திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.












திரை இசையில் விஞ்சி நிற்பது
சமூக விழிப்புணர்வு பாடல்களே!

கவிஞர் இரா. இரவி.
******
திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் என்று பலவகை உண்டு. காதல் பாடல்கள் நிறைய வருவதுண்டு. சமூகப் பாடல்கள் அத்தி பூத்தாற் போல, குறிஞ்சி பூத்தாற் போல வந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெறும். காலத்தால் அழியாத வரம் பெற்றவை சமூகப் பாடல்கள்.
உடுமலை நாராயணன் என்ற கவிஞர் திரைத்துறையில் 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். அவர் பலவகைப் பாடல்கள் எழுதினாலும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் சமூகப் பாடல்கள்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா
     அலுப்பிருக்காது அதில்
     ஆணும் பெண்ணும் சேராவிட்டால்
     அழகு இருக்காது.
பெண்கள் பதவியில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் இன்று கேட்கின்றனர். ஆனால் அன்றே கவிஞர் ஆண் பெண் இருவரும் வேலை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அன்றே பாட்டில் விதைத்து உள்ளார். உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
காசிக்குப் போனா கரு உண்டாகுமென்ற
     காலம் மாறிப் போச்சு!
     ஊசியைப் போட்டா உண்டாகுமென்கிற
     உண்மை தெரிஞ்சு போச்சு!
சோதனைக்குழாய் குழந்தை அதை இன்று அறிவியல் வளர்ந்து விட்டது. இந்த முற்போக்கு சிந்தனையை அன்றே பாடி விழிப்புணர்வு விதைத்தது சிறப்பு.
உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – நீங்க
     சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க – நீங்க
     மதம் சாதி பேதம் மனசை விட்டு நீங்கலே – காந்தி
     மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே!
இன்றைக்கும் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை நடக்கின்றது! காந்தியடிகள் சொன்ன அகிம்சையை கடைபிடிக்க-வில்லை என்று அன்று அவர் பாடியது இன்னும் பொருந்துவதாக உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சரானவுடன் எம்.ஜி.ஆர். சொன்னார், எனது முதல்வர் நாற்காலியில் மூன்று கால் என்னவென்று தெரியாது. ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். முதல்வராவாதற்கு உதவியது சமூக விழிப்புணர்வுப் பாடல்களே!
சின்னப்பயலே சின்னனப்பயலே சேதி கேளடா
     நான் சொல்லப் போற வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா
     ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
     உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அது தான் நீ தரும் மகிழ்ச்சி
மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பகுத்தறிவை விதைக்கும் விதமாக பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள். பொதுவுடைமை சிந்தனையாளரான அவரது மற்றும் சில பாடல்கள்
திருடாதே பாப்பா திருடாதே
     தூங்காதே தம்பி தூங்காதே
இப்படி பல பாடல்கள் சமூக விழிப்புணர்வை விதைத்து சமூகத்திற்கு புத்துணர்ச்சி  தந்தன.
வாலிபக் கவிஞர் வாலி திரைத்துறையில் கடுமையாக முயற்சி செய்து மனம் நொந்து இனி சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி இருந்த போது கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலைக் கேட்டு விட்டு மனம் மாறி திரும்பவும் முயன்று வென்று மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதினார்.
கவியரசு கண்ணதாசன் பாடல்!
     மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
     இப்பாடலில் முக்கியமான வரி
     உனக்கும் கீழே உள்ளவர் கோடி
     நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
     விரக்தியில், கவலையில் உள்ள பலரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். காலணி இல்லையே என கவலைப்படுகின்றாய்.  காலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார். ஆடிக்காரில் அமைதியின்றி கவலையில் செல்லும் இணை உண்டு. மிதிவண்டியில் மகிழ்ச்சியாகச் செல்லும் இணையும் உண்டு.
     கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பல பாடல்கள் எழுதி உள்ளார். அவற்றில் ஒன்று.
     மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்
     வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
     வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
     பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
     சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
இந்தப்பாடலில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக எழுதி இருப்பார். இப்பாடலைக் கேட்பவர்கள் உள்ளத்திலும் மனிதநேயம் நன்கு பதியும்.
உலகில் 41 ஆண்டுகளே வாழ்ந்தவர் நா.முத்துக்குமார். இவர் சின்ன வயதில் அம்மாவை இழந்து அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். இவர் பல காதல் பாடல்கள் எழுதி இருந்தாலும் மகள் பற்றி, தந்தை பற்றி எழுதிய பாடல்களே நிலைத்து நின்றன. தேசிய விருதுகளையும்  பெற்றுத் தந்தன.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
     அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
     அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
     அதில் ஆயிரம் மழைத்துள்ளி கூட்டுகிறாய்
இந்தப் பாடலில்
கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
     உனது புன்னகை போதுமடி
என்பார். கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல் இது. மற்றொரு பாடல்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
     தந்தை அன்பின் முன்னே
     தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
     தந்தை அன்பின் பின்னே!
அம்மாவைப் பற்றி பலரும் பாடி உள்ளனர். ஆனால் நா. முத்துக்குமார்அவர்கள் தான் அப்பா பற்றி உயர்த்தி பாடி அப்பா பாசத்தை விதைத்து இருப்பார்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
     வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டமே
     நண்டூறும் நரிஊரும் கருவேலங்காட்டோரம்
     தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டமே
கவிஞர் நா. முத்துக்குமார் கிராமத்து வாழ்க்கையை உழைப்பாளிகளின் உழைப்பை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
நா. முத்துக்குமாரின் மற்றொரு பாடல் :
அழகே அழகே எதுவும் அழகே
     அன்பின் விழியில் எல்லாம் அழகே!
     மழை மட்டுமா அழடு கடும் வெயில் கூட அழகு
கடைசியாக
     கவலை மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு
என்று முடித்திருப்பார்.
     எல்லாவற்றையும் ரசியுங்கள். இலையும் அழகு தான். அன்போடு பாருங்கள் என்று சமூகக் கருத்தை விதைத்து இருப்பார். இயற்கை தேசத்தை வலியுறுத்தி இருப்பார்.
     காதல் பாடல் எல்லாக் கவிஞர்களும் எழுதுவார்கள். ஆனால் சமூக விழிப்புணர்வு பாடல்கள் சிலருக்குத் தான் நன்றாக வரும். அது தான் சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
     வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்.
     ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
     வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
இந்தப் பாடல் பள்ளிகளில் காலையில் இறைவணக்கப் பாடலுக்கு அடுத்தபடியாக பாடி வருகின்றனர். தன்னம்பிக்கை விதைக்கும் அற்புதமான பாடல்.
     பா.விஜய் அவர்களின் மற்றொரு பாடல்.
     இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
     நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
     நம்ப முடியாதா நம்மால் முடியாதா
     நாளை வெல்லும் நாளாய் செய்வோம்
கடைசியாக இப்படி முடித்திருப்பார்.
     வந்தால் அலையாய் வருவோம்
     வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
     மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே.
மனிதனின் மனத்திற்கு உரமூட்டும் அற்புத வரிகள். தோல்விக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முயன்றால் வாழ்க்கையில் சாதிக்கலாம் வெல்லலாம் என்பதை மிக நன்றாக உணர்த்தி இருப்பார்.
     வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் அண்மையில் எழுதிய பாடல் ஒன்று.
     விதி ஒரு விதி செய்வோம்
     தனி ஒருவனாய் வெல்வோம்
     வெற்றிக்கு என்னடா வேகத்தடைகள்
     போர் செய்வோம்
இந்த பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை நன்கு விதைத்து இருப்பார்.
     அன்னம் என்ற பறவை தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்துமாம்.  அதுபோல நாமும் தள்ள வேண்டிய தரமற்ற பாடல்களைத் தள்ளி,  நெஞ்சில் அள்ள வேண்டிய சமூக விழிப்புணர்வுப் பாடல்களை அள்ள வேண்டும்.
     சமூக விழிப்புணர்வு பாடல்கள் நிலவு போன்றவை. காதல் பாடல்கள் நட்சத்திரங்கள் போன்றவை. என்ண முடியாது. எண்ணத்தில் நிற்காது. அனால் நிலவை மறக்க முடியாது.  அதுபோல சமூக விழிப்புணர்வு பாடல்கள் அன்றும் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கொலைவெறிப் பாடல்களையும் ஆங்கிலம் கலந்து வரும் தமிங்கிலப் பாடல்களையும் புறந்தள்ளி நல்ல விழிப்புணர்ப் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.
.

கருத்துகள்