நூல் : கடுகின் காரம் (சிறிய கதைகள். பெரிய சிந்தனைகள்) நூல் ஆசிரியர் : முனைவர் ஞா. சந்திரன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
நூல் : கடுகின் காரம்
(சிறிய கதைகள். பெரிய சிந்தனைகள்)
நூல் ஆசிரியர் : முனைவர் ஞா. சந்திரன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : நியூ செஞ்சூரி புத்தக நிறுவனம்,
சென்னை.
பக்கங்கள் 222. விலை ரூ.210
******
நூலாசிரியர் முனைவர் ஞா.சந்திரன் அவர்கள் முதுநிலை தமிழாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், தொகுப்பாளர் என பன்முக ஆற்றல் மிக்கவர். 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது அனுபவங்கள் சந்தித்த நிகழ்வுகள், கேள்விப்பட்ட கதைகள் இவற்றைத் தொகுத்து, ‘கடுகின் காரம்’ என்ற தலைப்பிட்டு நூலாக்கி உள்ளார். சிறிய கதைகள், பெரிய சிந்தனைகள். ஆம், சிறிய விதைகள் தான். அவை தரும் சிந்தனைகள் பெரியவை.
கடுகு அளவில் சிறியது தான், ஆனால் கடுகு இல்லை என்றால் சமையல் சிறக்காது, அதுபோல கதை சிறியது தான். அவை தரும் பாடம், தாக்கம் பெரியவை, பயனுள்ளவை.
இந்நூல் வெறும் கதைகளின் தொகுப்பல்ல, சிந்தனைக் கருவூலம். இதனை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் சிந்தனை விரிவடையும்” இவ்வாறு நூல் ஆசிரியர் முனைவர் ஞா. சந்திரன் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நூலில் 100 சிறிய கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் பல்வேறு சிந்தனைகள் விதைத்து உள்ளார். படிக்கும் வாசகர்களுக்கு விழிப்புணர்வை விதைக்கும் வண்ணம், மாற்றி யோசிக்கும் வண்ணம், பல்வேறு கோணங்களையும் உணர்த்தும் வண்ணம் சிறுகதைகள் உள்ளன.
சிறிய கதைகள் என்பதால் உடன் வாசிக்கத் தோன்றி விடுகிறது. பெரிய கதைகள் என்றால் வாசிக்க அயற்சி ஏற்படும். விறுவிறுப்பாக வாசித்து முடித்து விடலாம்.
ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் சிறந்த சிந்தனை வரிகளைத் தொகுத்து எழுதி உள்ளார். அந்த வரிகளும் சிந்திக்க வைக்கின்றன. பதச்சோறாக சில சிந்தனைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு.
• தன்னைத்தானே புதுப்பிப்பதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் மாற்றுச்சிந்தனையே ஊக்கியாகும்.
• தன் மதிப்பைத் தெரிந்தவன் பிறரைத் தேடி ஓட மாட்டான்.
• காலத்தின் மதிப்பைத் தெரிந்தவன் பிறர் தயவில் வாழ மாட்டான்.
• மனநிலைக்குத் தகுந்தாற் போல் பேசி வீடாதீர்கள். ஏனென்றால் மனநிலை மாறலாம், ஆனால் பேசிய வார்த்தைகள் ஒருபோதும் மாறாது.
• சிலரிடம் சில விஷயங்களைப் புரிய வைக்க கஷ்டப்படுவதை விட சிரித்து விட்டு கடந்து செல்வது மேல்.
இப்படி சிந்திக்க வைக்கும் சிந்தனைகள் 100, கதைக்கு முடிவுக்கு உள்ளன.
சிறுகதைகள் ஒவ்வொன்றும் படித்து முடித்தவுடன் நம் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சிந்திக்க வைக்கின்றன. பல பாடங்களைத் தருகின்றன. மாற்றி யோசிக்க, வித்தியாசமாக சிந்திக்க கதைகள் கற்றுத் தருகின்றன. பாட்டியிடம் கதை கேட்பது போல இருக்கிறது. சுவாரசியமாக உள்ளன.
அச்சம் காரணமாக பேராசை உண்டாகும் என்று குரு, சீடர்களுக்கு போதித்து, அதற்கான விளக்கமும் சீடர்களுக்கு தருகிறார். அரிசி தீர்ந்து விட்டது, நாளை காலை கடையில் வாங்கி வந்து தான் சமைக்க வேண்டும் என்றதும் சீடர்கள் நாளை காலை உணவு இருக்காது என்ற பயத்தில் பேராசை வந்து அதிகம் உண்கின்றனர். பயம் பேராசையை உருவாக்கும் என்பதை குரு உணர்த்துகிறார். பேராசைக்குக் காரணம்? என்ற தலைப்பில் இக்கதை உள்ளது, ஒரு பொருள் நாளை கிடைக்காது என்று வதந்தி வந்தால், பயம் காரணமாக அப்பொருளை இன்றே அதிகம் வாங்கி வைத்துக் கொள்ளும் மனநிலை பலருக்கும் வருவதைக் காண்கிறோம்.
காயங்களே பாடங்கள் என்ற கதையில் முதியோர் இல்லத்தில் அம்மாவை விட்ட மகனிடம், இறக்கும் தருவாயில் என்ன வேண்டும் என்று அம்மாவிடம் கேட்கிறான் மகன். மின்விசிறியும், குளிர்சாதனப் பெட்டியும் இந்த முதியோர் இல்லத்திற்கு வாங்கிக் கொடு என்கிறார். எதற்கு அம்மா என்று மகன் கேட்டபோது, கொசுக்கடி உள்ளது அதற்கு மின்விசிறி; கெட்டுப்போன உணவைத் தருகிறார்கள், அதற்கு குளிர்சாதனப் பெட்டி என்கிறார். இவ்வளவு நாளாக கேட்காமல் இப்போது கேட்கிறாயே, ஏன்? என்கிறார் மகன். நீ இங்கு வந்து சேர்ந்தால் கொசுக்கடி தாங்க மாட்டாய், கெட்டுப்போன உணவு சாப்பிட மாட்டாய். அதற்குத்தான் என்கிறார் தாய். மகன் தாயின் கரம் பற்றி, கண்ணீர் வடிக்கிறான். முதியோர் இல்லம் பற்றி ஏற்கனவே வந்தவற்றை மாற்றி யோசித்து இந்தக் கதை எழுதி உள்ளார்.
மௌனத்திற்குப் பின்னால் என்ற சிறுகதையில் அறுவை சிகிச்சை மருத்துவரை அவசரமாக அழக்கிறார்கள். அவரும் வந்து நோயாளியை காப்பாற்றுகிறார். காப்பாற்றி விட்டு மீண்டும் அவசரமாக புறப்படுகிறார். நோயாளியின் அப்பா கடுமையாகப் பேசுகிறார். வந்தார். கிளம்புகிறார் என்கிறார். அதற்கு மருத்துவரின் மகன் விபத்தில் இறந்து விட்டார். இறுதிச் சடங்கு செய்வதற்காக செல்கிறார் என்கிறார் உதவியாளர். ஒருவரின் உண்மையான சூழ்நிலையை அறிந்து கொள்ளாமல் அவரை பிழையாக எடை போடாதீர்கள் என்ற சிந்தனையை விதைக்கிறார்.
சிறுசிறு சிந்தனைகளை சிறுகதைகளாக வடித்து உள்ளார். அவை ஒவ்வொன்றும் நல்ல சிந்தனையை விதைக்கின்றன. கவனத்தை வரவழைக்கின்றார். விழிப்புணர்வை விதைக்கின்றன. தன்னம்பிக்கை தருகின்றன.
மண்பானை எப்பவும் குளுகுளுன்னு எப்படி இருக்க முடிகிறது என்று கேட்டதற்கு, என்னுடைய தொடக்கமும் முடிவும் மண் தான் என்பது எனக்குத் தெரியும் அதனால் சூடாகாமல் ஜில்லுன்னு இருக்கேன் என்றதாம் மண்பானை.
இப்படி பல்வேறு சிந்தனைகளை தோற்றுவித்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் முனைவர் ஞா.சந்திரன். சிறிய கதைகளின் மூலம் பெரிய சிந்தனைகளை விதைத்தமைக்குப் பாராட்டுகள்.

கருத்துகள்
கருத்துரையிடுக