*விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பார்வை*
கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி, நுட்பமாக, அந்த பாத்திரமாகவே வாழ்ந்துக் காட்டியுள்ளார் சூர்யா. அவருக்கு இணையாக அல்லது சற்று மேம்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமான மேடி பாத்திரத்தில் மமிதா பைஜு கலக்குகிறார். கலகலப்பான வேடிக்கைக் காட்சிகளிலும் சரி, தீவிரமான காட்சிகளிலும் சரி, நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
இவர்கள் இருவரும் வந்து போகிற பல காட்சிகள், கஜினி படத்தில் சூர்யா மற்றும் ஹசீன் வந்தது போலவே, எனக்கு தோன்றியது (எனக்கு மட்டும் தானா என தெரியவில்லை). அந்த எலிகெண்ட் லுக்கில் சஞ்சய் விஸ்வநாத்தும், துடுக்குத்தனமான தோற்றத்தில் மேடியும், சஞ்சய் ராமசுவாமியையும், கல்பனாவையும் கண்முன் அவ்வப்போது கொண்டு வந்தது போல இருந்தது. சூர்யா மற்றும் மமிதாவுக்கு சமமான நடிப்பில், ராதிகா தான் ஏற்ற தாய் பாத்திரத்திற்கு முழுதாய், நியாயம் சேர்த்து நிறைவை தந்திருக்கிறார்.
அம்மாவின் அலைபேசியில் மகனுடைய எண் மட்டுமே இருப்பதும், அம்மா அழைப்பதற்காகவே மகன் தனியாக ஒரு சாதரண அலைபேசியை வைத்திருப்பதும் நெகிழ்ச்சி. ஒரு காட்சியில் சூர்யா அம்மாவின் அலைபேசியை எடுத்து, தானே தன்னை அழைத்துப் பேசுகிற காட்சி உருக்கம். உடைந்து விடுகிறோம் நாம்.
உரையாடல்கள், மிகையான நாடகத்தன்மை இல்லாமல், படத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை அடிக்கடி வெளிப்படுத்துகின்றன. காட்சிகளை இலகுவாக்குவதற்காக மட்டும் திணிக்கப்பட்டது போல் தோன்றாமல், நகைச்சுவையானது கதாபாத்திரங்களிடமிருந்து இயல்பாக வெளிப்படுகிறது.
படத்தில் சில காட்சிகள் குறிப்பாக நட்சத்திர ஓட்டலில் உரிமையாளர் மூலமாகவும், ரவீனா டண்டன் வீட்டில் உள்ளூர் பிரமுகர் மூலமாகவும் வருகிற தகராறு, சண்டைக்காட்சிகள் அவசியமற்றதாக தோன்றலாம். ஆனால் அவை இருப்பதால் திரைக்கதை ஓட்டத்தில் தேக்க நிலை இருப்பதாக சொல்வதற்கில்லை. சினிமாத்தனம் இல்லாமல் சினிமா எடுப்பது சிரமம் தான். மொத்தத்தில் மனதை இலகுவாக்கி, மகிழ்ச்சியை தரும்படியான ஒரு குடும்ப சித்திரம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக