விதைக்க வராத நட்சத்திரங்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் ஆரிசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

நூல் : விதைக்க வராத நட்சத்திரங்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் ஆரிசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : ஆசா பதிப்பகம், 1126/2, எம்.ஜி.ஆர். நகர், கீழ்க்கொடுங்காலூர், வந்தவாசி வட்டம். பக்கங்கள் 112, விலை ரூ. 150 ****** நூலாசிரியர் கவிஞர் ஆரிசன் இந்த நூலை கவிப்பேரரசு ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். பாராட்டுகள். நா.வே.அருள் அவர்கள் சிறந்த அணிந்துரை நல்கி உள்ளார். விமர்சனம் எழுதி சாதனை புரிந்துள்ள கவிஞர் சேலம் பொன்.குமார் அணிந்துரை தந்துள்ளார். மகாகவி இதழாசிரியர் வதிலை பிரபாவும் அணிந்துரை வழங்கி உள்ளார். அணிந்துரைகளே நூலின் சிறப்பை எடுத்து இயம்பி நூல் முழுவதையும் படிக்க வேண்டிய ஆவலைத் தூண்டி விடுகின்றன. முகநூலில் எழுதி பலரின் பாராட்டைப் பெற்ற கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். முகநூலில் படித்த கவிதைகளை மொத்தமாக நூலாகப் படிக்கும் போதும் பரவசம் தான். விதி வலியதாம் வீம்புக்காகப் பேசி என்ன பயன் கிழிந்த சட்டையில் தெரிந்தது சண்டையின் வலிமை! சினத்தை அடக்காமல் பேசிப்பேசி சண்டையிட்டு கைகலப்பு செய்து, சட்டையை கிழித்துவிட்டு, விதி மேல் பலி போடும் மதியற்ற செயலை முதல் கவிதையிலேயே கண்டித்து முத்திரை பதித்து உள்ளார். சுவைக்க தெரிந்த நாக்கு மணம் அறிவதில்லை பிரித்தறியும் மூக்குக்கு மணம் கேட்கும் சக்தி இல்லை கேட்கத் தெரிந்த காதுகளால் பார்க்க முடிவதில்லை பிதற்றலில் இயங்கி விடுகிறது மனதுக்குள் இடி முழக்கம்! நமது புலன்களை வைத்து ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு ஆற்றல் உண்டு. இது இருந்தால் அது இல்லை, அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆற்றல். ஒரு மனிதனை மற்றொரு மனிதனுடன் ஒப்பிட வேண்டியதில்லை. மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை புதுக்கவிதையின் மூலம் உணர்த்தி உள்ளார். நூலாசிரியர் ஆரிசன் சகலகலா வல்லவராக உள்ளார். ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு வகைகளிலும் படைப்பாற்றல் மிக்கவராக இருந்து நூல்கள் வடித்து வருகிறார். பாராட்டுகள். தூக்கத்தைக் களைத்து காமமற்ற உடலில் பலாத்காரப் பாய் விரிக்கும் உன் காமத்தை என்ன என்று சொல்வது கடலலையின் ஓயாத சத்தத்தில் காணாமல் போயின காதலின் பாதச் சுவடுகள்! காதலியே மனைவியான போதும் மனைவியின் இசைவு இன்றி கூடல் புரிவது தவறு. அதுவும் ஒருவகை பலாத்காரமே. இணையின் இசைவுடனே ஊடல் கொள்வது உத்தமம் என்பதை உணர்த்தி உள்ளார். சூதுகளில் சுவாரசியத்தை ஏமாற்றி சூழ்ச்சுமக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது வாழ்க்கையின் மீதம் இருக்கும் உயிர்ப்பின் எச்சம்! வாழ்க்கை என்றால் போராட்டம் தான். சூது, வாது, சூட்சுமம் நிறைந்தது தான். ஆனால் அனைத்தையும் வென்று உயிர்ப்போடு வாழ்வதே வாழ்க்கை என்ற வாழ்வியல் கருத்தை வலியுறுத்தி உள்ளார். காமத்தில் விழுந்து விட்டதை என்ன சொல்லித் துரத்துவது பூவில் வண்டு! இது பூ வண்டு மட்டுமல்ல, இவற்றின் மூலம் சில பெரிய மனிதர்களும் சபலத்தால் காமத்தில் விழுந்து, பின் புகழை, மரியாதையை இழந்து நிற்பதை உணர்த்துவதாகவே நான் பார்க்கிறேன். மூழ்கக் காத்திருக்கும் சூரியனை எந்த இடி முழக்கங்களும் இன்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது ஏரியில் வீசிய மீனவனின் வலை! ஒரு புதுக்கவிதையை இப்படி முடித்து நம் கண்முன்னே ஏரியையும், சூரியனையும், மீனவனையும், அவனது வலையையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் ஆரிசன். சமாதியில் இருக்கும் அணையாவிளக்கின் ஒளியில் எப்போதும் முனகிக் கொண்டிருக்கிறது மூச்சற்றவனின் கவிதை! கவிஞருக்குக் கற்பனை அழகு. இறந்தவரின் உடலில் இருந்து, சமாதியிலிருந்து அவரது கவிதை முனகிக் கொண்டு இருக்கிறது என்பதை கற்பனையில் உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று. அவர் சொல்ல நினைத்து சொல்லாமலே உயிர்விட்டு இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றது. புல்லாங்குழலாகாமல் இருக்கும் மூங்கில் காடுகளைப் பார்த்து கானம் இசைத்துப் பேசுகிறது காற்று! புல்லாங்குழல் ஆகாத மூங்கில்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக காற்று கானம் இசைக்கிறது என்பதை உணர்த்தும் கவிதை நன்று. ஜப்பானிய கவிஞர்கள் போல பல இடங்களில் இயற்கையைப் பாடி முத்திரை பதித்து உள்ளார். நூலாசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் தொய்வின்றி தொடர்ந்து பயணித்து வருபவர். முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வது போல எப்போதும் இயங்கி வரும் ஆற்றலாளர். புதுக்கவிதை விருந்தாக நூல் வந்துள்ளது. பாராட்டுகள்.

கருத்துகள்