வியாழன், 11 ஜூன், 2026

புகழ்வணக்கம்

திருமணம் ஆன, வயது மூத்த ஆண் ஒருவன் தன் மகள் வயது பெண்ணிடம் காதல் வசப்படுகிறான்" என்கிற ஒரு சப்ஜெக்டை சினிமாவாக்கினால் ஹிட் ஆகும் என்பதை நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது.. ஆனால் "முதல் மரியாதை" சினிமாவில் பாரதிராஜா ஹிட் ஆக்கினார்.. காதல் உடலை மட்டும் சார்ந்தது அல்ல.. மனதையே அதிகம் சார்ந்தது என்பது நாம் அறிந்தது தான்.. அதற்காக ஒரு அப்பா வயதுள்ள ஒரு ஆணுக்கும் மகள் வயதுள்ள ஒரு பெண்ணுக்குமான காதலை நடைமுறை படுத்தினால் சமூகம் ஒத்து கொள்ளுமா?.. அதையும் ஒத்துக்கொள்ள வைத்தார் பாரதிராஜா... படம் வெளியாகி 40 வருடங்கள் ஆனாலும் இன்னமும் நம் நினைவில் நின்று கொண்டிருப்பவர் படத்தில் 'மலைச்சாமி" யாக நடித்த சிவாஜி.. அந்த ஊருக்கு பிழைப்பு நடத்த வரும் குயிலுவை (ராதா) முதன்முதலாக மலைச்சாமி பார்க்கும்போது, அவர் பார்த்தது ஒரு பெண்ணை மட்டுமல்ல. தன்னுள் பல வருடங்களாக உறங்கிக் கிடந்த உணர்வுகளின் எழுச்சியையே மீண்டும் பார்க்கிறார்.. மனிதனுக்கு வயது முதிர்வது என்னவோ அவன் உடலுக்குத்தான். மனதுக்கல்ல என்பதற்கு மலைச்சாமியும் விதிவிலக்கல்ல.. அவளுடன் இருக்கும் பொழுதுகளிலெல்லாம் தான் இளமையாக இருப்பதாகவே உணர்கிறார் மலைச்சாமி.. தான் இளமையானவன் என்பதை நிரூபிக்க அங்கிருக்கும் பெரிய கல்லை தூக்க முயற்சி செய்வதாகட்டும், குயிலுடன் நின்று மீன் பிடித்து விளையாடுவதாகட்டும், அவளுடன் போட்டோ எடுத்து, அவளை சந்தோஷப்படுத்துவது ஆகட்டும், அவள் வைத்த மீன்குழம்பை வெட்கத்தை விட்டு கேட்டு கண்ணிலும் நாக்கிலும் நீர் வர தன் தாயை நினைத்தே சாப்பிடும் காட்சியாகட்டும், இப்படி ரம்யமாக காட்சிகளை வடிவமைத்திருப்பார் பாரதிராஜா... நம் நடைமுறை திருமண வாழ்க்கையில் கூட சந்தோஷத்தையே கண்டிராத எத்தனையோ பேருக்கு மீண்டுமாய் இன்னொரு காதலில் விழும் சந்தர்ப்பங்கள் இப்படி காலப்போக்கில் வாய்க்கத்தான் செய்கின்றன.. சமூகத்தால் புரிந்து கொள்ள முடியாத இப்படிபட்ட காதலை நேர்த்தியாக கைகொள்வது என்பது எல்லோருக்கும் அத்தனை எளிதான காரியம் அல்ல.. அன்பு குறையும் இடங்களில் வெற்றிடங்கள் உருவாகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்பத்தான் சில நேரங்களில் எதிர்பாராத உறவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழைகின்றன. மலைச்சாமிக்கும் குயிலுவுக்கும் இடையேயான உறவு அப்படிப்பட்ட ஒன்று தான். அது சமூக விதிகளை மீறிய காதலாகத் தோன்றலாம். ஆனால் பாரதிராஜா அதை ஆசையின் மொழியில் சொல்லவில்லை. ஆறுதலின் மொழியில் சொன்னார். உடலின் மொழியில் சொல்லவில்லை. மனதின் மொழியில் சொன்னார். அதனால்தான் அந்த உறவு நம்மை நெருட வைக்க வில்லை... நெகிழ வைத்தது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளாக விட்டது என்றாலும் கூட இன்னமும் "மலைச்சாமி" நம் மனதில் வாழ்கிறார். அது ஒரு கதாபாத்திரம் அல்ல. அன்புக்காக ஏங்கிய நம்மை போன்ற எத்தனையோ மனிதர்களின் பிரதிநிதித்துவம் அது.. இப்படி பட்ட காதலை, காதலர்களை, எந்தத் தீர்ப்பும் இன்றி, எந்தக் குற்ற உணர்வும் இன்றி, மனிதாபிமானத்தோடு புரிந்து கொண்ட படைப்பாளி தான் பாரதிராஜா... அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். ::: ரெக்சன்..❤️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக