வியாழன், 11 ஜூன், 2026

புகழ்வணக்கம்

பாரதிராஜாவின் திரைப்படங்களில்.... முதல் மரியாதை தனித்துவமானது... மிகவும் இறுக்கமான காட்சிகளாலானது... பாடல்களோ, அனைத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும் தன்மையோடிருக்கும்.... துள்ளலும் இருக்கும்... தாலாட்டும் இருக்கும்... கவித்துவமுமிருக்கும்! படத்தின் காட்சிகளோடு பொருந்தி, காட்சிகளின் உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும்... 1985ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியான அப்படத்தின் பாடல் கேசட்டுகள் விற்பனையில் சக்கைப்போடு போட்டது! எங்கப்பா அந்த படத்தின் கேசட்டை வாங்கி வந்தது இப்பவும் நினைவில் இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருப்பார்... ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் கவித்துவமான விளக்கத்துடன் பாடல் கேசட் வந்திருந்தது. படத்தின் வசனகர்த்தா ஆர்.செல்வராஜின் வட்டார வழக்கு சார்ந்த வசனங்கள் அப்படத்துக்கு கூடுதல் சிறப்பு! இதனாலேயே இப்படத்துக்கு சிறந்த வட்டாரத் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது! நிறைய அதிர்வான... அடர்த்தியான காட்சிகள் நிறைந்த திரைப்படம்.... குடும்பத் தலைவனாக இருக்கக்கூடிய... வயதில் மூத்த சிவாஜி, தனது மகள் வயதையொத்த குயிலி என்ற பெண்ணின் மீது காதல் கொள்வது... அது ஊராருக்கு தெரிந்து பஞ்சாயத்தாவது... பஞ்சாயத்தில், அதுநாள் வரை தன்னைப் பார்த்தால் பம்மக்கூடியவர்களெல்லாம் சிவாஜியை நோக்கி கேள்விகளால் துளைக்க, "ஆமா... நா அவள வச்சிருக்கேன்" என்று அவர் சொல்வது... பின்னர் குயிலியைச் சந்திக்கும்போது... "அவசரப்பட்டு சொல்லிப்புட்டேன்... மனசறிஞ்சு சொல்லல... அத நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத!" என்று அவளை தேற்றுவதுபோல் சொல்வார். அதற்கு அவள், "ஓம்மனசுல அப்டி இல்ல?" என்று விசாரிக்க, அவர் கோபத்தில் அவளை அறைந்துவிட்டு, "ஒன்ன பச்சப்புள்ளையா நெனச்சு பழகுனது தப்பாப்போச்சு... ஊர் நெனச்ச மாதிரியே நீயும் நெனச்சுட்டியே!" என்று கூற... அப்படியும் அவள் விடாமல், "நெஞ்சுக்குள்ள கைய வச்சு சொல்லு... ஒம்மனசுல நா இல்ல?" என்று திரும்பவும் கேட்க... மனதிலிருப்பதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சிவாஜி அங்கிருந்து நகரும் காட்சியில் அவரது நடிப்பு அற்புதம்! அக்காட்சிக்குப் பின்னர்... சோகமாக "நான் தானே அந்த குயில்?" என்று சோகமான வரிகள் வந்துசெல்லும்! நடிகர் சிவாஜியின் 254வது திரைப்படமான முதல் மரியாதையில், படம் முழுக்க மேக்கப்பே இல்லாமல் அந்த கேரக்டராக வாழ்ந்திருப்பார். தன்னை மேக்கப் போடவிடாமல் பாரதிராஜா இயல்பாக நடிக்கவைத்தது குறித்து சிவாஜியே சொல்லியிருக்கிறார். ஊர் பெரிய மனுஷனான சிவாஜிக்கு ராதா மீது ஏற்பட்ட ஈர்ப்பு... தவறாகப் பார்க்கப்படும் சூழலில், சிவாஜி - வடிவுக்கரசி திருமணத்துக்கான நிர்ப்பந்தம், 20 ஆண்டுகளாகத் தன் மனதுக்குள் ஓர் உண்மையை வெளிச்சொல்லாமல் அடைத்துவைத்து வாழ்ந்த சிவாஜியின் மனதை, துயரை உணர்ந்து, சிவாஜியிடம் அருணா மன்னிப்பு கேட்கும் காட்சி உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். அக்காட்சியில் சிவாஜியின் முகத்திலிருக்கும் சதைகளிலும் உணர்வை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல், சிவாஜியின்மீது அனுதாபம் ஏற்படுவதற்கு, வடிவுக்கரசியின் கோபம் தோய்ந்த நடிப்பும் முக்கியமான காரணமாக அமைந்தது. இப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்காக, சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும், ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது நடிகை ராதாவுக்கு கிடைத்தது! இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, வேதம் புதிது எனச் சமூக நோக்குடன் கூடிய கிராமியப் படங்கள் நிறைய வந்திருந்தாலும், கிராமத்து எதார்த்த மனிதர்களை வெளிப்படுத்திய விதத்தில் முதல் மரியாதைக்கு எப்போதும் முதல் மரியாதை உண்டு! பாரதிராஜா... தமிழ்த் திரையுலகின் பெருமிதம்! என்றென்றும் மனதில் வாழ்வார்! ❤ - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக