படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

ஏடு காத்த ஏந்தல்! “தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோ தரம் உடையார்” என்று தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரால் பாராட்டப்பெற்றவரும், தமிழ் ஏடுகாத்த ஏந்தலுமான சி.வை. தாமோதரம் பிள்ளையின் பிறந்தநாள் செப்டம்பர் 12. தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களுக்கு இணையாக ஈழத் தமிழறிஞர்களும் தமிழுக்கு அருந்தொண்டாற்றி அதனை வாழவைத்துள்ளமையை நாம் மறந்துவிடக் கூடாது. பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவராய்த் திகழ்ந்த பெருமைக்குரியவரான சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை, பெருந்தேவி இணையரின் மகனாய், 1832ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் பிறந்தார். தம் தந்தையாரிடத்திலேயே வாக்குண்டாம் (மூதுரை), நன்னெறி முதலிய நீதி நூல்களையும், திவாகரம், உரிச்சொல் நிகண்டு போன்ற ஏனைய நூல்களையும் பயின்றார். அதே காலக்கட்டத்தில் தமிழ் மீதிருந்த விருப்பத்தால் தம் இருப்பிடத்துக்கு அருகிலிருந்தவரும் அக்காலத்துச் சிறந்த தமிழ் வித்துவான்களில் ஒருவருமான முத்துக்குமார நாவலரிடத்து நைடதம், இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய நூல்களுக்குப் பாடம் கேட்டதோடு இலக்கணப் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். தமிழ்க்கல்வியோடு, மேனாட்டு ஆங்கிலக் கல்வியிலும் புலமைபெற விரும்பிய தாமோதரனார் தெல்லிப்பளை அமெரிக்க மிஷன் பள்ளியில் (Tellippalai American Mission School) சேர்ந்து பயின்றார். தம்முடைய 20ஆவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாயிலிருந்த (Kopay, Jaffna) பள்ளியில் தாமோதரம் பிள்ளையவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எப்பணியை மேற்கொண்ட போதினும் தமது ஓய்வுநேரங்களில் பழைய நூல்களை ஓலைச்சுவடிகளில் விடாது பயின்றுவந்தார் தாமோதரம் பிள்ளை. அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும், சீரழிந்துமிருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தம் தலையாய பணி என்று கருதினார் அவர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தை 1868இல் வெளியிட்டார். புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியத்தைப் பெருந்தேவனார் உரையோடு, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து 1881ஆம் ஆண்டு சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார். சென்னையிலிருந்து திருக்குடந்தை நகருக்கு (கும்பகோணம்) 1885ஆம் ஆண்டு சென்று, தமிழ் நூல்களைச் சேகரித்தும் பரிசோதித்தும் வந்த சி.வை.தா., தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு, சென்னை ஸ்காட்டிஷ் அச்சகத்தில் அதே ஆண்டு பதிப்பித்தார். ’கற்றறிந்தார் ஏத்தும் கலி’யைப் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்புச் செய்தார். ’குட்டித் தொல்காப்பியம்’ என்று சிறப்பிக்கப்பட்ட, திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்ட ’இலக்கண விளக்கம்’ எனும் நூலை 1889ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாய்க் கருதப்படும் தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணியை 1889இல் பதிப்பித்தார். தாமோதரம் பிள்ளையின் அரிய பதிப்புப் பணிகளால் கவரப்பட்ட அன்றைய சென்னை அரசு, 1875இல் அவருக்கு ’இராவ்பகதூர்’ எனும் உயரிய பட்டமளித்துச் சிறப்பித்தது. தமிழறிஞர் உலகம் தாமோதரம் பிள்ளையின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது. பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரைவேய்ந்து, நிலையம் கோலியவர் உ.வே.சா” என இம்மூவரின் தொண்டையும் பொருத்தமாய் மதிப்பீடு செய்திருக்கின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் ஏடுகாத்த ஏந்தலான ஈழத்துத் தாமோதரனாரின் தமிழ்ப்பணிகளை நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுவோம். 🙏 Let the legacy of C. W. Thamotharampillai inspire us to cherish, preserve, and carry forward Tamil's timeless heritage. 👍 ~மேகலா இராமமூர்த்தி

கருத்துகள்