நூல் : சொற்களின் சொரூபம் (ஹைக்கூ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : சொற்களின் சொரூபம் (ஹைக்கூ)
நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : தமிழ் அலை 3, சொக்கலிங்கம் காலனி,
தேனாம்பேட்டை, சென்னை-600 086.
பக்கங்கள் 100, விலை ரூ. 100
******
நூல் ஆசிரியர் கவிஞர் ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன் அவர்கள் மகாகவி ஈரோடு தமிழன்பன், முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் இருவரின் வாழ்த்தைப் பெற்று நூலில் இடம்பெறச் செய்துள்ளார். கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளார்.
சென்னையில் நடந்த ஹைக்கூ முற்றம் விழாவில் நூலாசிரியர் இந்த நூலை என்னிடம் வழங்கினார். ஹைக்கூ வடிவத்தை நன்றாக உள்வாங்கி ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள்.
இரவு வாகன சோதனை
ஊதுகிறான் நோட்டை
அணைகிறது அதிகாரம்!
இன்றைக்கு பல இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். காவலர்களும் பணத்தை கையூட்டாக வாங்கிக் கொண்டு விட்டுவிடும் அவலத்தை காட்டி உள்ளார். வாயை ஊதச்சொல்லி குடித்ததைக் கண்டுபிடித்ததும், பணத்தை ஊதிவிட்டு செல்கிறான் என்கிறார். இளைஞர்களும் காவலர்களும் திருந்திட வேண்டும்.
எல்லாம்
மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான்
சிசிடிவி கேமிரா!
முதல் இரண்டு வரிகளைப் படித்ததும் கடவுள் என்று நினைப்பார்கள, ஆனால் அதுவல்ல, கண்காணிப்பு கருவி என்று உணர்த்துகின்றார். எங்கும் எதிலும் கண்காணிப்பு கருவி தான். பல திருட்டுகளை கண்டுபிடிக்க உதவி வரும் கருவியாகி விட்டது. நூலாசிரியர் ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். ஹைக்கூவில் சில இடங்களில் ஆங்கிலச் சொற்கள் வருகின்றன. வருங்காலங்களில் தவிர்த்திடுங்கள்.
நூல் வடிவமைப்பு, உள்ளே உள்ள படங்கள் யாவும் நன்று. சிறப்பாக பதிப்பித்து உள்ளார். பாராட்டுகள்.
மெழுகின் தியாகத்திற்கு
சற்றும் குறையாதது
தீக்குச்சியின் மரணம்!
மெழுகு உருகுவது கண்டு நாமும் உருகுகிறோம். ஆனால் தீக்குச்சியின் தற்கொலையை நாம் கண்டு கொள்வதில்லை. தீக்குச்சியால் தான் தீபம் சுடர் விடுகின்றது. இதே கருத்தை வலியுறுத்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை ஒன்று உண்டு. அதனை நினைவூட்டியது நன்று.
காட்டன் சேலை
காற்றின் லீலை
கவிதை!
சேலை, லீலை என இயைபுச் சொற்களின் மூலம் சொற்சிக்கனத்துடன் நல்ல கவிதை ஹைக்கூ வடித்துள்ளார். காட்டன் சேலை என்பதற்குப் பதிலாக பருத்திச் சேலை என்று எழுதினாலும் நன்றாக இருக்கும்.
பந்தலோ பாடையோ
ஒரே பாஷை தான்
பூக்களுக்கு!
பூக்கள் மலர்ந்து மகிழ்ச்சியாகவே தோற்றமளிக்கும்.
துக்க வீடு என்பதற்காக மலர்கள் மலராமல் இருப்பதில்லை. மலர்ந்து மகிழ்ச்சியாகவே இருக்கும்.
மதில்சுவர் தாண்டியதற்காக
வெட்டப்பட்ட இருவீட்டு மரங்கள்
கட்டிப்பிடித்து அழுதது பூமிக்கடியில்!
அடுத்த வீட்டுக்காரரின் மரக்கிளை, தன் சுவர் தாண்டி வந்துவிட்டால் பொறுக்க மாட்டார்கள். மனிதர்கள் சண்டை இடுவார்கள், அதனால் கிளைகளை வெட்டி விடுவார்கள். அதற்காக பூமிக்கடியில் வேர்கள் அழுகின்றன, நல்ல கற்பனை. மனிதபேதம் அஃறிணைகளுக்கு இல்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
முறைப்பதே முழுநேர வேலையா?
இடைவேளையில்
முத்தமும் செய்!
காதலன் காதலி முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே, இடை(வேளை)யில் முத்தம் செய் என வேண்டுகோள் வைப்பது போல ஹைக்கூ வடித்துள்ளார்.
உண்மையே
அந்தப்பக்கம் போகாதே
தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!
அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவது அனைத்தும் பொய்தான். எனவே, உண்மையே நீ அந்தப்பக்கம் போகாதே என எச்சரிக்கை செய்து எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.
கட்டிய வீடு
கறைபடாமல்
குழந்தையில்லாத் தம்பதி!
குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுவற்றில் சித்திரங்கள் வரைந்து கறை படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகள் இல்லாத வீடு கறையின்றி சுத்தமாகவே இருக்கும். குழந்தை இல்லாதவர்களின் மனக்குறையை,கவலையை உணர்த்தியது சிறப்பு.
ஓ என்றழுகிறது
தற்கொலை செய்து கொண்ட
நீர்வீழ்ச்சி!
மலையிலிருந்து அருவியாக விழும் நீர்வீழ்ச்சி சத்தத்தை ஓவென்று அழுவதாக கற்பனை செய்து தற்கொலை செய்வதாகவும் எழுதியது நல்ல கற்பனை.
நிறைகுடம்
தழும்பும்
சாட்சி நீ!
காதலியை நிறைகுடம் என்கிறார். அறிவாலும் அழகாலும் நிறைகுடமாக இருந்தாலும் நடக்கும்போது தழும்பும் என்று ஹைக்கூ வடித்தது நன்று.
மொத்தத்தில் நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளை எழுதி நூலாசிரியர் கவிஞர் ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன் எழுதிய கோணத்தில் மட்டுமல்ல, படிக்கும் வாசகர்கள் அவரவர் கோணத்திலும் சிந்திக்க வைக்கும் விதமாக வடித்துள்ளார். பாராட்டுகள், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.
****** கவிஞர் இரா .இரவி இரா



கருத்துகள்
கருத்துரையிடுக