வியாழன், 11 ஜூன், 2026

புகழ்வணக்கம்

(அ). தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த பத்துப் படங்கள் என்று பட்டியலிட்டால் அவற்றில் பாரதிராஜா இயக்கிய படங்கள் மூன்றேனும் இடம்பிடிக்கும். 1). பதினாறு வயதினிலே. 2). மண் வாசனை. 3). முதல் மரியாதை. (ஆ). தமிழ்த் திரையுலக வரலாற்றினை இரு பாதிகளாகப் பிரித்து எழுதவேண்டும் என்றால் அதனைப் பதினாறு வயதினிலேக்கு முன், பதினாறு வயதினிலேக்குப் பின் என்றுதான் பிரிக்க முடியும். (இ). மிகச்சிறந்த இயக்குநர் என்பவர் மிகச்சிறந்த நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து, அக்காட்சிகளில் புதிய நகைச்சுவை நடிகர்களை மிளிரவைக்க வேண்டும். தமிழ்த்திரையின் பெருமைக்குரிய நகைச்சுவை நடிகர்கள் பலரை அவர்களுடைய திரையுடல்மொழியோடு ஆக்கியளித்த இயக்குநர் பாரதிராஜாவே ஆவார். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் இரயில், புதிய வார்ப்புகளில் கவுண்டமணி. காதல் ஓவியத்தில் ஜனகராஜ். கிழக்குச் சீமையிலேவில் வடிவேலு. (ஈ). நாயக வடிவத்திலேயே இயங்கிய தமிழ்த் திரையுலகப் போக்கினை இயக்குநரின் திரைமொழி வடிவத்திற்கு மாற்றியவர் பாரதிராஜா. எடுத்துக்காட்டாக, ஜெய்சங்கர் போன்ற நடிகர் தாம் நடிக்கும் எல்லாப் படங்களிலும் ஒரே வகையான நடிப்பைத்தான் வெளிப்படுத்த இயலும். அதே ஜெய்சங்கர் பாரதிராஜாவின் படத்தில் நடித்திருந்தால் அவர் பின்பற்றி வந்த அனைத்து நடிப்பு அடிப்படைகளும் மாறியே தீரும். அப்படித்தான் பதினாறு வயதினிலேவில் கமலும் முதல் மரியாதையில் சிவாஜியும் கடலோரக் கவிதைகளில் சத்தியராசும் மாறினார்கள். அவ்வாறு மாற்ற இயலாதபோது/விரும்பாதபோது பாரதிராஜாவே தோற்றுப் போகிறார். நல்ல எடுத்துக்காட்டு கொடி பறக்குது என்ற படம். (உ). தமிழ்த் திரைப்படங்களின் பாடல் காட்சியமைப்புகள் ஒரு கட்டத்தில் தேங்கி நின்றபோது அவற்றைப் புதிய புதிய படமாக்கங்கள் வழியாகத் தழைத்தோங்கச் செய்தவர் பாரதிராஜா. பாடல்களை அரங்கமைத்து எடுத்தாயிற்று, நடிகர்களைப் பாடவிட்டு எடுத்தாயிற்று... இனி எப்படி எடுத்தால் எடுபடும் ? செந்தூரப்பூவே என்று நாயகியைக் கனவுகளில் ஆடிப்பாட வைத்தார். மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சு என்று ஊரார் ஒவ்வொருவரையும் பாத்திரமாக்கிப் பாடவைத்து எடுத்தார். இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது என்ற பாடலில் அன்றைய சென்னையின் இரவுகளைச் சுற்றிச் சுழன்று எடுத்துக் காண்பித்தார். தம்தன தம்தன தாளம் வரும் என்று வெள்ளுடை அணங்குகளைத் திரையில் மிதந்தோடவிட்டார். காதல் ஓவியத்தில் தென்னிந்தியாவில் மிகச்சிறந்த கோவில் கட்டமைப்புகளும் சிற்பங்களும் கொண்ட சோமநாதபுரம், ஹளபேடு, தஞ்சைப் பெரிய கோவில் என்று படமாக்கினார். ஆனையைப் பிடிக்கத் தோண்டிய குழியில் விழுந்த நாயகியிடமிருந்து பொத்தி வைத்த மல்லிகை மொட்டு என்று இணைப்பாடல் தொடங்கினார். சீர்கொண்டு போவதற்கு ஒரு பாட்டு. ஆற்றங்கரையில் அரையிருளில் நிலாவைக் கையில் பிடித்ததாக ஒரு பாட்டு. சேலைகளைப் பறக்கவிட்டு ஒரு பாட்டு. காதல் வந்தததும் அடி ஆத்தாடி என்று கடற்கரையை முழுமையாக அளாவிய ஒரு பாட்டு. தோற்றுப்போன தாஜ்மகால் படத்தில்கூட அவர் படமாக்கிய பாடற்காட்சிகள் மிரளவைப்பவை. (ஊ). பாரதிராஜாவினால் மட்டும்தான் நூறு கதைமாந்தர்கள் தோன்றும் கூட்டக் காட்சிகளைச் செயற்கைத்தன்மையின்றிப் படமாக்க முடியும். அவருடைய படங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரியும் சந்தைக் காட்சிகள் வரும். ஊர்க்கூட்டப் பேச்சுக் காட்சிகள் வரும். அவை யாவும் இயக்குநரால் வடிவமைக்கப்பட்டவை. இயல்பு குறையாமல் எடுக்கப்பட்டவை. பிற இயக்குநரின் படங்களில் கூட்டத்தார் ஆடாமல் அசையாமல் நிற்பார்கள். பாரதிராஜா படங்களில் கூட்டத்தார் உலவுவார்கள். (எ). பாரதிராஜா உருவாக்கிய கதைப் பாத்திரங்களில் நடித்தவர்கள் தமது பிற்காலத் திரை வாழ்க்கையில் அந்தக் கதைப் பாத்திரத்தை மிஞ்சிய நடிப்பினை வழங்கவே முடிந்ததில்லை. மண்வாசனையில் வினுச்சக்கரவர்த்தி நடித்த மலைத்தேவன் பாத்திரத்தை மீறிய பாத்திரத்தை அவர்தம் திரைவாழ்க்கையில் காணவே முடியவில்லை. காந்திமதி என்ற தலைசிறந்த நடிகையின் பெயரைச் சொல்லும் பாத்திரம் ஒச்சாயிக் கிழவிதான். சீனிவாசன் என்கின்ற நடிகர் கிழக்கே போகும் இரயிலில் நாயகனின் தந்தை. கமலா காமேசுக்கு அலைகள் ஓய்வதில்லை. வீராசாமி என்கின்ற நடிகர்க்கு முதல் மரியாதையில் செருப்புத் தொழிலாளி பாத்திரம். பாண்டியனுக்கு வீரண்ணாதான். அவ்வளவு ஏன்... நமக்கு ஸ்ரீதேவி என்றாலே மயிலுதான். ராதிகா என்றாலே பாஞ்சாலிதான். விஜயகுமார்க்கு நூறு பாத்திரங்கள் அமைந்திருந்தாலும் கிழக்குச் சீமையிலேவில்தான் பெருமைக்குரிய நடிப்பு. திருப்பூரில் நடந்த அந்தி மந்தாரை படத்துக்கான பாராட்டு விழாவில் பாரதிராஜா விஜயகுமாரைப் பார்த்துச் சொன்னார் : “யோவ்... இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே ? எப்படிய்யா உன்னைப் பார்க்காம விட்டேன் ?” ஏ). பாரதிராஜா தம் படங்களின் இறுதிக் காட்சிகளில் எப்படியாவது மிரட்டி விடுவார். எப்படிப் பார்த்தாலும் பதினாறு வயதினிலே திரைப்படம் நகைச்சுவையாகச் செல்லும் கலகலப்பான படம்தான். இறுதிக் காட்சியில் ஒரு கொலையில் முடிந்து எல்லாமே தலைகீழாகிவிடும். முதல் மரியாதையில் யாரும் எதிர்பாராத திருப்பமாகத் தன் தலைவனின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு ஒரு கொலை. அதனால் சேர முடியாமை. கடலோரக் கவிதைகளில் வெளிச்சொல்ல முடியாத காதலில் கசிந்தவர்கள் பிரிவின் எல்லைக்கே போய் இறுதியில் தழுவிக்கொள்ளல். அலைகள் ஓய்வதில்லையில் மதங்கடந்த முடிவு. (ஐ). தம் கதைகளின் பாத்திரத்தின் குணப்பாங்கினைப் பார்வையாளர்களிடத்தில் பதிய வைக்க பாரதிராஜா நாலைந்து காட்சிகளை வைத்து இடர்ப்படமாட்டார். ஒரேயொரு நொடிப்பொழுது வரும் காட்சிச் சுடுவினில் அல்லது ஒரு சொற்றொடரில் கத்திபோல் கீறிப் பதியவைத்துவிடுவார். பதினாறு வயதினிலே பரட்டை எத்தகைய பெண்பொறுக்கி ? எல்லாரும் பாவாடை தாவணியில் மயிலின் அழகைப் பார்த்துக்கொண்டிருக்க, பரட்டையின் கற்பனை மயிலின் தாயார்க்குப் பாவாடை தாவணி கட்டிப் பார்க்கும். கடலோரக் கவிதைகளில் காதலால் வலுவிழந்து நிலைகுலைந்து நிற்கும் சின்னப்பதாசிடம் பழைய பகையாளிகள் வம்பிழுப்பார்கள். ஜெனிபர் ஆசிரியையைப் பற்றித் தூற்றுவார்கள். அவனை ஆற்றும் பொருட்டு அமைதிப்படுத்தும் இரஞ்சனி “அவனுங்க என்னைத்தான்யா தப்பாப் பேசினாங்க... ஜெனிபரைச் சொல்லலை” என்று பொய்சொல்லுவார். “ஏன் கங்கம்மா... அவனுங்க உன்னைத் தப்பாப் பேசினா மட்டும் விட்டுடுவனா ?” என்று தன்னால் முடியாத போதும் மோதலுக்குப் போய் அடிபடுவான் சின்னப்பதாஸ். இவையெல்லாம் பாரதிராஜா ஊனும் உயிருமாகச் செதுக்கிய கதைமாந்தர்கள். நம் நினைவில் என்றென்றும் ஆழ்ந்து பதிந்து நெகிழ்த்துபவை. (ஒ). பாரதிராஜா தம் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு ஊர்ப்புறக் கதைகளைப் படமெடுத்திருந்தால் சிறு தோல்வியைக்கூடக் கண்டிருக்கமாட்டார். நகர்ப்புறப் படங்களையும் தாம் ஆக்கவேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்திருக்கிறது. தமிழ்த் திரையுலகின் பார்வையாளர்கள் தரப்பில் பெண்கள் கூட்டம் குறையத் தொடங்கியபோது பாரதிராஜாவின் படங்கள் தோற்றன. “என் படத்துக்கான பெண் இரசிகைகள் எங்கேய்யா போனாங்க ?” என்று கேட்டிருக்கிறார். அவர்கள் எல்லாரும் தொலைக்காட்சித் தொடரில் மூழ்கிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஈரநிலம் என்ற படத்திற்குப் பிறகான அவருடைய படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாதது இன்றைக்கும் புதிர்தான். இத்தனைக்கும் அவருடைய திரைமொழி புதுமைக்குக் குறையில்லாமல்தான் இருந்தது. அவர் விரும்பிய புதுமையான மாற்றத்திற்குத் திரையுலகமும் தன்னைப் பிற்காலத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டது. அதனைப் புரிந்துகொண்டிருப்பார். இன்னொன்றையும் கூறவேண்டும். பாரதிராஜாவைப்போல் ஒருவரைப் புகழ்ந்து பேச இன்னொருவர் வரவேண்டும். அவ்வளவுக்கு மனம்விட்டுப் பாராட்டுவார். எந்தத் தயக்கமும் படமாட்டார். ஏனென்றால் அவர்க்கே தெரியும் தாம் அவ்வளவு உயரத்திலிருக்கிறோம் என்பது. தாம் பாராட்டிப் பேசுவது விதையினின்று முளைக்கும் சிறுசெடிக்கு நீர்வார்ப்பது போலாகுமென்பதும் - கவிஞர் மகுடேசுவரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக