நூல் : நம் வழி குறள் வழி
நூல் ஆசிரியர் : கவிஞர் மு. முருகேசன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : பட்டறிவுப் பதிப்பகம்.
1ஏ, வைத்தியநாதபுரம் கிழக்கு,
கென்னட் குறுக்குத் தெரு,
மதுரை-625 016
பக்கம் – 149, விலை - ரூ.100.
******
உலகப்பொதுமறையாம் திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும்வண்ணம் வந்துள்ள சிறுகதைகள் தொகுப்பு. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ம.திருமலை அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். குறள்வழி வாழ்வோம் என்று தலைப்பிட்டு எழுதியுள்ள நூலாசிரியர் கவிஞர் மு. முருகேசன் அவர்களின் என்னுரை நன்று. 46 சிறுகதைகள் உள்ளன.
கதைகள், பொருத்தமான ஓவியங்கள், புகைப்படங்கள் போல AI ஏ.ஐ. மூலம் உருவாக்கி சேர்த்து இருப்பது கதைக்கு உயிர் தருவது போல் உள்ளது. கதையை படிக்கும்போதே நம் மனக்கண்முன் காட்சிகளாக வருகின்றன. படங்களைப் பார்க்கும்போது நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வினைத் தருகின்றன. நூலை சிறப்பாக வடிவமைத்து உள்ளனர். பாராட்டுகள்.
ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒவ்வொரு திருக்குறளை பொருத்திக்காட்டி இருப்பது சிறப்பு. திருக்குறளுக்காக சிறுகதை எழுதினரா? அல்லது சிறுகதைகளை திருக்குறளுக்குப் பொருத்தினரா? என வியக்கும் அளவிற்கு சிறப்பாக எழுதி உள்ளார். நூலாசிரியர் தமிழராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். ஓய்வுக்குப் பின் ஓய்ந்து இருக்காமல் திருக்குறள் பற்றிய புலமையை புதுப்பித்துக் கொள்ளும்வண்ணம் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். இயங்கிக்கொண்டே இருக்கும் சுறுசுறுப்பாளர் நூலாசிரியர்.
சிறுகதைகள் சிறுகதைகளாகவே உள்ளன. நீட்டி முழக்கவில்லை. படத்துடன் கதைகள் 3 பக்கத்திற்குள் சுருக்கமாக இருப்பதால் படிக்க சுவையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. திருக்குறளின் அறநெறியை மனதில் பதிய வைக்கும் விதமாக கதைகள் உள்ளன.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கருத்தை, நெறியை, அறத்தை வலியுறுத்தும்வண்ணம் எழுதி உள்ளார். நம் வழி வள்ளுவர் வழி – முதல் கதையில் அப்பாவைப் போலவே மகனும், மகளும் உள்ளனர். துணி அயர்ன் செய்பவர் வறுமையால் வாடுகிறார் என்று அறிந்ததும் உடன் கையில் இருந்த சேமிப்புப் பணத்திலிருந்து பலசரக்கு பொருட்கள் வாங்கி வந்து உதவுகிறார்கள். அதற்கு இந்தக் குறளை பொருத்தமாக எழுதி முடித்துள்ளார்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மண்ணுயிர்க் கெல்லாம் இனிது! குறள் 68
இப்படி 46 சிறுகதைகள் எழுதி, அதற்கு பொருத்தமான திருக்குறளையும் எழுதி இருப்பதால் திருக்குறளில் கூறாத கருத்துக்களே இல்லை என்று எண்ணிடும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் திருக்குறள் உள்ளது என்பதை உணர்த்தும்வண்ணம் வாழ்வியல் கருத்துக்களை அறநெறி கருத்துக்களை திருக்குறளோடு பொருத்தி மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்.
ஒரு குடும்பம், தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கு தீபாவளிக்கு உடைகள் அன்பளிப்பு கொடுக்க கார்ப்பரேட் கம்பெனியில் வாங்கி விடலாம் என முடிவு எடுத்தபோது. வேண்டாம் என்று சொல்லி, மகன், அவர்களுக்கான உடைகளை கார்ப்பரேட் கம்பெனியில் வாங்காமல் நாம் எப்போதும் வாங்கிடும் சிறிய கடைகளிலேயே வாங்க வேண்டும் என்கிறான். இனிதான இரக்கத்தோடு மகன் சொன்ன கருத்தை அப்பா ஏற்றுக் கொள்கிறார்.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு குறள் 571
சின்னச்சின்ன நிகழ்வுகளைச் சொல்லி அதில் பொருத்தமான திருக்குறளை எழுதி, திருக்குறள் கருத்துக்கள் எளிதில் விளங்கும்படியாக எழுதி உள்ளார். இன்றைய இளைய தலைமுறையினர், மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. மனப்பாடப் பகுதிக்காக, மதிப்பெண்ணிற்காக திருக்குறளை மனப்பாடம் செய்வதை மட்டுமே கடமையாகக் கொண்ட மாணவர்களுக்கு திருக்குறளின் பொருள் புரியும்வண்ணம் அன்றாட நிகழ்வுகளோடு பொருத்திக் காட்டி, திருக்குறளை விளங்க வைத்துள்ளார். நூலாசிரியர் தமிழாசிரியர் என்பதாலும் இலக்கிய ஆர்வலர் என்பதாலும் திருக்குறளில் ஆழ்ந்த புலமை இருப்பதாலும் மிகச்சிறப்பாக திருக்குறளுக்குப் பொருத்தமான சிறுகதைகள் எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
நமது மண்வாசம் இதழ் ஆசிரியர் திருமலை அவர்கள் சொன்ன ஆலோசனைப்படி. சிறுகதைகளும் திருக்குறளும் எழுதியது நல்ல முயற்சி. புதிய யுத்தியில் வெற்றி பெற்றுள்ளார். திருக்குறளை வாழ்வியலோடு பொருத்திக் காட்டி உள்ளார்.
கதைகளுக்கான தலைப்புகள் சிறப்பாக உள்ளன. தலைப்பை படித்தவுடன் கதைகளைக் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் உள்ளன. இல்லாளிடம் காட்டும் அக்கறை, அவையத்து முந்தியிருக்கச் செயல், காணாமல் போன கவலை, உங்களுக்கு உழைக்க உத்தரவிடுங்கள், சுற்றத்தைப் பேணு, நம்பிக்கையும் மகிழ்ச்சியும், யாருடன் உறவு கொள்ள வேண்டும், கடனாக அல்ல காணிக்கையாக. இப்படி கதைகளின் தலைப்பே சிந்திக்க வைக்கும்வண்ணம் சூட்டி உள்ளனார்.
ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான படங்கள் ஏ.ஐ. மூலம் வடிவமைத்து தரமாக அச்சிட்டு கதைகளை காட்சிப்படுத்தும் வண்ணம் படங்கள் உயிரோட்டமாக உள்ளன. உலகப் பொதுமறையான திருக்குறளை சிறுகதைகள் மூலம் நன்கு விளக்கி உள்ளார். நூலாசிரியர் தமிழாசிரியர் மு. முருகேசன் அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.


கருத்துகள்
கருத்துரையிடுக