நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


நம்பிக்கையுடன் ..பா .விஜய் .
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கற்பகம் புத்தகாலயம் 
4/2,சுந்தரம் தெரு ,தியாகராய நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 100.

இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் .அவர்கள் ,144 தடை உத்தரவு கேள்விப் பட்டு இருக்கிறோம் .இந்த நூலில் 144 பக்கங்களில் மடை திறந்த வெள்ளமாக வாழ்வியல் வெற்றி மந்திரங்களை வைர வரிகளால் செதுக்கி உள்ளார் .
ஒவ்வொரு பூக்களின் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .மதுரை வரும்போதெல்லாம் என்னை சந்திக்கும் இனியவர் .இந்த நூலை எனக்கு பரிந்துரை செய்தவர் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் .இன்று காலையில்தான் சொன்னார்கள் உடன் சென்று வாங்கி வந்து படித்தேன் வியந்தேன் .இவ்வளவு நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று வருந்தினேன் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் .நல்ல சிந்தனையாளர் .புதிய தலைமுறை இதழில் தொடர் எழுதி வரும் எழுத்தாளர் .

.சின்னச் சின்ன வரிகளின் மூலம் சிந்தையை செதுக்கும் விதமாக வடித்துள்ளார் .
இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .சிந்தைனையாளர் வெ .இறையன்பு சொல்வார்கள் " நாம் புரட்டுவது புத்தகம் அல்ல நம்மை  புரட்டுவதே புத்தகம் ."அந்த வகை நூல்தான் இது .மிக வித்தியாசமாக உள்ளது .நாட்க்குறிப்பு போன்ற வடிவமைப்பு .ஒரே கல்லில் மூன்று  மாங்காய் எனபது போல ஒரே நூலில் வரலாற்று பொது அறிவு விடைகள் ,சிந்தனை மிகுந்த  வைர வரிகள் ,அறிஞர்களின் பொன்மொழிகள் மூன்றும் உள்ளது .படித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல து .பத்திரமாக வைத்து  இருந்து மனதில் சோர்வு வரும்போது படித்தால் சாதனை புரிய உதவும் சாதனை நூல் .

நூலில் உள்ள அனைத்தும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .அல்ல அல்ல உங்கள்  சாதனைக்கு .

கிழமைகள் பற்றி திங்கள் ,செவ்வாய் ,புதன் ,வியாழன் ,வெள்ளி ,சனி ,ஞாயிறு என்றுதான் எல்லோருக்கும் தெரியும் .ஆனால் இவரது விளக்கம் பாருங்கள் மிக நுட்பம் .

திங்கள் --- திட்டம் 
செவ்வாய்---- செயல் 
புதன் --- புத்துணர்ச்சி 
வியாழன் ---விடா முயற்சி 
வெள்ளி ---- வெற்றி 
சனி ---- சாதனை 
ஞாயிறு ---சிந்தனை .

கிழமைகளின் முதல் எழுத்தை வைத்து தன்முன்னேற்றச் சொற்களை விதைத்து வாழ்வில் நம்பிக்கை விதைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .

பஞ்சாங்கம் பார்த்து இது ராகு காலம் ,எம கண்டம் என்று  சொல்லி பொன்னான நேரத்தை வீணடிக்கும் மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக உள்ள வைர வரிகள் இதோ .
நல்ல நேரம் ---24 மணி நேரமும் 
ராகு காலம் -- உழைக்கத நேரம் 
கேட்ட நேரம் -- தீயன தோன்றும் நேரம் 

கேள்வியின் மூலம் வாசகனை சிந்திக்க வைக்கிறார் .

நகங்கள் கூட 
நாளுக்கு 
0.01. அங்குலம் 
வளர்கிறது 
நாம் ?

நாம் உடலால் வளரும் வளர்ச்சி வளர்ச்சி அல்ல. உள்ளத்தால் வளரும் வளர்ச்சியை 
குறிப்பிடுகிறார் .இந்த கேள்வியை உலகில் பிறந்தா ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே   கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி .

அருவியின் வீழ்ச்சி 
நதியின் எழுச்சியாகிறது !
வெறிகொள் ! வெல்வதற்கு !
திட்டமிடு திட்டமிடா உழைப்பு 
பாலைவனத்தில் ஆழ்குழாய்த்திட்டம் !

திட்டமிடுதலின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .
நம்பிக்கை வரிகளின் மூலம் படிக்கும் வாசகரின் நரம்பில் முறுக்கு ஏற்றி ,நாடியை துடிக்க வைத்து ,செல்களை  வெற்றியை நோக்கிய செயல்களில் ஈடுபடும் வண்ணம் எழுதி உள்ளார் .தமிழ்மொழி எழுத்துக்கள்  வலிமை மிக்கது என்பதை உணர்த்தி உள்ளார் .

விமர்சனத்தில் எதை எழுதுவது எதை விடுவது என்று முடிவு எடுக்க முடியாதபடி நூலில் உள்ள அனைத்தும் அருமை .பெருமை .

மகிழ்ச்சியாய்ச் சிரி !
கவலைகளைப் பிய்த்துக் 
காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! 

நீ அடுத்தவர் மீது கொண்ட 
நம்பிக்கை என்பது காசோலை 
நீ உன் மீது கொண்ட 
நம்பிக்கை என்பது ஏ .டி .எம் .அட்டை !

சரியான விமர்சனத்தை 
இதய மேடையில் ஏற்று !
தவறான விமர்சனத்தைக் 
குப்பைக் கூடையில் கொட்டு!

தவறான விமர்சனத்தை பொருட்படுத்தி காலத்தை ,சக்தியை விரயம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார் .

ஆடுகளம் 
அடிச்சுவடு  படாமல் இருந்தால் 
புல்  முளைத்து விடும் ! 

மனிதன் உழைக்காமல் இருந்தால் தவறு என்பதை உணர்த்துகின்றார் .
தமிழர்க்கு வீரம் அழகு கோழையாய்  வாழ்வது இழுக்கு .

பேடிகள் வாழ்வதில்லை !
உயிரோடு சமாதியாகிறார்கள் !
லட்சியவாதிகள் முடிவதில்லை !
சரித்திரங்களாய் வாழ்கிறார்கள் .!

கைக்குட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது 
கண்ணீர் துடைக்க அல்ல !
வேர்வை துடைக்க !

கவலைகொள்ளாதீர் !என்று சொல்லி உழைப்பின் மேன்மையை மென்மையாக விளக்கி உள்ளார் .

கர்வம் வை கிராம் கணக்கில் !
நம்பிக்கை வை கிலோ கணக்கில் !
ஒவ்வொரு விடியலையும் 
நம்பிக்கையுடன் எதிர் கொள் !
ஒவ்வொரு இரவிலும் 
நம்பிக்கையுடன் தூங்கப் போ !

.விழி !
சோர்வைக் கிழி !
உன்னைப் பிழி !
தெரியும் ஒளி !

பாட்டுகோட்டையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல தூங்காதே  என்ற கருத்தை எழுதி உள்ளார் .திருக்குறள், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பல படித்து அறிந்து ஆராந்து இந்த நூல் எழுதி உள்ளார் .

தந்தை பெரியார் வழியில் சிந்தித்து பகுத்தறிவு விதைக்கும் கருதும் உள்ளது .

இறந்தவன் கைரேகைக்கும் 
ஆயுள் காலம் சொல்லும் 
ஜோசியம் !

புகழ் பெற்று விளங்க 
வீட்டை இடித்து 
வாஸ்து வைக்காதே !
வியர்வை வழித்து முயற்சி செய் !

ஒரு சிலர் மற்றவரை குறை சொல்வதையே வேலையாக வைத்து இருப்பார்கள் . அவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக உள்ள வைர வரிகள் இதோ !

எதிலும் குறை சொல்லாதே !
சொன்னால் 
அதுதான் நீ 
சரி செய்ய வேண்டிய 
முதல் குறை !

மொத்தத்தில் இந்த நூலில் குறையே சொல்ல முடியாத அளவிற்கு எல்லாம் நிறையே .நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் .அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
-- 

கருத்துகள்