கலைமாமணி ஞானசம்பந்தன் கருவூலம் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி விமர்சனம் : தகைசால் பேராசிரியர் முனைவர் நிர்மலா மோகன்
கலைமாமணி ஞானசம்பந்தன் கருவூலம்
ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
விமர்சனம் : தகைசால் பேராசிரியர் முனைவர் நிர்மலா மோகன்,
வெளியீடு : வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.பேச 044 24342810 . 24310769.பக்கம் 102, விலை100 மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
மனிதநேயம், ஜலை 2026 பதிப்பு
நூலுக்கு அழகு சேர்ப்பது அந்நூலுக்கு அமையும் அணிந்துரையாகும். நூலின் சிறப்புகளை அதன் முக்கியக் கருத்துக்களை எடுத்துக் காட்டுவது அணிந்துரை. ஆசிரியரின் நூலுக்கு மாணவர் அணிந்துரை வழங்குவதும் மாணவர் நூலுக்கு ஆசிரியர் வழங்குவதும் நூல் மரபாக இருந்துவருகிறது. முன்னுரை, அணிந்துரை இல்லாத நூல்களே இன்று இல்லை எனலாம். மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர் மு.வரதராசனார் தாம் எழுதிய முதல் நான்கு நூல்களுக்குத் தம் மாணவர்களிடம் அணிந்துரை பெற்றார். அவரும் பல மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் அணிந்துரை வழங்கினார். அதில் ஒருவர் இலக்கிய இணையர் என்றும், மு.வ. மோகன் என்றும் போற்றப்படும் பேராசிரியர் இரா.மோகன் ஆவார். அதேபோல் தாம் பழகிய எழுத்தாளர்கள். இளைஞர்கள், அறிஞர்கள், மாணவர்கள், கவிஞர்கள் ஆகியோருக்குக் கொடுத்த அணிந்துரைகள் 5 தொகுதிகளாக வெளிவந்துள்ன. நாம் பெற்ற எழுத்தாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள் முதலானோரிடமிருந்து தம் நூல்களுக்கு அணிந்துரைகளும் பெற்றுள்ளார்.
இன்றைய புதுக்கவிதை வடிவின் தொடர்ச்சி நிலையாக அமைவது ஹைகூ கவிதை. இக்கவிதை எழுதுவதில் சிறந்து விளங்குபவர் ஹைகூ திலகம் இரா.இரவி. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலராக இரா.இரவி பணிபுரிந்து சிறந்த அரசுப் பணியாளருக்கான விருது பெற்றவர். 'ஹைகூ திலகம்’, 'கவியருவி', 'கவிமுரசு', 'வாழ்நாள் சாதனையாளர்' உள்ளிட்ட விருதுகளை பல்வேறு இலக்கியக் கழகங்கள் இவருக்கு வழங்கியுள்ளன. தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா.மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் கவிஞர் இரா.இரவி பேசியவர். பொதிகை, ஜெயா, கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன. ஐயாவின் மறைவுக்குப் பிறகு கலைமாமணி கு. ஞானசம்பந்தனுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை 20 நூல்களுக்கு மேல் எங்களிடம் அணிந்துரை பெற்றவர். எத்தனையோ இக்கட்டான சூழல்களிலும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு நாளும் நாங்களும் அவரும் பங்கேற்ற பட்டிமன்ற நிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், ஆன்மிக நிகழ்வுகள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்கலைக்கழகம், கல்லூரிக்குச் சென்று படிக்கவில்லை. ஆனால் பல கல்லூரிகள், பல்கலைக்-கழகங்கள் இவரது நூல்களை பாட நூல்களாக பரிந்துரைத்-திருக்கின்றன. பல்வேறு நூல்கள் பல்வேறு அமைப்பினரால் பாராட்டப் பெற்று பரிசுகள் பெற்றிருக்கின்றன.
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் எனக்கு ஞானகுருவாக இருந்தவர். மு.வ.வின் செல்லப்பிள்ளை இரா.மோகன் என்றால் பெருமை கொள்வார். மோகன் அய்யாவின் செல்லப்பிள்ளை இரா.இரவி என்றால் நான் பெருமை கொள்வேன் என்று கூறும் இரவி. அவர் பெரிதும் மதிக்கும் வெ.இறையன்புவின் கருவூலம், இலக்கிய இணையர் படைப்புலகம் ஆகிய நூல்களைத் தொகுத்துத் தந்தவர். இப்போதும் 'கலைமாமணி ஞானசம்பந்தன் கருவூலம்' என்னும் நூலைத் தொகுத்துத் தந்துள்ளார். இது பேராசிரியர் ஞானசம்பந்தன் எழுதிய 9 நூல்களின் மதிப்புரைகளும் இரா.இரவியின் 4 நூல்களுக்கான மதிப்புரைகளும் அமைந்துள்ளன.
எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், தொலைக்காட்சி எனப் பல தளங்களிலும் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருபவர் மதுரை நகைச்சுவை மன்றத்தைத் திறம்பட நடத்தி வரும் கு.ஞானசம்பந்தன்.
'சினிமாவுக்குப் போகலாம் வாங்க' நூலில் திரைத்துறை பற்றிய வரலாற்று உண்மைகளை 40 கட்டுரைகளை எளிய நடையில் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் பதிவு செய்துள்ளநர் என்று குறிப்பிடுகிறார் இரா.இரவி,
"ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே'
என்று சங்க காலப் புலவர் பொன்முடியார் பாடுவதுபோல் பெற்றோரைப் போற்றி பணிந்து வணங்கும் இயல்பினராக கு.ஞானசம்பந்தன் விளங்குவதை இந்நூலில் எடுத்துக்காட்டுகிறார் இரவி.
'நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் பேசிய முதல் வார்த்தைக்கே கைதட்டு வாங்கினேன். 1 1/2 வயது நான் பேசிய முதல் வார்த்தை 'அம்மா!' கைதட்டியது யார் தெரியுமா? என் அம்மா, என் குடும்பத்தாரும் தான் என்று நான் வேடிக்கையாகப் பதில் சொன்னேன்.
அவரது தாயார் மறைந்தபின் தந்தையார் தான் சமைப்பாராம்.
சமைக்கும்போது தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைப் பாடல்கள் என்று பல இலக்கிய, பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டே சமைப்பாராம்.
தந்தைக்கு உதவி செய்து கொண்டே இப்பாடல்களை மனப்பாடம் செய்து நினைவில் வைத்திருக்கிறாராம் கு.ஞானசம்பந்தன். பலநல்லகுணங்களைக் கற்பித்த ஆசிரியராக அவரது தந்தை இருந்த காரணத்தால் அவரது திறமைகள் யாவும் அவரது தந்தையார் போட்ட உரம் என்று கூறுவதை எடுத்துக்காட்டியுள்ளார் இரா.இரவி,
ஐயா ஞானசம்பந்தனுக்கு முதலில் சூட்டிய பெயர் அங்குசாமி. இவர் 'தோடுடைய செவியன்' பாடல் பாடியதைக் கேட்டு நாகர்கோவிலில் இருந்த வந்திருந்த ஆறுமுக நாவலர் சூட்டிய பெயர் தான் 'ஞானசம்பந்தன்'. அப்பெயரே நிலைத்துவிட்டது. திரு.ஞானசம்பந்தன் பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் அன்னிய நாடுகளுக்கும் பயணம் செய்பவர். அங்கு காணும் சிறப்புகளை எல்லாம் நூலில் பதிந்து வைக்கும் வழக்கமும் அவருக்கு உண்டு. இந்தோனேசியாவில் உள்ள நமது சோழ மன்னர்கள் ருத்தினனாகிய சிவனுக்கும் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இங்கே கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார்கள்.'
ஞானசம்பந்தனின் அப்பா, 'நீ பிறந்த ஊருக்கு ஏதாவது செய். இந்த ஜெனகை மாரியம்மன் கோவிலை ஆய்வு செய்து எழுது' என்ற சொல்லையும் ஏற்று அதையே முனைவர் பட்டத் தலைப்பாகவும் பதிந்தார் கலைமாமணி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 'சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வழிபாடும் திருவிழாக்களும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
'பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்' என்று அவர் கட்டுரைத் தலைப்பு போல தான் பார்த்த, படித்த, ரசித்த செய்திகளை நகைச்சுவை உணர்வு பொங்க நூல் எழுதும் ஆற்றல் ஞானசம்பந்தனிடம் இருப்பதை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் கவிஞர் இரா.இரவி. அதேபோல் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இரா.இரவியின் நூல்கள் பற்றியும் எழுதிய 4 மதிப்புரைகள் பிற்பகுதியில் உள்ளன. படிக்கப் படிக்கப் பயன்தருவது இரா.இரவியின் கவிதைகள். மீதிநூலில் படித்து மகிழுங்கள். வாழ்க இரவியின் நற்பணி. வளர்க அவர்தம் இலக்கியத் தொண்டு. இன்னும் பல நூல்களை அவர் எழுத வேண்டும். தமிழ் உலகம் பயன்பெற வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக