நூல் : சிறார்கள் கொண்டாடும் சித்திரைத் திருவிழா பதிப்பு ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : சிறார்கள் கொண்டாடும்
சித்திரைத் திருவிழா
பதிப்பு ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : 36 பிரான்சிஸ் பதிப்பகம். மகிழ் பூ தெரு,
பாமா நகர், தபால் தந்தி நகர் அஞ்சல்,
மதுரை-625 017.
பக்கங்கள் 77, விலை ரூ. 300
******
மதுரையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் தன்னம்பிக்கை உரை வீச்சாளர், புகைப்படக் கலைஞர், எழுத்தாளர், பதிப்பாளர் என பன்முக ஆளுமையாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ்.
“சிறார்கள் கொண்டாடும் சித்திரைத் திருவிழா” என்ற பெயரில் சித்திரைத் திருவிழா பற்றிய கருத்துக்களை, கவிதைகளை, புகைப்படங்களை வண்ணத்தில் ஆவணப்படுத்தி மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார். சிறார்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் கொண்டாடும் சித்திரைத் திருவிழா. உலகமே வியந்து பார்க்கும் சித்திரைத் திருவிழா. நாத்திகனான நான், என் மனைவி சித்ராவின் வேண்டுகோளுக்கிணங்க வருடாவருடம் சென்று காண்பித்து வருவேன். நானும் ரசித்து வருவேன்.
வடக்குமாசி வீதியில், வீட்டுவாசலில் சித்திரைத் திருவிழா ஊர்வலத்தை என் மனைவி சித்ரா தவறாமல் ரசிப்பார். குழந்தைகள் கடவுள் வேடமிட்டு வரும் ஊர்வலத்தை ரசிப்பதற்-காகவே சொந்த வீடு ஆரப்பாளையத்தில் கட்டியபோதும், அய்யாபங்களாவில் கட்டியபோதும் வர மறுத்து விட்டு, ஒத்தி வீட்டிலேயே இருந்து, வடக்குமாசி வீதியில் வாசலில் இந்த ஊர்வலத்தை ரசித்த மனைவி 14-05-2026ல் மறைந்து விட்டாள்.
இந்த நூல் படித்தபோதும், படங்களைப் பார்த்தபோதும், அன்பு மனைவி சித்ராவே நினைவில் வந்தாள். சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில் குழந்தைகள், கடவுள் வேடமிட்டு வருவதை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கலாகேந்திரா நாட்டிய நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் சைலஜா மகாதேவன். அவரும் காலமாகி விட்டார். அவரது கணவர் மகாதேவன், மகள் அம்சினிக்கு ஊக்கம் தந்து பரதநாட்டியத்தில் உலக சாதனை நிகழ்த்தி வருகிறார். இப்படி பல்வேறு நினைவுகளை மலர்வித்தது இந்த நூல்.
பதிப்பாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் கிருத்துவராக இருந்தபோதும், மதங்கள் கடந்து மதுரையின் மாண்பை, கலையை, பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து இயம்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பலரிடமிருந்து கருத்துக்களை, கவிதைகளை பெற்று, தேனீ மலரிலிருந்து தேன் சேகரிப்பது போல சேகரித்து ஆவணப்படுத்தி உள்ளார். இந்த நூல் படித்தால் போதும், சித்திரைத் திருவிழா என்றால் என்னவென்று முழுவதும் அறிந்துகொள்ள உதவிடும் தகவல் களஞ்சியமாக உள்ளது.
பளபளப்பான தாள்களில் வண்ணப் புகைப்படங்களுடன் மிகவும் நேர்த்தியாக பதிப்பித்து இருப்பதற்கு பாராட்டுகள். அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் சிறப்பு. மதுரையின் பெருமைகளில் ஒன்றான ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் முனைவர் சூ.வானதி
அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். பணிநிறைவு பெற்று உள்ளார். முனைவர் யாழ் சந்திரா அவர்கள் ஸ்ரீ மீனாட்சிி அரசிினர் மகளிர் கலைக்கல்லூரிக்கு (தன்னாட்சி) முதல்வர் ஆகி உளளார்.
மூத்த பத்திரிகையாளர் அண்ணாமலை அவர்கள், நாளைய “மதுரையின் நங்கூர எழுத்துக்கள்” என்று தலைப்பிட்டு வாழ்த்துரை வழங்கி உள்ளார். மூத்த எழுத்தாளர் ப.திருமலை, “மனிதத்தின் மறுமதிப்பு” என வாழ்த்துரை வழங்கி உள்ளார் நூல் தயாரிக்கும்போதே என்னிடமும் கட்டுரை, கவிதைகளை கேட்டார். நான் நாத்திகன் என்பதால் அன்போடு மறுத்துவிட்டேன். இப்போது நூலைப் பார்த்து விட்டு, கவிதை,கட்டுரைகளை எழுதிக் கொடுத்து இருக்கலாமே என்று வருந்தினேன். அவ்வளவு சிறப்பாக நூல் வந்துள்ளது.
கவிஞர்கள் சரளா கண்ணன், அழகுபாண்டி, விக்னேஷ், பாலமுருகன், நந்தினி ஆகியோரிகள் கவிதை மிக நன்று. முக்கிய பிரமுகர்கள் பலர் சித்திரைத் திருவிழா பற்றி கூறிய கருத்துக்கள் அவர் களின் வண்ண புகைப்படத்துடன் இடம்பெற்று இருப்பது சிறப்பு.
இந்த நூல் படித்தபோது, வெவ்வேறு மாதங்களில் நடந்த சித்திரைத் திருவிழாவில், விவசாய வேலை இல்லாத சித்திரை மாதத்தில் ஒருங்கிணைத்து, சைவ, வைணவ சண்டைகளை முடிவுக்கு கொண்டு வந்து, ஒற்றுமை ஏற்படுத்திய திருமலை நாயக்க மன்னரையும் நினைத்துப் பார்த்தேன். அவர் எழுப்பிய பிரம்மாண்ட திருமலை நாயக்கர் அரண்மனையில் 25 ஆண்டு காலம் பணிபுரிந்து அரண்மனையை அங்குலம் அங்குலமாக ரசித்த கலை ரசிகன் நான்.
சித்திரைத் திருவிழாவில் வரும் கலைஞர்களின் புகைப்படங்கள், கோபுர புகைப்படங்கள், கடவுள் வேடமிட்ட குழந்தைகள், ஆற்றில் அழகர் இறங்கும் புகைப்படங்கள், விளையாட்டு பொருட்ள் விற்கும் கடைகளின் புகைப்படம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பக்தர், பத்ரகாளி வேடமிட்டவர், தேர்த் திருவிழா, பஞ்சுமிட்டாய் விற்பவர், தேன் மிட்டாய் விற்பவர், பூமாலை, உபகரணப் பொருட்கள் விற்கும் கடைகள், இளைஞர்கள் தூக்கிப் போட்டுப் பிடித்தல் என சித்திரைத் திருவிழா புகைப்படங்களை காட்சிப்படுத்தி, சித்திரைத் திருவிழாவை ஒரு நூலின் மூலம் கண்டுகளிக்க வைத்து, மலரும் நினைவுகளை மலர்வித்துள்ளார்.
பதிப்பாசிரியர் நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர்கள், புகைப்படக் கலைஞர் என்பதால், தான் எடுத்த நூற்றுக்கணக்கான புகைப்படங்களில், தேர்ந்தெடுத்த சில படங்களை மட்டும் நூலில் வைத்து மெருகேற்றி உள்ளார்.
படித்துவிட்டு தூக்கி போடும் சராசரி நூல் அல்ல. பாதுகாப்பாக வைத்து இளையதலைமுறைக்கும் குழந்தை-களுக்கும் காட்ட வேண்டிய கலைப்பொக்கிசமாக வந்துள்ளது. மதுரையின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக வந்துள்ள அற்புத நூல். உலகத் தமிழர்கள் அனைவரும் வாசித்துப் பார்த்து, ரசிக்க வேண்டிய கலைப்படைப்பு இந்த நூல், கடுமையாக உழைத்து உருவாக்கி உள்ள பதிப்பாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.


கருத்துகள்
கருத்துரையிடுக