வார்த்தை வதைகளும் வார்த்து எடுக்கப்படும் மனிதமும்
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட நச்சுவாயுக்களை விடவும் கொடூரமானது, நம் அன்றாட உரையாடல்களில் நாம் மிகச் சாதாரணமாகத் தூவிச் செல்லும் வார்த்தைகள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைத் துளைக்கும் என்றால், உடல் உருவக் கேலி என்ற உளவியல் ஆயுதம் ஒரு மனிதனின் ஆன்மாவை, அவனது அடியோட்டமான அடையாளத்தைச் சிதைத்து விடுகிறது. இது வெறும் நாகரிகமற்ற கிண்டல் பேச்சு அல்ல, ஒரு மனிதனின் ஆழ்மனதில் காலத்திற்கும் ஆறாத வடுக்களை வடித்தெடுக்கும் ஒரு மறைமுக வன்முறை.
நமது சமூக அமைப்பில், என்னடா ஆள் ஒரு மாதிரிப் போயிட்டாய் என்றோ, வீட்டில சாப்பாடு போடுறதே இல்லையோ என்றோ கேட்கப்படும் கேள்விகள் சலனமற்ற ஒரு குளத்தில் வீசப்படும் கற்களைப் போன்றது. அக்கறை என்ற முகமூடியணிந்து வரும் இக்கேள்விகள், கேட்பவரின் தன்னம்பிக்கையை அடியோடு வேரறுக்கக் கூடியவை. ஒரு மனிதன் தனது சொந்த உடலையே ஒரு சுமையாகவோ, கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க வெட்கப்படும் ஒன்றாகவோ கருதத் தொடங்கும் போது, அவனது சுயமரியாதை முற்றாகப் சாம்பலாகிப் போகின்றது.
உளவியல் ரீதியாகப் பார்த்தால், தொடர்ச்சியான இவ்வாறான விமர்சனங்கள் ஒருவரைத் தனது சமூகத் தொடர்புகளிலிருந்து முற்றாக ஒதுங்கச் செய்கின்றன. நான் மற்றவர்கள் கேலி செய்யும் உருவத்தில் இருக்கிறேன் என்ற எண்ணம் ஒருவரது ஆழ்மனதில் பதியும் போது, அது தாழ்வுச் சிக்கலை உருவாக்கி, நாளடைவில் மீள முடியாத கடும் மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். சமூகத்தில் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஒரு அக்கறை கலந்த கலாச்சாரமாக அநாகரிகமாகப் பார்க்கப்பட்டாலும், அது உண்மையில் மற்றவரது மனவெளியை அத்துமீறி ஆக்கிரமிக்கும் செயலாகும்.
மனிதர்கள் தங்களின் சொந்தக் கவலைகளையும் தோல்விகளையும் மறைப்பதற்காகவோ அல்லது தங்களை மேலானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவோதான் மற்றவர்களின் உருவத்தைக் கேலி செய்கிறார்கள். இது ஒரு பாதுகாப்பு இயங்குமுறை போன்றது. ஆனால், இதைக் கேட்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். ஒரு பெண்ணைப் பார்த்து கறுத்துப்போயிட்டாய் என்றோ, ஒரு ஆணைப் பார்த்து தடிச்சுக் கூன் விழுந்துட்டாய் என்றோ சொல்லும் போது, அந்த மனிதன் தன் இருப்பையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகிறான்.
உண்மையில், ஒருவரது உடல் எடை அதிகரிப்பதோ அல்லது குறைவதோ அவரது மனநிலை, ஹோர்மோன் மாற்றங்கள் அல்லது மருத்துவப் பின்னணிகளோடு நெருங்கிய தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்பு வழங்குவது அறியாமையின் வெளிப்பாடே.
நாம் மற்றவர்களை அவர்களின் குணத்திற்காகவும் திறமைக்காகவும் மட்டுமே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரது உடலமைப்பை வைத்து அவரை மதிப்பிடுவது, நமது குறுகிய மனப்பான்மையையும் அகக் கண் குருட்டையுமே காட்டுகிறது. அன்பும் அக்கறையும் உருவத்தில் இல்லை, அது நாம் மற்றவருக்குக் கொடுக்கும் மரியாதையிலும் பாதுகாப்பான உணர்விலும்தான் இருக்கிறது.
ஒரு மனிதனின் அழகை அவனது எடையிலோ அல்லது தோற்றத்திலோ தேடுவதை விடுத்து, அவனது எண்ணங்களின் தூய்மையில் தேடுவோம். ஒவ்வொரு உடலும் ஒரு தனித்துவமான காவியம் என்பதை உணர்ந்து, மற்றவர்களின் உடலமைப்பை விமர்சிப்பதைக் காட்டிலும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்பை நம் சந்ததிக்குக் கற்றுக்கொடுப்போம்.
தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் ஆன்மாவைக் கொண்டாடும் போதுதான், நம் சமூகம் உண்மையான நாகரிகத்தை எய்தும்


கருத்துகள்
கருத்துரையிடுக