நூல் : மனமது செம்மையானால்
நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : THIYAGA RAMESH, சிங்கப்பூர்.
******
நூலாசிரியர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின் சொந்த ஊர் திட்டக்குடி வட்டத்தில் உள்ள கணபதிக்குறிச்சி கிராமம் ஆகும். இங்கிருந்து படித்து, வளர்ந்து, சிங்கப்பூர் சென்று பணிசெய்து, குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர். நூலின் இறுதியில் வாழ்க்கைக் குறிப்பும் பிரசுரம் செய்தது சிறப்பு.
கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களும், திண்டுக்கல் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி அவர்களும் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளனர். நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன. நூலாசிரியர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின் என்னுரையும் நன்று.
‘மனமது செம்மையானால்’ நூலின் தலைப்பே சிறப்பு. இந்த வரிகளை வாசித்ததும், அடுத்த வரியான மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்ற வரியும் நினைவிற்கு வந்து விடுகிறது. சித்தர் பாடல் வரியை தலைப்பாக்கியது சிறப்பு. புதுக்கவிதைகளும், நம் மனதை செம்மைப்படுத்தும் விதமாக செதுக்கி உள்ளார். பாராட்டுகள்.
இழப்பு யாருக்கு?
ஒளி வேண்டாமென்று கிளையின் அடியில்
இலை மறைத்துக்கொண்டது பச்சையமற்றுப்
பழுத்து விடுவது / இலை தான்!
மண் வேண்டாமென்று / மண்ணை
விதை தட்டிவிட்டால் / முளைக்காமலே
முடிந்து போவது / விதை தான்
எல்லாம் மண்ணாகும் / மண் மட்டும்
மண்ணாகவே இருக்கும் / தெளிந்து உணர்ந்தால்
எல்லாம் பிடிபடும்!
ஒளி வேண்டாமென்று இலை ஒதுங்கினால் இலைக்குத்தான் நட்டம். மண் வேண்டாமென்று விதை ஒதுங்கினால் விதைக்குத்தான் நட்டம். எனவே ஒதுங்குவது முறையல்ல என்பதைச் சொல்லி, மண் மட்டும் மண்ணாகவே இருக்கும் என்று எழுதியது சிறப்பு. தெளிந்து உணர்ந்தால் எல்லாம் பிடிபடும். மனமது செம்மையாகும் என்கிறார்.
தன்னை வாழ வைத்துள்ள சிங்கப்பூருக்கு வாழ்த்துப்பா பாடி உள்ளார்.
சிங்கப்பூரின் சீர்மிகு சிந்தனை
சிறுபான்மை சமூகத்தை
அன்னைபோல அரவணைத்து
சக மனிதனை நேசித்துப் பாதுகாக்கும்
சிங்கப்பூரின் சீர்மிகு சிந்தனை
பூமிக்கொரு புதிய பாதை!
சிங்கார சிங்கப்பூரை மனம் திறந்து பாராட்டி உள்ளார். சிங்கப்பூரின் சிறந்த குணத்தை நன்கு விளக்கி உள்ளார். தமிழர்கள் மனம்திறந்து பாராட்டும் நாடாக சிங்கப்பூர் இருப்பது சிறப்பு.
ஏ மனமே!
இயன்றவரை / இருப்பின் சுவையை அறியப்பழகு
நீ / நீயாக இரு / நிமிடங்களைச் சுவாசி /
நிகழ்காலத்தில் இருக்கப் பழகு!
திசைகாட்டி / கூடவே / வருமென்று!
சிறுபிள்ளையாய் / எதிர்பார்க்காதே!
தந்திரமில்லாமல் / இயங்கப் பழகு / அது அகத்துக்கு
மட்டுமன்று / முகத்துக்கும் / அழகு சேர்க்கும்!
மனம் எப்படி இருக்க வேண்டுமென்று விளக்கி உள்ளார். நிகழ்காலத்தில் வாழ், திசைகாட்டி வருமென்று எதிர்பார்க்காதே! சூதுவாது இன்றி, தந்திரமின்றி வாழ்ந்தால் அகமும் முகமும் அழகு பெறும் என்கிறார்.
மனமது செம்மையானால்
ஏ மனமே / உன்னை நினைத்து / உண்மையில்
பயப்படுகிறேன் / ஓயாமல் / ஒப்புமை பார்த்தே
ஓய்ந்து போகிறாய் / கொடுப்பதைக் காட்டிலும்
எதையும் பெறுவதிலேயே / ஆசை உனக்கு?
தாய்ப்பாலுக்கு ஏங்கும் / சிறுபிள்ளையாக
உனக்கு எதைப் பார்த்தாலும் / ஏனிந்த ஏக்கப்பசி?
நூலின் தலைப்பிலான கவிதை நனிநன்று. அலைபாயும் மனதை செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தி, கட்டுப்படுத்தி வாழ்ந்தால் வாழ்வாங்கு வாழலாம் என்ற மந்திரத்தை புதுக்கவிதையால் உணர்த்தியது சிறப்பு.
உதிர மட்டுமா?
உதிர மட்டுமா / பூக்கிறது பூ
அது காயாய் / கனியாய் / விதையாய்
மீண்டும் மீண்டும் / தன் இருப்பை பதிவு செய்ய
இறப்பதற்கு மட்டுமா? பிறக்கிறோம் நாம்,
பூ, எப்படி காய்கனியாய், விதையாய், மீண்டும் மீண்டும் பூக்கிறதோ அதுபோல மனிதர்களும் இறக்க மட்டும் வரவில்லை
இருக்கும்போது எதையாவது செய்து சாதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை கவிதையின் மூலம் எளிய உவமையின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுகள்.
ஆங்கிலம் பேசும்போது / படபடக்கும்
அவள் உதடுகள் / தமிழ் பேசும்போது
மட்டும் / அழகாய் சுழிகிறது / ‘ழ’ வாய்
மொழியால் / அறிவு மட்டுமல்ல
அழகும் கூடுகிறது / யாருக்கும்!
ஆங்கிலம் பேசும்போது படபடக்கிறாள், தமிழ் பேசும்போது அழகாகிறாள் என்கிறார். தமிழுக்கு அழகாக்கும் ஆற்றல் உண்டு என்கிறார். அது மட்டுமல்ல, தமிழுக்கு வாழ்நாளை நீட்டிக்கும ஆற்றலும் உள்ளது என ஆய்வாளர்கள் உரைக்கின்றனர் இன்று. வேறு எந்த மொழிகளுக்கும் இல்லாத தனிச்சிறப்புகள், தமிழ்மொழிக்கு உண்டு என்பதில் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்வோம்.
கோழி மிதித்தா
சகியே நீ / கோபப்படும் போதெல்லாம்
நெருங்கவே முடியாத / ஆதவக் குழம்பாகத்
தகதகக்கிறாய் ! கடுகாக / நீ வார்த்தைகளைப்
படபடவென வெடிக்கும் போதெல்லாம்
கொரோனா வார்டில் இருக்கும் / உள்நோயாளியாகத்
தவித்துப் போகிறேன் /
கோபச்சூட்டில் நீ / மனப் பாதத்தைத்
தைக்கும் / நெருஞ்சி முள் வார்த்தைகளைச்
சடுசடுவென வீசி விட்டுக் / குளிர்ந்தவுடன் நீ
சாரி கேட்கும் போதெல்லாம் / தமிழ் போல்
இனிப்பதால் / சிறுகுழந்தையாக / உன்னைப்
பாவித்து விடுகிறேன் / ம் ம் /கோழி மிதித்தா
குஞ்சு முடமாகப் போகிறது காதல் / எதையும்
காக்கும் / எதையும் கடக்கும்
மனைவியின் கோபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி, பின் மனம் குளிர்ந்து, மன்னிப்பு கேட்கும் விதத்தை புதுக்கவிதையால் வடித்து, வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல நினைக்க வைத்து வெற்றி பெறுகிறார். நூலாசிரியர் கவிஞர் தியாக இரமேஷ் புதுக்கவிதை விருந்து வைத்துள்ளார். பாராட்டுகள்.


கருத்துகள்
கருத்துரையிடுக