2026-ஆம் ஆண்டிற்கான ஒரே முழு சூரிய கிரகணம், நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தென்படும். இது வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது,
சூரிய ஒளி முழுவதுமாக
மறைக்கப்படுவது தான் முழு கிரகணம் என்பதை நாமறிவோம். இந்த கிரகணத்தின் முழுப்பாதை ஆர்க்டிக் பெருங்கடலில் தொடங்கி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் ஸ்பெயின் வழியாகச் செல்லும்.
ஸ்பெயினின் பல பகுதிகளில் சூரியன் முழுவதுமாக மறையும். ரஷ்யா மற்றும் போர்ச்சுகல் நாட்டின் சில பகுதிகளிலும் முழு சூரிய கிரகணம் தென்படும்.
இங்கிலாந்து உட்பட பிரிட்டன் முழுவதும், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள், வட அமெரிக்கா மற்றும் வட மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பகுதியளவில் தெரிந்தாலும்,
இந்தச் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்கிறார்கள். இங்கிலாந்தில் இதற்கு முன் முழு சூரிய கிரகணம் கடந்த ஆகஸ்ட் 11, 1999 அன்று தெரிந்தது. அதற்கு முன்பு 1927 மற்றும் 1954 ஆகிய ஆண்டுகளிலும் முழு கிரகணங்கள் நிகழ்ந்துள்ளன.
சூரிய கிரகணம் ஒரு அரிய மற்றும் சுவாரஸ்யமான வானியல் நிகழ்வாகும். இதை பாதுகாப்பாகக் காண சூரிய கிரகணத்திற்கான பாதுகாப்புக் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும். நேரடியாக சூரியனைப் பார்ப்பது கண்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது, பாதுகாப்பற்ற முறையில் சூரியனை நேரடியாகப் பார்த்ததால் பார்வை கோளாறு அல்லது கண் பாதிப்பு ஏற்பட்டதாக இங்கிலாந்தில் சுமார் 70 பேர் வரை மருத்துவ உதவியை நாடியதாக புள்ளிவிவரம் சொல்கிறது.
மக்கள் இந்த நிகழ்வை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
வானியல் ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமையும்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர்

கருத்துகள்
கருத்துரையிடுக