ஒற்றை எறும்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஒற்றை எறும்பு !

நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

எசன்சியல் பப்ளிகேசன் 
167ஏ.காவலர் கந்தசாமி வீதி ,முதல் தளம் ,ஒலம்பஸ்,இராமநாதபுரம், கோயம்புத்தூர் .641 045.விலை ரூபாய் 33.

மின் அஞ்சல் essential.puplications@yahoo.com
தொலைபேசி 0422-2323228.  

 நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி அவர்கள் 25  ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கி வரும் படைப்பாளி .1993 ஆம் ஆண்டு 'ஹைக்கூ கவிதைகள் ' என்ற முதல் ஹைக்கூ நூல்  எழுதியவர். தற்போது 21 ஆண்டுகள்  கழித்து இரண்டாவது ஹைக்கூ நூலாக ஒற்றை எறும்பு எழுதியுள்ளார் .ஆன்மிகம், ஆரோக்கியம், அறிவியல் என 93  நூல்கள் எழுதி இருந்த போதும் ஹைக்கூ நூலிற்கு தனிச்சிறப்பு உண்டு .ஹைக்கூ நூலின் மூலமே பரவலாக அறியப்பட்டுள்ளார் .கோழி அடை காப்பதுபோல  அடை  காத்து ஹைக்கூ கவிதை வடித்துள்ளார் .ஹைக்கூ நூலில் தனி முத்திரை நன்கு பதித்து உள்ளார் .பாராட்டுக்கள்
.
தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள்தான் இந்த நூலை எனக்கு அனுப்பி இருந்தார்கள் .அவரின் அணிந்துரை மயில் இறகால் வருடுவது போன்ற பாராட்டுரை மிக நன்று .பேராசிரியர் முனைவர் எஸ் .ஸ்ரீ குமார் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .

ஹைக்கூ என்பது கவிஞன் உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கு உணர்த்துவது .சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உன்னத வடிவம் ஹைக்கூ .படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் வடிவம் ஹைக்கூ .குறுகிய மூன்று வரிகளுக்குள்  பெரிய பெரிய கருத்துக்களை விதை   விதைக்கும் வித்தைதான் ஹைக்கூ வல்லமை  மிக்கது ஹைக்கூ 

ஹைக்கூ கவிதை எழுதுவதில் காட்சிப் படுத்துவது ஒருவித நுட்பம். அந்த வகையில் படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும ஹைக்கூ  நன்று .

ஜன்னலுக்கு வெளியே 
இதமாய் மழைச்சாரல் 
ஒரு கோப்பைத் தேநீர் !

இந்த ஹைக்கூ படித்து முடித்தவுடன் மழை நாளில் தேநீர் குடித்த நினைவு மலர்ந்து விடும் .மழையும் தேநீரும் காட்சிக்கு வந்துவிடும். ஹைக்கூ கவிதைக்கு எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம். மூன்று வரிகள், இரண்டு காட்சி ,ஒரு வியப்பு 

நம் நாடு விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவலம் .தொடர்ந்து அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்றன .நாம் யாரும் விவசாயிக்காக வருந்துவதில்லை.இயற்கை விவசாயிக்காக கவலைப் படுகின்றது என்று உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வறுமை விவசாயி
கவலையில் வெடித்தது 
நிலத்தின் முகம் !

இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் தமிழகக் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களையும் மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று .அந்த அளவிற்கு தமிழகக் கவிஞர்கள் இயற்கை பற்றி அற்புதமாக ஹைக்கூ வடித்து வருகின்றனர் .

அதிகாலை நேரம் 
பூக்களுக்கு வியர்க்கிறது 
மரணபயம் !

ஒழுக்கம் பற்றி போதனைகள் செய்து விட்டு ஒழுக்கம் கெட்டு ,நெறி கெட்டு சிறை சென்று திரும்பி உள்ள சாமியார்கள் பற்றிய நினைவை எள்ளல் சுவையுடன் உணர்த்துக் ஹைக்கூ .

ஊரும் உலகமும் 
விழுந்து விழுந்து  சிரிக்கிறது 
சிறைக்குள் ஒரு துறவி !

உலக அளவில் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று மார் தட்டிய காலம் ஒன்று அன்று இருந்தது .ஆனால் இன்று வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் அவலம் உள்ளது .உலக அரங்கில் மக்களாட்சி முறைக்கு தலைகுனிவைத் தந்துள்ளது .
அதனை உணர்த்தும ஹைக்கூ .

தற்கொலை செய்து கொள்ள 
வரிசையில் காத்திருக்கும் மக்கள் 
வாக்குச்சாவடி ! 

கொள்கைக்காக  கூட்டணி வைத்த காலம் அன்று இருந்தது .ஆனால் இன்று கோடிகளுக்காகவே  கூட்டணி  வைக்கும் காலமானது. அதனை உணர்த்தும ஹைக்கூ .

ஒவ்வொரு தேர்தலும் 
கட்சிகளும் காட்சிகளும் மாறுகின்றன 
யாருக்கும் வெட்கமில்லை !

இல்லங்களில் இதுபோன்ற காட்சியை பலரும் பார்த்து இருக்கக் கூடும் .இன்றைய சில குழந்தைகளின் குணத்தைக் காட்டும் ஹைக்கூ .

தாலாட்டு பாடிய 
அம்மா தூங்கியே விட்டாள்   
விழித்திருக்கும் குழந்தை !

சில மனிதர்கள் வாழ்கையில் பணம் பணம்  அலைந்து பாசம் மறந்து தன் குழந்தைகளை சந்திக்காமல் சம்பாதிக்கும் பலர் உண்டு .

எவ்வளவு முயன்றும் 
சந்திக்க முடியவில்லை 
சாப்ட்வேர் அப்பா !

பாசத்திற்காக ஏங்கும் கணினிப் பொறியாளரின் குழந்தையின் உணர்வை உணர்த்துகின்றார் .வருங்காலங்களில் ஆங்கிலச்சொற்கள்  தவிர்த்து எழுதுங்கள் .

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் இன்னும் ஒழிந்த பாடில்லை. எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .

முப்பதாயிரம் ரொக்கம் 
இரு நூறு கிராம் தங்கம் 
நவீன பிச்சைக்காரர்கள் !

சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கு ஹைக்கூ நன்று .

பூமித்தாய்க்கு 
பச்சை துரோகம் 
பிளாஸ்டிக் !

மொத்தத்தில் இந்த ஒற்றை எறும்பு நூல் படித்து முடித்ததும் ஹைக்கூ கவிதைகள் பற்றிய நினைவு எறும்புகள் போல சாரை சாரையாக வந்து கொண்டே இருக்கும் .நூல் ஆசிரியர் கவிஞர் 
ஆர் .வி .பதி அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து ஹைக்கூ கவிதை நூல் வெளியிட வாழ்த்துக்கள் .

-- 

.

கருத்துகள்