புதன், 10 ஜூன், 2026
இயக்குநர் இமயம்" மறைந்தார்..-பா.மகாலட்சுமி-
இயக்குநர் இமயம்" மறைந்தார்..
இயக்குநர் இமயம் என்ற அடைமொழிக்கு அத்தனை பொருத்தமானவர். சாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து கிடக்கும் இந்திய சமூகத்தில், அதனூடாக தோன்றும் மெல்லிய மனித இயல்பான காதலைக் கொண்டு மனித மனங்களை சமரசத்திற்கு அழைத்த படைப்பாளி என சொல்லலாம்..
ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழும் இயற்கை நியதியை கட்டமைக்கப்பட்ட பிரிவினையை தகர்த்தெரிந்த கதைகள் சினிமாவாக மட்டுமல்ல தங்கள் சொந்த வாழ்வின் உணர்வாக உணர்வுகளை மேலோங்க வைத்தது..
எண்பது, தொண்ணூறு களில் வெளிவந்த பாரதிராஜா காலத்தில் காதலித்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்றே சொல்லலாம். திரைப்படக் காட்சிகளாகட்டும், அவர் தேர்ந்தெடுத்த பாடல்களாகட்டும் தங்கள் காதலுக்கு தூதுவிட்ட தலைமுறை அது..
இளைய தலைமுறைக்காதலை மட்டுமல்ல, இன்றுவரை மனம் கவர்ந்த திரைப்படமாக இருக்கும் ,
" முதல் மரியாதை " என்ற மாபெரும் உணர்வுக்காவியம் , எத்தனை வயதானால் என்ன மனதில் தோன்றும் அன்புக்கும், பரிவான காதலுக்கும் இடமுண்டு என ஆபாசமின்றி நம் மனதை கொள்ளை கொண்ட கதாபாத்திரங்களால், சிவாஜி, ராதா இருவரையும் காலத்தால் பதிவு செய்துவிட்டார்..
ஒரு படைப்பு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது வாழ்வின் வலியை, மக்களின் மனதைப் பேசவேண்டும் ,
" கருத்தம்மா " எனும் பெரும் காவியம் சிசுக்கொலையை நம் மனம் பதற பதற முன்வைத்துப் பேசியது.. பெண்குழந்தைகளை ஒரு திரைப்படம் காப்பாற்றியது என்றுகூட சொல்லலாம்..
"கல்லுக்குள் ஈரம்" திரைப்படத்தில் இயக்குநராகவே பாத்திரமேற்று எளிய மக்களின் கிராமத்து வாழ்க்கைக்குள் நுழைந்து நம்மையும் அதற்குள்ளாகவே நடமாட வைத்திருப்பார், அருணா, கவுண்டமணி பாத்திரங்கள் நமக்குள் இன்னும் மறையவேயில்லை..
உச்ச நடிகர்களான கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று நட்சத்திரங்களை " பதினாறு வயதினிலே" எனும் ஒரே படத்தில் நடிப்பின் உச்சத்தை காண்பிக்க வைத்து பின்னாளில் ஆகச்சிறந்த நடிகர்களாக வலம் வர காரணமாக இருந்தவர்..
அவர் மறைந்தாலும் காலம் தன் சுவற்றில் அழுந்த எழுதிவைத்த கலைஞன், சிறந்த நடிகன், தன் இறுதிக்காலத்தில் கூட " மொம்மை" போன்ற சில திரைப்படங்களில் தன் நடிப்பைக் காட்டிச் சென்றிருக்கும் இயக்குநர் இமயத்திற்கு ரசிக மனங்களிலிருந்து மலர்தூவி வழியனுப்பி வைக்கிறோம்..💐💐💐.
-பா.மகாலட்சுமி-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக