ிரைச்சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு.பெங்களூர்.

திரைச்சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு.பெங்களூர். வகை : கட்டுரை பக்கங்கள் : 178 நூலின் விலை : ரூ.160வெளியீடு : வானதி பதிப்பகம்  தொலைபேசி044 24342810 / 24310769 வானதி பதிப்பகம் 23.தீன தயாளு தெரு,தியாகராயர் நகர்,சென்னை.600017.. அந்தக் காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களை முதல்நாள்-முதல் காட்சி ஒருவர் பார்த்துவிட்டால் ஒரு வாரத்துக்கு அவர்தான் நண்பர்கள் மத்தியில் ஹீரோ. அவர் அந்தப் படத்தின் கதை சொல்வார். நடிப்பைப் புகழ்வார். நகைச்சுவை காட்சிகளைச் சொல்லி ரசிப்பார். பாடல்களின் இனிமையைச் சொல்வார்.அதேபோல், வீட்டு முற்றத்தில், படம்பார்த்த ஒரு பெண்மணியைச் சுற்றி பெண்களும் சிறுமிகளும் அமர்ந்திருப்பர். அந்த அம்மையார் கதை சொல்வார். பிடித்த காட்சிகளைச் சொல்வார். மற்றவர் கேட்டிருப்பர்.இப்போதும் படம்பார்த்துவிட்டு வரும்போது குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் படத்தைப் பற்றிப் பரிமாறிக் கொள்வர்.இது இயல்பு. ஹைக்கூ கவிஞர் இரா.இரவியும் இதைத்தான் செய்துள்ளார். ஒரு வித்தியாசம். இவர் எழுத்திலே வடித்துள்ளார். எல்லா படங்களுக்கும் அல்ல. இவர் மனத்தைச் சூழ்ந்த திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார். இப்படி 55 படங்களுக்கு எழுதித் தொகுத்துள்ளார். நூலின் தலைப்பு “திரைச்சுவடுகள்”. இவரது நூலைத் தொடர்ந்து வெளியிடும் வானதி பதிப்பகம் இந்நுலையும் வெளியிட்டுள்ளது.“திரைப்படங்களுக்கு இந்த நூலில் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மிக நுட்பமான உரைகல்லாக நேர்த்தியான முறையில் விமர்சனங்கள் எழுதியுள்ளார் இரா,இரவி” என்று பொருத்தமான நற்சான்றிதழைப் புரட்சித்தமிழன் இனமுரசு சத்யராஜ் அவர்கள் வழங்கியுள்ளார்“தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழும் என் மனைவியை நான் கேலி செய்து சிரிப்பதுண்டு. எல்லாம் நடிப்பு ஏன் அழுகிறாய் என்பேன். இந்தப் படம் பார்க்கும் போது பல இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன்”-” தங்கமீன்கள்” படம் பார்த்த இரா இரவி தான் அழுததைப் பதிவுசெய்துள்ளார்.“மிக நல்ல படத்திற்கு ஆங்கிலப் பெயர் சூட்டி வரிவிலக்கை இழந்துள்ளார்.” -இது ஜோக்கர் படத்திற்கான விமர்சனம். புரட்சிக் கவிஞர். பாரதிதாசனின் மகன் பெயர் மன்னர் மன்னன். மன்னர் மன்னன் பெயரை படத்தின் கதாநாயகனுக்கு வைத்திருப்பதற்காக மகிழ்ந்துள்ள கவிஞர் இர.இரவி. பேரா.இராமசாமி, உருவத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் போல வருவதைக் குறிப்பிட்டுள்ளார்.“இந்த உலகம் நான் வெற்றிப் பெறுவேன் என்று சொன்னால் நம்பாது. வெற்றிப் பெற்றவன் சொன்னால் நம்பும்”-”-கனா” திரைப்படத்தின் வசனத்தைப் பாராட்டியுள்ளார் “மாணவர்களை வெயிலில் முட்டிப்போட வைத்து தண்டனை தருவது தவறு. அன்பால் திருத்துங்கள். ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும். எந்த மாணவனையும் உதவாக்கரை, படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள்” இப்படிப் பல தகவல்கள் “சாட்டை”படத்தில் உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறார், திரு.சமுத்திரக்கனி நடிக்கவில்லை ஆசிரியராகவே வாழ்ந்துள்ளார் என்று பாராட்டுகிறார்.தாத்தா பேரன் உறவு பற்றி இவ்வளவு விரிவாக விளக்கிய படம் “மஞ்சப்பை” மட்டும்தான். இப்படம் பார்த்தபோது விடுதலை போராட்ட வீர்ரான தனது தாத்தா திரு.செல்லையாவை நினைத்துக் கொண்டதாகவும் இது தான் இயக்குநர் திரு.இராகவன் வெற்றி-திரு ராஜ்கிரண் வெற்றி எனவும் கவிஞர் இரா.இரவி குறிப்பிட்டுள்ளார்.“குடியால் குடிகெட்டு மதிகெட்டு வாழ்க்கை கெட்டு சீரழிவதை படம் உணர்த்துகின்றது. மீனவர்கள் சந்திக்கும் இன்னலை, வாழ்க்கை முறையை நன்கு பதிவு செய்துள்ளனர்” என்று “நீர்ப்பறவை” படத்தைப் புகழ்ந்துள்ளார்.“இசைஞானி இளையராஜாபோல பின்னணி இசை அமைக்க வேறு யாராலும் முடியாது என்பதை நிரூபித்துள்ள படம் “தலைமுறைகள்” என்று எழுதியுள்ள இரா.இரவி படத்தில் தாத்தாவாக நடித்தது இயக்குநர் பாலு மகேந்திராவா என வியந்துள்ளார்.“தீயுக்கும் மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் விதைத்துள்ள படம் “சென்னையில் ஒரு நாள்” என்பது இரவியின் கருத்து.“போராளி” என்ற பெயரைப் பார்த்ததும் போராளிகள் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்துச் சென்றேன்” என்ற இரவி, ஏமாந்து போனேன் என்று சொல்லவில்லை. மாறாக அந்தப் படத்தின் சிறப்பை உரைக்கிறார் “இது மனநோயாளிகள் மீது அன்பு செலுத்துங்கள் என்று உணர்த்தும் கதை. கதை வசனம் தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது” என்கிறார் இரா.இரவி, “அதிகம் கேள்வி கேட்கும் சிறந்த அறிவுத்திறனையும் பைத்தியமாக இந்த உலகம் பார்க்கின்றது என்பதை படம் உணர்த்துகிறது” என்கிறார்.“மொத்தத்தில் ஒரு அப்பா மகனை எப்படி வளர்க்க வேண்டும் எப்படி வளர்க்கக் கூடாது என்ற பாடமே “அப்பா” திரைப்படம். குழந்தைகளை படிபடி என்று துன்புறுத்தும் பெற்றோர்களை திருந்திட வைக்கும் நல்ல படம்” என்று நவின்றுள்ளார்.“பாரதியார் படத்தைத் தந்த சிறந்த இயக்குநர் திரு.ஞான ராஜசேகரன் இயக்கிய பெரியார் ஆவணப்படத்தில், இனமுரசு நடிகர் சத்யராஜ் பெரியாராக நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டியுள்ளார். .இவரைத் தவிர வேறு யாரைப் போட்டிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக நடித்து இருக்கமாட்டார்கள். திரு.சத்யராஜ் ஒரு பகுத்தறிவுவாதி. தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்ப்பு உடையவர் என்ற காரணத்தால் படத்தோடு மிகவும் ஒன்றி, ரசித்து நடித்துள்ளார்” என்று மகிழ்ந்து புகழ்ந்துள்ளார். கவிஞர். இரா.இரவி, விமர்சனம் என்பது நூலையோ, திரைப்படத்தையோ மட்டும் சார்ந்ததல்ல. விமர்சிப்பவர் மனப்போக்கையும் பொறுத்தது. அந்த வகையில் இந்நூலைப் படிக்கும் போது ஹைக்கூ கவிஞர் .இர.இரவியின் மனப்போக்கை நாம் புரிந்து கொள்ளலாம்.“சுயமரியாதை, பகுத்தறிவு, அதை வெளிப்படுத்தும் கதை அதற்கேற்ப அந்தக் கதையில் வாழ்ந்து காட்டும் நடிகர்கள்- படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவு-நெறியாளுகை ஆகியவை கவிஞரின் மனதிற்கு நெருக்கமாயிருந்தால் அது அவருக்கு நல்ல படம்-இதுதான் அவரின் எளிய திரை விளக்கம்” என்று குணச்சித்திர நடிகர். பேரா.மு.இராமசுவாமி அவர்கள் குறிப்பிட்டிருப்பது சரியான மதிப்பீடு.,திரைப்படங்களை மிகச் சரியாக மதிப்பீடு செய்துள்ளார். படிப்பதற்கு உகந்த மொழி நடை. ஹைக்கூவில் வெற்றியாளராகத் திகழும் கவிஞர். இரா. இரவி “திரைச்சுவடுகள்” என்ற இந்நூலிலும் வெற்றிப் பெற்றுள்ளார். வாங்கிப் படிப்பவர்கள் பார்க்காத திரைப்படங்களைப் பற்றி அறிந்து கொள்வர்..இனிய வாழ்த்துகள்.கே.ஜி.ராஜேந்திர பாபு.9444040490 -- .

கருத்துகள்