புதன், 10 ஜூன், 2026
இயக்குநர் இமயம் திரைப்படங்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி
இயக்குநர் இமயம் திரைப்படங்களில் வாழ்கிறார்!
கவிஞர் இரா. இரவி
*****
இறப்பு என்பது உந்தன் உடலுக்குத் தான்
இறப்பு இல்லை உந்தன் திரைப்படங்களுக்கு!
பதினாறு வயதினிலே தொடங்கி நாற்பது படங்கள்
பதித்தாய்! முத்திரை இயக்குனராக வென்றாய்
குணச்சித்திர நடிகராவும் வலம் வந்து
குணத்தில் குன்றாக நின்று நிலைத்தாய்!
கிராமத்தை நோக்கி திரைப்படங்கள் திருப்பினாய்!
கிராமிய மனிதர்களை வெளிச்சம் காட்டினாய்!
எண்ணிலடங்கா நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தினாய்!
எல்லோருக்கும் திரைப்படத்தில் வாழ்வளித்தாய்!
பாரதிராஜா இளையராஜா வைரமுத்து மூவர் கூட்டணி
பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது!
முதல்படத்திலேயே சிறந்த இயக்குநர் விருது வென்றாய்!
முத்தாய்ப்பாக ஆறு தேசிய விருதுகள் பெற்றாய்!
தேனி அல்லிநகரத்தில் பிறந்து சிறந்தாய்!
தேனினும் இனிய பாடல்கள் வரக் காரணமானாய்!
சமூகநீதியை திரைப்படத் துறையில் நடைமுறைப்படுத்தினாய்!
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் ஒலித்தாய்!
தமிழுக்காக தமிழருக்காக போராடிய போராளி!
தன்மனதில் பட்டதை துணிவுடன் சொன்னவர்!
முற்போக்குக் கருத்துக்களை வெள்ளித்திரையில் விதைத்தாய்!
முத்தாய்ப்பான வசனங்களை திரைப்படத்தில் சொன்னாய்!
அலைகள் ஓய்வதில்லை உன் அலையும் ஓய்வதில்லை
அற்புத திரைப்படங்களில் வாழ்கிறாய் என்றும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக