மனையாள் யாழ்! நூல் ஆசிரியர் கவிஞர் கண்ணையா. மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றத்தை சென்னையில் நிறுவி பல்லாண்டுகளாக இலக்கிய விழாக்கள் நடத்திவரும் வெற்றியாளர் ப.கண்ணய்யா அவர்கள் எழுதியுள்ள ‘மனையாள் யாழ்’ ஹைக்கூ கவிதை நூல் படித்தேன். அமுத விழா கொண்டாட உள்ளார். நல்வாழ்த்துகள். வாழ்த்த வயதில்லை என்பார்கள். வாழ்த்திட வயது உண்டு. எந்த வயதிலும் வாழ்த்தலாம், வாழ்த்துகள் ஐயா.
திருமதி லட்சுமி, கண்ணய்யா அவர்களுடன் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார். கலங்கரை தீபமாய் உருமாறிய பெண்தேவதை எனது மனைவி என கொண்டாடி உள்ளார். 52 ஆண்டு காலம் உடன் பயணித்த திருமதி லெட்சுமி காலமான போதும் திரு. கண்ணய்யா அவர்களின் உள்ளத்தில் நீங்காமல் நிற்கின்றார்.
‘மனையாள் யாழ்’ ஒரு கவிதைத் தொகுப்பு மட்டுமல்ல,
ஒரு மனிதனின் உள்ளம் முழுவதும் இசைக்கும் நினைவுகளின் யாழ் என்கிறார். மனையாளுக்கு மீட்டி உள்ள இந்த யாழ் நனிநன்று. இந்த ஹைக்கூ கவிதைகளைப் படிக்கப் படிக்க வாசகர்கள் மனதில் அவரவர் மனையாள் பற்றிய நினைவு வந்து விடுகிறது. ஒரு நூல் முழுவதும் மனையாளுக்காக ஹைக்கூ வடித்து இருப்பது வெகுசிறப்பு.
மூன்று வரி முத்தாய்ப்பு ஹைக்கூ கவிதைகள், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். ஹைக்கூ நுட்பம் உணர்ந்து வடித்துள்ள ஹைக்கூ நன்றி. பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ!
தோழியாய் தோரணம்
புத்தகம் சுமக்கும்
வீட்டிற்கு வீடு போதிமரம்!
வீட்டிற்கு வீடு போதிமரம் போன்றவர் இல்லாள், மனைவி என்கிறார். போதிமரம் போல ஞானம் கற்பிப்பாள் மனைவி என்கிறார். நன்று.
மனையற மாண்பு
தூங்கியெழும் கதவு
வாசலில் கோலம்!
கணவன் விழிக்கும் முன்னரே மனைவி எழுந்து, வாசலில் கோலமிட்டு அழகுறச் செய்வதை குறிப்பிடுகின்றார். கோலமிடுவதும் கலையின் வடிவம்.
பசி பொறுப்பாள்
எங்கள் பசியறுப்பாள்
தாயாகிப் போன இதயம்!
மனைவி, கணவன்-குழந்தைகளின் பசி போக்குவாள். தன் பசி பொருட்படுத்த மாட்டாள், பசி பொறுத்திடுவாள். தாயைப் போல தியாக வாழ்க்கை வாழ்ந்தவள் மனைவி என்றும் தாய்க்கு நிகரானவள் மனைவி என்றும் போற்றி உள்ளார். பாராட்டுகள்.
சமூகம் போற்றும்
முயற்சி முகவரியாகும்
என்னவள் பெருந்தன்மை!
மனைவியின் பெருந்தன்மையால், நற்குணத்தால் சமுதாயம் போற்றும் முயற்சிகள் செய்து முகவரி தருபவள் மாண்புமிக்கவள் மனைவி என்கிறார்.
தாழிட்டுத் திறக்கும் கதவு
தாமத வருகை
பொய்க் கோபத்தோடு என்னவள்!
வீட்டிற்கு தாமதமாக வந்தால் கதவை திறந்துவிட்டு திரும்பவும் மூடி கோபத்தைக் காட்டி எச்சரித்து, பின் திறந்து உள்ளே அனுமதிப்பவர். அதனையும் ஒரு ஹைக்கூவாக்கி உளளார்.
ஞாபகச் சிதறல்கள்
என்னுள் தொடரும்
வாழ்ந்த வாழ்க்கை
நூலாசிரியர் கண்ணய்யா அவர்களின் மனைவி லெட்சுமி காலமாகி விட்டாலும், வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டு மறக்க முடியாத நினைவுகளை ஹைக்கூ கவிதைகளாக்கி மனைவிக்கு புகழ் மகுடம் சூட்டி உள்ளார். ஹைக்கூ கவிதைகளால் மாளிகை கட்டி உள்ளார். மனைவிக்காக முழு ஹைக்கூ தொகுப்பு இதுவரை வேறுயாரும் வெளியிடவில்லை. இவர்தான் வெளியிட்டு, மனைவிக்கு புகழ்மாலை சூட்டியுள்ளார்.
புன்னகை கலந்த
இனிப்பில்லா தேநீர்
சர்க்கரையாய் நீ!
இன்று பெரும்பாலோருர்ககு சர்க்கரை நோய் வந்து விட்டது. அதன் காரணமாக சர்க்கரை இல்லாத காபியை குடிக்க வேண்டிய நிலை. அந்த காபியை மனைவி கரங்களால் சிரித்த முகத்துடன் கொண்டு வந்து கொடுக்கும் போது இனிப்புசுவை வந்து விடுகிறது அந்த தேநீருக்கு. உண்மை தான் - மனைவி கரங்களால் வாங்கி குடிக்கும் தேநீர் சுவை தான்.
முதுமையில் பிரிவு
சகலமும் தவிக்கும்
நா இழக்கும் ருசி!
பல வருடங்களாக தோழியென பயணித்த மனைவி இறந்து விட்டால், சகலமும் தவிக்கும் என்பது உண்மை தான். நாக்கு கூட ருசியை இழப்பது உண்மை தான். வாழ்க்கை ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தியும் வந்து விடும்.
ஓடுகின்ற திசையெல்லாம்
தேடுகின்ற நினைவுகள்
தவிக்கின்றத் தனிமை!
தனிமை கொடுமை என்பது மனைவியை இழந்தவர்-களுக்குத் தான் புரியும். மனைவியைப் பற்றி நிகழ்வுகள் மறக்க முடியாது. வந்து வந்து நிழலாடும். நானும் மனைவியை இழந்தவன். இந்த ஹைக்கூ கவிதைகள் நூல், என் மனைவியின் நினைவை எனக்கு மலர்வித்தன. நூலாசிரியர் கண்ணையா அவர்களுக்கு பாராட்டுகள்.
கவிஞர் இரா.இரவி

கருத்துகள்
கருத்துரையிடுக