இறையன்புகருவூலம் பகுதி -2 ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி.விமர்சனம் : முனைவர் நிர்மலா மோகன், மனிதநேயம், ஆகஸ்ட்2026 பதிப்பு
இறையன்புகருவூலம் பகுதி -2
ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
விமர்சனம் : முனைவர் நிர்மலா மோகன்,
மனிதநேயம், ஆகஸ்ட்2026 பதிப்பு
வெளியீடு : வானதி பதிப்பகம்23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.பேச 044 24342810 . 24310769.பக்கம் 102, விலை100
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
மனிதர்கள் இரண்டு வகை. 1. பணியிலிருந்துஓய்வு பெற்றால் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, சின்னச்சின்ன வீட்டு வேலைகளைக்கூடச் செய்யாமல் பணியில் இருந்த அதே மிதப்பில் அதிகாரம் செலுத்தி வாழ நினைப்பவர் ஒருவகை. 2. ஓய்வுஎன்றால் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுதல் என்று புரிந்து கொண்டு தன்னால்இயன்றதைச் செய்து கொண்டு பிறருக்கு உதவியாக வாழ்தல் இரண்டாவது வகை. நூலின் நாயகரும்,நூல் ஆசிரியரும் இரண்டாம் வகையைச் சேர்ந்த இலக்கிய தும்பிகள்.திரு.வெ.இறையன்புஇ.ஆ.ப. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் தமிழ் கூறும் உலகில் இல்லை. எழுத்து, பேச்சு என்றுஓயாது இயங்கி வருபவர் அவர். இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர்.இவர் ஏறாத மேடைகள் இல்லை. கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் இளைஞர் மன்றங்கள்,உரையாக்கங்கள், நூல் அரங்கங்கள் மூலம் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்பவர்.இவரது நூல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவனவாக அமைந்து பல பதிப்புகள்கண்டுள்ளன. 'ஹைக்கூ திலகம்' என்று போற்றப்படும் கவிஞர் இரா.இரவிஅவர்கள், தாம் பணியாற்றிய சுற்றுலாத்துறையின் மூலம் பல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,அறிஞர்கள் போன்ற பலரின் நட்பைப் பெற்றவர். 39 நூல்களைப் படைத்தவர். தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்', 'கவியருவி', 'கவிமுரசு', 'கலைமாமணி', 'விக்கிரமன் விருது' எனப் பல விருதுகளைப்பெற்றுப் பொலிபவர். திரு.இறையன்பு மீது இவர் கொண்ட பற்று அளப்பரியது. 'புலிப்பால் இரவி'என்பது இறையன்பு அவர்கள் இரவிக்குக் கொடுத்திருக்கும் பட்டம். உதவி என்று யாரேனும்ஏதாவது கேட்டுவிட்டால் போதும். அதை உடனே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர் இரவி, அதனால்தான்'புலிப்பால் இரவி', எள் என்றால் எண்ணெய்யாக நிற்பவர். அவர் தொகுத்த இறையன்புவின் நூல்கள்பற்றிய திறனாய்வுகள் 'இறையன்பு கருவூலம் - பகுதி -2 என்னும் நூலாக வெளிவந்துள்ளது.'திருக்குறள் 100' தொடங்கி 'Let Thousand Flowers Bloome' என்னும் கட்டுரை ஈறாக 22கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.சில துளிகள் வருமாறு:'திருக்குறள் 100' என்னும்நூல் திருக்குறளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் வினா-விடையாக அமைந்துள்ளது.'தக்கார் தகவிலார் என்பதுவாரிசுகளைக் குறிக்குமா?' என்பது கேள்வி. இதற்கு இறையன்பு கூறும் விடை..'எச்சமென்பது வாரிசுகள்அல்ல. அவர்கள் விட்டுச் செல்கின்ற செயல்கள். அவர்கள் விட்டுச் செல்வது சுவடுகளையல்ல,பாதங்களை என்பதை பயன்பெற்றோர் பகுத்தறிவர்... அவர்கள் வாழ்ந்ததன் பயனை ஒருவர் உலகத்தில்விட்டுச் சென்றிருக்கிறாரா என்பதை வைத்தே தக்காரா, தகவிலாரா என்று நாம் அவருக்கு வக்காலத்துவாங்க முடியும். கேள்வி: பொய்மையும் உண்மையாகுமா?பதில்: உண்மை - மடியிலிருக்கிறபால், மெய்மை - கறந்தபால் . வாய்மை -காய்ச்சிய பால் -காய்ச்சிய பாலே பருகச் சிறந்தது.'திருக்குறளை ஆய்ந்துபடித்ததோடுமட்டுமின்றி ஆய்வு செய்ததோடு மட்டுமின்றி வாழ்விலும் கடைப்பிடித்து வரும் காரணத்தால்தான்நூலாசிரியர் இறையன்பு அவர்களை ஆகச் சிறந்த மனிதராகவும் ஆளுமையாளராகவும் திகழ முடிகிறது.அவரது வெற்றிக்கு மூல காரணம் திருக்குறள் என்றால் மிகையன்று' என்று கவிஞர் இரவி குறிப்பிடுவதுமுற்றிலும் பொருத்தமானதாகும்.மதுரைப் புத்தகத்திருவிழாவில் பேசி முடித்த பிறகு அதற்கு சன்மானமாக இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க முன்வந்தனர்நிர்வாகிகள். இறையன்பு அவர்கள் அனத் வாங்க மறுத்துவிட்டார். 'நீங்கள் வைத்திருக்கும்அறக்கட்டளையிலாவது அதைச் சேர்க்கலாமல்லவா?' என்று அவர்கள் கேட்டபோது இறையன்பு அவர்கள்கூறிய பதில் என்ன தெரியுமா? 'இங்கு மட்டுமல்ல, அரசு மற்றும் அனைத்து புத்தகத்திருவிழாவிலும், அரசுப் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் பேசும் உரைக்கும்சன்மானம் பெறுவதே இல்லை. இது கொள்கை முடிவு. அரசு தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்றுவிட்டு அரசிடமிருந்து சன்மானம் பெறுவது முறையல்ல. நெறியல்ல. என் அம்மாஆசிரியராகப் பணியாற்றியவர். என் தந்தையும் அறவழி வாழ்ந்தவர். பெற்றோரின் போதனையை மறக்கவில்லை'என்றாராம். மேடையில் ஒரு பேச்சு, பின்னர் ஒரு பேச்சு என்று வாழும் மனிதரிடையே அறநெறிபேசுவது, எழுதுவது மட்டுமின்றி, வாழ்விலும் கடைப்பிடித்து வரும் மாமனிதர் இறையன்புஎன்பதை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இத்தகைய பல வாழ்வியல் செய்திகளும் இந்நூலில்இடம்பெற்றுள்ளன. இறையன்புவின் 'சத்சங்கம்' என்னும் நூலில் ஆன்மிகம்என்றால் என்ன? என்பதற்கு அவர் தரும் விளக்கம்: ஆன்மிகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளைநம்பாதீர். எல்லா உயிருக்கும் கருணை காட்டுவது, மனிதநேயம் பேணுவது, நல்லது நினைத்தல்,நல்லது செய்தல், நல்லவராக வாழ்தல். இப்படி நம்மை நாமே காதலித்து விரும்பி மனசாட்சிக்குஉண்மையாக நேர்மையாக வாழும் வாழ்க்கையே ஆன்மிகம்' 'அச்சம் தவிர்' என்பது மாணவர்களுக்குஅச்சமில்லாமல் தேர்வுகளை மேற்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிக் கூறும் நூல். 'உன்னைஅறிந்தால்' நூலில் மாணவர்களின் இலக்கு, நோக்கம் குறித்துப் பேசுகிறார் இறையன்பு. 'படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால்வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று சொல்பவர்கள் உண்டு. நினைத்த வேலை கிடைக்கும் வரைகிடைத்த வேலையை செய்வதற்கு முன்வர வேண்டும்' என்று இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார். நீ விரும்பும் பணியைத் தேர்ந்தெடு. நீ ஒருநாள்கூடஉழைக்க வேண்டிய அவசியமிருக்காது''நேசித்த பணியைப் பெறுபவனும்,பெற்ற பணியை நேசிப்பவனும் ஒருபோதும் களைப்படைவதில்லை' என்று சீனப் பேரறிஞர் கன்பூசியசின்மேற்கோள் மற்றும் பல நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி வியர்வையின் வெகுமதியைப் போற்றுகிறார்.இறையன்பு - என்பதை கவிஞர் இரவி அழகாக முதன்மைப்படுத்தியுள்ளார். இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,இல்லறத்தார், ஆன்மிகவாதிகள், தத்துவவாதிகள் என அனைவரும் விரும்பிப் படிக்கும் வண்ணம்பல்வேறு நிகழ்ச்சிகள், பல அறிஞர்களின் மேற்கோள்கள், பெரியோர்களின் வாழ்வியல் செய்திகள்எனப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் அமைந்துள்ள இறையன்புவின் கருவூலம் என்னும் இரவியின்இந்நூல் இறையன்புவின் பேராற்றலை பெரிய சிந்தனைகளை எடுத்துக்காட்டும் சிறிய வாயிலாகவிளங்குகிறது எனில் மிகையில்லை. இந்நூலினை எல்லோரும் படித்துப் பயன்பெற வேண்டும்.தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற இன்னும் பல நூல்களை இரவி தர வேண்டும்.-தகைசால் பேராசிரியர்முனைவர் நிர்மலா மோகன்

கருத்துகள்
கருத்துரையிடுக