புதன், 10 ஜூன், 2026

- பாப்பாக்குடி இரா.செல்வமணி

என் இனிய....!❤😢 -------------------------------- 16 வயதினிலே படம் வெளிவரும் போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன்.(1977) எனக்கு வயது 14. அதில் நடித்த நடிகர்கள் பெயரை விளம்பரப்படுத்துவதை விட மயிலு, சப்பாணி, பரட்டை என கதாபாத்திரங்களின் பெயர்கள் தான் விளம்பரப்படுத்தப்பட்டது. இதுவரை அரங்கக் காட்சிகளுக்குள் மூழ்கிக் கிடந்த தமிழ்த் திரை உலகம் கிராமத்து புல்வெளிகளில் நடை போடத் தொடங்கியது. பாரதிராஜாவின் காட்சிகள் கடத்தும் உணர்ச்சிகள் தனித்துவமானவை. இந்த நேரத்தில் ஒரு 5 படங்களை நினைவூட்ட விரும்புகிறேன். புதிய வார்ப்புகள் (1979)... பாக்யராஜை அறிமுகப்படுத்தி இருந்தார். சாதி ரீதியிலான காதல் சூழல். மிகச்சிறந்த முடிவினை தந்திருப்பார். இதிலிருந்துதான் பாரதிராஜாவின் பாடல்களில் தேவதைகள் சூழ ஆரம்பித்தனர். பின்னர் பலர் அதனைப் பின்பற்றினர். அலைகள் ஓய்வதில்லை (1981)... ஒரு ஹை கிளாஸ் காதல் கதை. வைரமுத்துவின் பாடல்கள் மிகப்பெரிய தாக்கத்தை காட்சிகளில் ஊடுருவி இருந்தது. இறுதிக்காட்சியில் மதங்களின் கன்னங்களில் அறைந்திருப்பார். ராதாவின் இளமைக்காகவே பல வருடங்கள் ஓடிய படம். காதல் ஓவியம் (1982)... இசையின் அடிப்படையில் பாரதிராஜா முயற்சித்த படம். பாடல்கள் அனைத்தும் உயர் ரகம். ஆனால் அவர் நினைத்தது போல் இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இதயம் இணைத்துக் கொண்டார். மண்வாசனை (1983)... நான் அதிக முறை பார்த்த திரைப்படங்களில் இரண்டாவது இடம் இதற்கு. (முதல் இடம் வைதேகி காத்திருந்தாள் முப்பது முறை) இதில் தான் ரேவதியை ரசிக்க ஆரம்பித்து கடிதம் எழுதி பதில் கடிதமும் வாங்கி வைத்திருக்கிறேன். கிராமத்து உறவுகள் எல்லாம் இணைந்து கொடி பிடிக்க ஒரு உன்னதமான உறவு காதல் இது. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் பாரதிராஜாவின் காட்சிப்படுத்துதல் இப்போது பார்த்தாலும் வியக்க வைக்கும். முதல் மரியாதை(1985)... நடிகர் திலக்கத்திற்கும் இயக்குனர் இமயத்திற்கும் பொருந்துமா? எனும் பெரும் கேள்வியோடு படப்பிடிப்பு நடைபெற்ற படம். பொருந்தா காதலில் பொருந்தி நிற்பார் நடிகர் திலகம். பொருத்தியது பாரதிராஜா. பாடல்கள் அனைத்தும் தமிழகத்தையே புரட்டிப் போட்டது. காதலை எப்படியெல்லாம் காட்சிப் படுத்த முடியுமோ, எப்படி எல்லாம் மனங்களுக்குள் கடத்த முடியுமோ, அதனை அன்றைய தமிழக இளைஞர்களின் உள்ளத்தில் ஊடுருவி உறைய வைத்தவர். அவர் எத்தனையோ படங்கள் எடுத்திருந்தாலும் காதலையும் கிராமத்தையும் காட்சிப்படுத்தியிருந்த திரைப்படங்கள் அவர் வாழ்வை காலம் சுழலும் வரை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும். 1990ல் புது நெல்லு புது நாத்து படத்திற்காக நம்ம திருப்புடைமருதூரில் மாதக்கணக்கில் படபிடிப்பு நடத்தினர். நந்தன் தட்டை ஆற்றங்கரையில் 'ஏ மரிக்கொழுந்து' எனும் பாடலை எடுக்கும் போது அருகில் நின்று ரசித்திருக்கிறேன். பாரதிராஜா... ஒரு மீளாத சரித்திரம்! - பாப்பாக்குடி இரா.செல்வமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக