படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நான்காம் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் 14.9.1901 ================================= இன்றைய நாளில் தான்..... மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நாளில்- 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன. சங்கம் தோன்றக் காரணங்கள் ============================== முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டித்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர். சங்க நோக்கங்கள் =================== 1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல. 2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல. 3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம். தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள் =============================== நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய்யர், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “ ஒன்பது தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன. 1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல். 2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது. 3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல். 4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல் 5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல். 6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல். 7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல். 8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல். 9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல் இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின. 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை. 2. பாண்டியன் புத்தக சாலை. 3. நூலாராய்ச்சி சாலை. 4. கல்விக் கழகம். 5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்) 6. செந்தமிழ் என்னும் திங்களிதழ் 7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம். சேது சகோதரர்களின் கொடைகள் ================================= ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயதிலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. 125 ஆண்டுகள் கடந்த போதிலும், தமிழைப் போல உயர்ந்து நிற்கிறது மதுரை தமிழ்ச் சங்கம். நன்றி: தமிழ் எழுத்து. - கதிர் நிலவன்

கருத்துகள்