*நேதாஜி இறந்ததாக கருதப்படும் தினம்...,*
1945 ஆகஸ்ட் 18 அன்று நேதாஜி இறந்தார் என்பது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இருந்தாலும், அவரது இறுதி நாட்கள் மற்றும் மரணம் குறித்த விவாதம் முற்றிலும் முடிவுக்கு வந்ததாக எல்லா வரலாற்றாசிரியர்களும் கருதுவதில்லை.
1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், நேதாஜி இந்தியாவின் விடுதலைக்காக வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தார். ஆகஸ்ட் 18 அன்று, தைவானின் தைஹோகு (இன்றைய தைபே) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஜப்பானிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அந்த விபத்தில் நேதாஜி கடுமையாகக் காயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஜப்பானிய மற்றும் இந்திய விசாரணைகள் பல கூறின.
ஆனால் நேதாஜி உண்மையில் அந்த விமான விபத்தில் இறந்தாரா? என்பது பல ஆண்டுகளாக இந்தியாவில் விவாதிக்கப்பட்ட கேள்வியாக இருந்தது.
நேதாஜி உயிருடன் இருந்து, வேறு பெயரில் வாழ்ந்தார் என்ற பல்வேறு கோட்பாடுகளும் பின்னர் உருவாயின.
சுதந்திரத்திற்கு பிறகு சில வருடங்கள் அவர் இந்தியாவில் பாபாவாக வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. ரஷ்யாவில் சிறைபிடிக்கப் பட்டிருக்கும் போது , அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக, போஸ் ஒருவேளை உளவியல் ரீதியான அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டிருக்கலாம். தன்னை மறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால் அவற்றுக்கு உறுதியான வரலாற்றுச் சான்று கிடைத்ததாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இன்று வரை நேதாஜியின் மரணம் ஒரு வெளிவராத மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.
நேதாஜி போர்க்களத்தில் நேரடியாக வெற்றி பெறாவிட்டாலும், இந்திய வீரர்களின் மனங்களை வென்றதன் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை உறுதி செய்தார் என்பதுதான் வரலாற்று உண்மை.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக