப்ளிகேசன் 
167ஏ.காவலர் கந்தசாமி வீதி ,முதல் தளம் ,ஒலம்பஸ்,இராமநாதபுரம், கோயம்புத்தூர் .641 045.விலை ரூபாய் 33.

மின் அஞ்சல் essential.puplications@yahoo.com
தொலைபேசி 0422-2323228.  

 நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி அவர்கள் 25  ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கி வரும் படைப்பாளி .1993 ஆம் ஆண்டு 'ஹைக்கூ கவிதைகள் ' என்ற முதல் ஹைக்கூ நூல்  எழுதியவர். தற்போது 21 ஆண்டுகள்  கழித்து இரண்டாவது ஹைக்கூ நூலாக ஒற்றை எறும்பு எழுதியுள்ளார் .ஆன்மிகம், ஆரோக்கியம், அறிவியல் என 93  நூல்கள் எழுதி இருந்த போதும் ஹைக்கூ நூலிற்கு தனிச்சிறப்பு உண்டு .ஹைக்கூ நூலின் மூலமே பரவலாக அறியப்பட்டுள்ளார் .கோழி அடை காப்பதுபோல  அடை  காத்து ஹைக்கூ கவிதை வடித்துள்ளார் .ஹைக்கூ நூலில் தனி முத்திரை நன்கு பதித்து உள்ளார் .பாராட்டுக்கள்
.
தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள்தான் இந்த நூலை எனக்கு அனுப்பி இருந்தார்கள் .அவரின் அணிந்துரை மயில் இறகால் வருடுவது போன்ற பாராட்டுரை மிக நன்று .பேராசிரியர் முனைவர் எஸ் .ஸ்ரீ குமார் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .

ஹைக்கூ என்பது கவிஞன் உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கு உணர்த்துவது .சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உன்னத வடிவம் ஹைக்கூ .படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் வடிவம் ஹைக்கூ .குறுகிய மூன்று வரிகளுக்குள்  பெரிய பெரிய கருத்துக்களை விதை   விதைக்கும் வித்தைதான் ஹைக்கூ வல்லமை  மிக்கது ஹைக்கூ 

ஹைக்கூ கவிதை எழுதுவதில் காட்சிப் படுத்துவது ஒருவித நுட்பம். அந்த வகையில் படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும ஹைக்கூ  நன்று .

ஜன்னலுக்கு வெளியே 
இதமாய் மழைச்சாரல் 
ஒரு கோப்பைத் தேநீர் !

இந்த ஹைக்கூ படித்து முடித்தவுடன் மழை நாளில் தேநீர் குடித்த நினைவு மலர்ந்து விடும் .மழையும் தேநீரும் காட்சிக்கு வந்துவிடும். ஹைக்கூ கவிதைக்கு எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம். மூன்று வரிகள், இரண்டு காட்சி ,ஒரு வியப்பு 

நம் நாடு விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவலம் .தொடர்ந்து அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்றன .நாம் யாரும் விவசாயிக்காக வருந்துவதில்லை.இயற்கை விவசாயிக்காக கவலைப் படுகின்றது என்று உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வறுமை விவசாயி
கவலையில் வெடித்தது 
நிலத்தின் முகம் !

இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் தமிழகக் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களையும் மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று .அந்த அளவிற்கு தமிழகக் கவிஞர்கள் இயற்கை பற்றி அற்புதமாக ஹைக்கூ வடித்து வருகின்றனர் .

அதிகாலை நேரம் 
பூக்களுக்கு வியர்க்கிறது 
மரணபயம் !

ஒழுக்கம் பற்றி போதனைகள் செய்து விட்டு ஒழுக்கம் கெட்டு ,நெறி கெட்டு சிறை சென்று திரும்பி உள்ள சாமியார்கள் பற்றிய நினைவை எள்ளல் சுவையுடன் உணர்த்துக் ஹைக்கூ .

ஊரும் உலகமும் 
விழுந்து விழுந்து  சிரிக்கிறது 
சிறைக்குள் ஒரு துறவி !

உலக அளவில் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று மார் தட்டிய காலம் ஒன்று அன்று இருந்தது .ஆனால் இன்று வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் அவலம் உள்ளது .உலக அரங்கில் மக்களாட்சி முறைக்கு தலைகுனிவைத் தந்துள்ளது .
அதனை உணர்த்தும ஹைக்கூ .

தற்கொலை செய்து கொள்ள 
வரிசையில் காத்திருக்கும் மக்கள் 
வாக்குச்சாவடி ! 

கொள்கைக்காக  கூட்டணி வைத்த காலம் அன்று இருந்தது .ஆனால் இன்று கோடிகளுக்காகவே  கூட்டணி  வைக்கும் காலமானது. அதனை உணர்த்தும ஹைக்கூ .

ஒவ்வொரு தேர்தலும் 
கட்சிகளும் காட்சிகளும் மாறுகின்றன 
யாருக்கும் வெட்கமில்லை !

இல்லங்களில் இதுபோன்ற காட்சியை பலரும் பார்த்து இருக்கக் கூடும் .இன்றைய சில குழந்தைகளின் குணத்தைக் காட்டும் ஹைக்கூ .

தாலாட்டு பாடிய 
அம்மா தூங்கியே விட்டாள்   
விழித்திருக்கும் குழந்தை !

சில மனிதர்கள் வாழ்கையில் பணம் பணம்  அலைந்து பாசம் மறந்து தன் குழந்தைகளை சந்திக்காமல் சம்பாதிக்கும் பலர் உண்டு .

எவ்வளவு முயன்றும் 
சந்திக்க முடியவில்லை 
சாப்ட்வேர் அப்பா !

பாசத்திற்காக ஏங்கும் கணினிப் பொறியாளரின் குழந்தையின் உணர்வை உணர்த்துகின்றார் .வருங்காலங்களில் ஆங்கிலச்சொற்கள்  தவிர்த்து எழுதுங்கள் .

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் இன்னும் ஒழிந்த பாடில்லை. எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .

முப்பதாயிரம் ரொக்கம் 
இரு நூறு கிராம் தங்கம் 
நவீன பிச்சைக்காரர்கள் !

சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கு ஹைக்கூ நன்று .

பூமித்தாய்க்கு 
பச்சை துரோகம் 
பிளாஸ்டிக் !

மொத்தத்தில் இந்த ஒற்றை எறும்பு நூல் படித்து முடித்ததும் ஹைக்கூ கவிதைகள் பற்றிய நினைவு எறும்புகள் போல சாரை சாரையாக வந்து கொண்டே இருக்கும் .நூல் ஆசிரியர் கவிஞர் 
ஆர் .வி .பதி அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து ஹைக்கூ கவிதை நூல் வெளியிட வாழ்த்துக்கள் .

-- 

.

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 வது மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் ! .

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 வது  மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் ! . 

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 வது மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் ! .

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 வது  மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் ! . 


தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது . 
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .இராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்துத் தொகுப்புரையாற்றினார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை உரையாற்றினார் .100 வது மாதசிறப்பு  விழா என்பதால் ,மாணவ மாணவியரின் மாறு வேடப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி நடந்தது .

மாறுவேடப் போட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் ,காந்தியடிகள், கிருஷ்ணன் ,இராதை ,தேவதை, சீமாட்டி வேடம் அணிந்து வந்தனர். பங்குப் பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெகணேசன் செய்து இருந்தார். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,விஸ்வநாதன் , வைர காந்தன் ஆகியோர் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,ஆ .முத்துக் கிருஷ்ணன் ,G.ராமமூர்த்தி , C.ராஜேந்திரன், சரவணன் ,ஜானகி ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

பட்டிமன்றப் புகழ் கவிஞர் மூரா " முயலும் ஆமையும்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .குழந்தைகளிடம் அன்பு செலுத்த வேண்டிய அவசியத்தையும் ,எதிர்மறை சொற்களைப் பயன்படுத்தாமல் ,நேர்மறை சொற்களையே பயன்படுத்தி ஊக்கம் தந்து வளர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்  கூறி தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .மாணவ மாணவியரின் பெற்றோர்களும்,  சம்பத் ,கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .திரு. தினேஷ் நன்றி  கூறினார்  .
-- 

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...