வியாழன், 11 ஜூன், 2026
புகழ்வணக்கம்
விண்ணில் படம்இயக்க விழைந்தவர்
வையத்தில் விண்மீனை உருவாக்கி
வானத்து விண்மீனைத் தோற்கடித்தாய்
கருத்தம்மா மாயத்தேவர் தோட்டத்தில்
குருத்தாய் வளர்ந்த குருக்கத்தி
அல்லி நகர்தனில் அவதாரம்
அடையாற்றுக் கரையில் அரிதாரம்
பதினாறு வயதுப் படத்தாலே
பாரில் ஒளிர்ந்தாய் சூரியனாய்
பரட்டை சப்பானி இருவருமே
கட்டிய பாத்தியின் வித்துக்கள்
இனிய தமிழ்மக்கள் என்றுதான்
கனிவாய் திறந்தால் கைதட்டல்
ஐயர் ஆத்துகதை நீக்கி
அருக்காணி கதையைக் காட்டினையே
தாமரைத் திருவை அரசாங்கம்
தானாய் உனக்கு வழங்கியது
விருதுகள் வழங்கிக் குவித்தார்கள்
விழுதுகள் விட்டு விரிந்தாயே
கன்றை இழந்த காராம்பசுவே
இன்று அடைந்தாய் பாற்கடலை
மக்கள் கொட்டிய கண்ணீரால்
சென்னை வீதியில் பெருவெள்ளம்
காம தேனுவின் பால்சுவைக்க
கற்பக நிழலை அடைந்தாயோ
இயக்குநர் இமயம் ஆனவரே
இந்திரனை இயக்கச் சென்றாயோ
உன்னால் உருவான திரையுலகம்
கரும்பின் சக்கையாய் போனதே
முதல்மரி யாதைப்படம் எடுத்தாயே
இறுதி மரியாதை செய்கின்றோம்
சின்னசாமி ஆக ஆனவரே
பெரியசாமி ஆகப் போனவரே
சந்திர லீலா தனித்லைவா
இங்கே இருந்து ஏன்சென்றாய்
தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் 9788552993.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக