: இறையன்பு கருவூலம் பகுதி 2 மதிப்புரை ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
நூல் : இறையன்பு கருவூலம் பகுதி 2
மதிப்புரை ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை 600 017. தொலைபேசி 044 24342810/24310769 பக்கம்102 விலை ரூபாய் 100
******
வானத்து நிலவும்
வயல்வெளியின் அழகும்
குதித்துவிழும் அருவியும்
கத்துகின்ற குருவியும்
கூடிநிற்கும் மரங்களும்
வருடுகின்ற தென்றலும்
எப்படி எல்லோருக்கும் இன்பத்தை அளிக்கின்றனவோ அப்படித்தான் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல்களும் எல்லோருக்கும் மகிழ்வும், அழகும், சுகமும், புத்துணர்வும் வழங்கிக் கொண்டேயிருக்கின்றன. இவர் இன்றைய வாழ்விற்கும் இளையதலைமுறைக்கும் இணைப்புப் பாலமாகவே இருப்பவர்.
இமயத்தைக் காட்டி இதுவே உன் இலக்காக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுபவர்களுக்கு மத்தியில் அந்த இமயத்தை அடைய வழி சொல்லி அதற்கு எளிய வகையில் படிக்கட்டும் போட்டுக் கொடுப்பவர்தான் நமது வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.
கவிஞர். இரா. இரவி குறிப்பிட்டது போல் இறையன்பு ஐயாவின் எழுத்து, அச்சு எழுத்து போன்றே தானிருக்கும். திருச்சி சமயபுரம் S.R.V. பள்ளிக்கு அடிக்கடி வருகை தந்து மாணவ மாணவியரிடையே உரையாற்றுவார்கள், அப்போது பல மாணவ மாணவியர் திரு. இறையன்பு ஐயா அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அதில் சிறந்த கடிதத்திற்கு திரு வெ. இறையன்பு இ.ஆ.ப. ஐயாவிடம் கையெழுத்துடன் வாழ்த்துரையை என் மகள் பெறும் புகைப்படம் அன்றைய திருச்சி செய்தித்தாளில் வெளியானது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. இன்றுவரை அதனை பத்திரமாய் வைத்திருக்கிறேன். அப்போதுதான் அவரின் எழுத்து, அச்சு எழுத்து போல இருப்பதைக் கண்டு வியந்தேன். அன்று எனது குழந்தைகள் மூலம் இறையன்பு ஐயாவின் நூல்களை வாசிக்கத்தொடங்கி, பின் நானே நூல்களை எழுதவும் தொடங்கி சென்றவருடம் (2025) கவிஞர் இரா. இரவியின் இளைய மகன் திருமணத்தில் நான் எழுதிய ‘துளிர்விடும் துளிப்பாக்கள்’ என்ற நூலை.
இறைவனிடம் வேண்டியது கிடைத்தவுடன் தன் காணிக்கையை மௌனமாகவும், மனநிறைவுடனும் செலுத்திவிட்டுச் செல்லும் பக்தனைப்போல திரு.வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களிடம் கொடுத்துவிட்டு மனநிறைவோடு வீடு வந்தேன். மீண்டும் ஒருமுறை கவிஞர் இரா. இரவியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது நூலை வீட்டுக்கு ஐயா அவர்கள் எடுத்துச் சென்று விட்டாரா என்று, எடுத்துச் சென்றுவிட்டார் என்பதை அறிந்த பிறகே நிம்மதியானது என் மனம். என்போன்று பலருக்கும் திரு. இறையன்பு ஐயாவிடம் ஏதேனும் ஒரு அனுபவம் இருந்து கொண்டே தானிருக்கும்.
கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் கூறுவதுபோல் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர், பேச்சாளர்களின் பேச்சாளர். இவரின் புகழ் தமிழ் இருக்கும்வரை இருக்கும்.
கவிஞர் இரா. இரவியைப் போல் பல இரவிக்கள் பிறந்து கொண்டேயிருப்பார்கள். ஆனால் அத்துனைபேரையும் மதித்து அன்பு செலுத்தும் வெ. இறையன்பு ஐயாவின் பண்பு போற்றுதற்குரியது.
கவிஞர் இரா. இரவிக்கு இறைபக்திதான் இல்லை, இறையன்பு பக்தி மிக மிக அதிகம்!
இறையன்பு கருவூலம் பகுதி 2 என்ற இந்த நூல் முழுவதும் தன்னம்பிக்கை வரிகள் நிரம்பி வழிகிறது. திருக்குறள் தொடங்கி, நமது வாழ்வைப் பற்றிய உண்மைகள், கேள்விகள், நம்மை நாமே அறியும் வழிகள், மேலும் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் பண்பு போன்ற அத்தனையும் சொல்லிக் கொடுக்கிறது இந்நூல். சிகிச்சையில்லா போதைப்பொருள் எது? என்ற கேள்விக்கு ‘புகழ்’ என்ற பதில் என்னைப் போன்ற வாசகர்கள் பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குமென்று நம்புகிறேன்.
மற்ற கவிஞர்களின் கவிதைகள், புகழ்பெற்ற வரிகள் போன்றவை இந்நூலில் இருப்பதால் பல கவிஞர்களை அறிய முடிகிறது.
இரா. இரவியின் கவிதைகளை தொகுத்து ஆத்மார்த்தி அவர்கள் வெளியிட்ட ‘உதிரிப்பூக்கள்’ நூல் திரு. இறையன்பு அவர்கள் வேண்டுகோள் மூலம் வந்த நூல் என்பதை அறிந்து அவர்களின் அன்பை வியந்தேன்.
அனைவரையும் ஊக்குவித்தாலும் கவிஞர் இரா. இரவிக்கு தனியிடம் அளித்திருக்கிறார் திரு. வெ. இறையன்பு அவர்கள். இரா. இரவியின் அன்பும் + இறையன்புவின் அன்பும் இணைந்த அன்புப் பாலம் இது.
நூல் முழுவதும் அறம், இல்லறம், முயற்சி, உழைப்பு போன்ற கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். வாசிப்பதற்கு ஆர்வம் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
உன்னை அறிந்தால் என்ற தலைப்பில், ஒருவாரம் முன்பு ஒருவர் நம்மிடம் கோபம் கொண்டிருந்தால் இன்று சந்திக்கும்போது ‘கடந்த காலத்தை நாம் கையிலேந்திக் கொண்டே சந்திக்கிறோம். இந்த இயல்பு மாற வேண்டும்.’ என்ற வரிகள் காலத்தால் அழிக்க முடியாத வரிகள் இப்படித்தான் நாம் பலரோடு பழகி வருகிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. நானும் மாற்றிக் கொள்ள தொடங்கிவிட்டேன்.
தொடர்ந்து கொண்டேயிருக்கட்டும் இவரின் எழுத்துப்பணி!
துளிர்த்துக் கொண்டேயிருக்கட்டும் புதிய சிந்தனையின் நுனி!

கருத்துகள்
கருத்துரையிடுக