நூல் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் காட்டும் வெற்றிப்பாதை! நூல் ஆசிரியர் : கோ. பத்மாவதி, எம்.காம்., நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
நூல் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் காட்டும் வெற்றிப்பாதை!
நூல் ஆசிரியர் : கோ. பத்மாவதி, எம்.காம்.,
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் – 216, விலை - ரூ.220.
******
நூலாசிரியர் ஆய்வறிஞர் கோ.பத்மாவதி எம்.காம். அவர்கள் வணிகவியல் முதுகலை பட்டம் பெற்று இருந்தாலும் நூல்களை ஆய்வறிந்து நூல் படைப்பதில் வல்லவராக உள்ளார். ஆய்வு கட்டுரைக்காக பல பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார். சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களின்நூ ல்களை ஆய்வு செய்து ‘வெற்றிப்பாதை’ என்று நூல் வடித்துள்ளார்.
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் என்ற நூல் நான் எழுதி உள்ளேன். எனது நூலைப் படித்துவிட்டு, இந்த நூலை மதுரையில் நடந்த விழாவிற்கு மன்னார்குடியிலிருந்து வருகைதந்து நூலாசிரியர் ஆய்வறிஞர் கோ.பத்மாவதி வழங்கினார். 17 கட்டுரைகள் உள்ளன. சிறப்பாக உள்ளன. கவிதாசன் அவர்களின் படைப்பின் சிறப்பை படம்பிடித்துக் காட்டும்வண்ணம் வடித்துள்ளார். பாராட்டுகள்.
சுவாமி விவோனந்தரின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி கவிதாசன் எழுதியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளை மேற்கோள் காட்டி விளக்கி உள்ளார்.
உளிபடாத கல் சிலையாவதில்லை
உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை
(முன்னேற்ற சிந்தனைகள் ப. 17)
உழைப்பை புறக்கணித்து விட்டு
உயர்வெனும் ஏணியில்
யாராலும் ஏற முடியாது.
(முன்னேற்றத்தின் முகவரி ப. 14)
இப்படி நூலில் உள்ள வைர வரிகளை மேற்கோள் காட்டி வடித்துள்ள கட்டுரை நனிநன்று.
கலாமை கவர்ந்த கவிஞர் என்ற கட்டுரையில், மாமனிதர் கலாமிற்கும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கும் உள்ள நட்பை, சந்தித்த புகைப்படத்துடன் வெளியிட்டு வடித்த கட்டுரை நன்று. அப்துல்கலாம் குறித்து பலரிடம் கட்டுரைகள் பெற்று தொகுப்பு நூலும் வெளியிட்டவர் கவிதாசன். என்னிடமும் கட்டுரை வாங்கி பிரசுரம் செய்தார்கள். மாமனிதர் அப்துல் கலாம் பற்றி, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய வைர வரிகளை மேற்கோள் காட்டியது சிறப்பு.
இதோ கல்வெட்டு வரிகள்
பிறப்பு தரித்திரமாக இருந்தாலும்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதை
மெய்யாக்கிய எங்கள் சரித்திரம் நீ
தலைக்குள் கனம் இருந்தாலும்
தலைக்கனம் இல்லாதவரே நீங்கள்
இப்படி கலாம் பற்றி, கவிதாசன் எழுதிய வரிகள் மேற்கோள் மிக நன்று.
வாழ்க்கையை வளப்படுத்தும் வாழ்வியல் நெறிகள் கட்டுரை சிறப்பு.
பயன்படாத அறிவு
கட்டிக்கொள்ள உதவாத
பட்டு வேட்டிக்குச் சமம்
(முன்னேற்றச் சிந்தனைகள் ப. 20)
அரிவாளை கூர்மையாக்குவது போல,
அறிவையும் கூர்மையாக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அதுவும் துரு பிடித்து விடும்.
(இந்த நாள் வெற்றி திருநாள் ப. 117)
கவிதாசன் அவர்கள் பேச்சு, எழுத்து என இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து, தன்னம்பிக்கை விதைத்து வரும் வல்லவர். அவரது நூல்கள் முழுவதையும் வாசித்து ஆராய்ந்து வடித்துள்ள இந்த நூல் மிக நன்று. பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுகள்.
சாதிக்கொடுமைகள் கண்டு மனம் குமுறி உள்ளார் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். அது தொடர்பாக அவர் எழுதியுள்ள கவிதையையும் மேற்கோள் காட்டி உள்ளார். எளிய மொழிநடையில் எழுதி இருப்பதை சுட்டி உள்ளார். நாட்டுப்பற்று மிக்கவராகவும் உள்ளார். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் பண்புநலன்களை வெளிப்படுத்தும் விதமாக சிறந்த படைப்புகளை கல்வெட்டு வரிகளை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரைகள் சிறப்பாக உள்ளன.
முன்னேற்றம் தரும் முயற்சி எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டி உள்ள கவிதைகள் சிறப்பு.
வெற்றி என்பது விபத்தல்ல!
அது வியர்வைத் துளிகளின்
விளைச்சல்!
(சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் ப. 30)
எனது நூலில் மேற்கோள் காட்டிய வரிகளை எடுத்து மேற்கோள் காட்டி உள்ளார். ஒழுக்கத்தை அளிப்பதாக கல்வி இருத்தல் அவசியம் என்பதை கவிதாசன் வலியுறுத்தி உள்ளார். சிறந்த பள்ளியின் சிறந்த நிர்வாகியாகவும் கவிதாசன் இருந்து வருகிறார்.
விலங்கின உணர்ச்சிக்கு வேலி வேண்டும்
மானிடப் புணர்ச்சிக்கு மாண்புகள் வேண்டும்
இல்லறத் துணையின் நல்லறம் பூத்திட வேண்டும்
(கருவறை ஓலங்கள் ப. 36)
பெண்ணியம் என்னும் கண்ணியம் எனும் கட்டுரையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புகளில் பெண்ணியம் குறித்தான கவிதைகளை எழுதி உள்ளார். மேற்கோள் காட்டியது சிறப்பு.
ஆயிரம் மேடைகளில்
வரதட்சணை எதிர்த்தவர்கள்
மகனுடைய விவாகத்தில்
மண்டியிட்டுக் கொள்கிறார்கள்
(கவிதாசன் கவிதைகளில் படைப்பாளுமை ப. 134)
ஊருக்கு உபதேசமென வரதட்சணைக்கு எதிராக பேசி விட்டு, மகனுக்கு வரதட்சணை கேட்கும் நபர்களின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் கவிதாசன் கவிதை வடித்துள்ளார்.
நூலாசிரியர் ஆய்வறிஞர் கோ.பத்மாவதி அவர்கள் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல்கள் முழுவதையும் நன்கு படித்து ஆராய்ந்து அதில் உள்ள சிறப்பான வைர வரிகளை மேற்கோள் காட்டி வடித்துள்ள வெற்றிப்பாதை நூல் மிகச்சிறப்பாக உள்ளது. சிந்தனைக் கவிஞர் கவிதாசன் என்ற படைப்பாளிக்கு இந்த நூலின் மூலம் மகுடம் சூட்டி உள்ளார் நூலாசிரியர் ஆய்வறிஞர் கோ. பத்மாவதி அவர்கள், பாராட்டுகள்


கருத்துகள்
கருத்துரையிடுக