நூல் : அரசமரத்து விழுதுகள் (ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் ஜெயச்சந்திரன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : அரசமரத்து விழுதுகள்
(ஹைக்கூ கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் ஜெயச்சந்திரன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
******
நூலாசிரியர் கவிஞர் ஜெயச்சந்திரன் சகலகலா வல்லவர். வங்கிப்பணி, இலக்கியப்பணி என இயங்கிக்கொண்டே இருப்பவர். வெகுசிலருக்குத்தான் நன்றாகப் பேசவும், எழுதவும் வரும். அப்படிப்பட்ட வெகுசிலரில் சிகரமாக விளங்குபவர். அறிவுக்கடல் வலம்புரிஜான் தலைமையில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் பேசியவர். ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் உரை நிகழ்த்தியவர். நூற்றுக்கணக்கான பட்டிமன்றங்களில் நடுவராக விளங்கியவர். பேச்சாற்றல் மட்டுமல்ல, படைப்பாற்றலும் வரும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரே நேரத்தில் மூன்று கவிதை நூல்கள் வெளிவர உள்ளன. அந்த அளவிற்கு படைத்துள்ளார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்திடும் மூன்று வரி முத்தாய்ப்பு. ஹைக்கூ கவிதையின் நுட்பத்தை நன்கு அறிந்து, கண்ட காட்சிகளை, பாதித்த செய்திளை அரசமரத்து விழுதுகள் என்ற பெயரில் ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். பாராட்டுகள்.
கூட்டைத் தேடி அலைகிறது
கண்களை இழந்த
தாய் பறவை!
ஏதோ விபத்தில் பார்வையை இழந்த தாய்ப்பறவை வீட்டிற்கு சென்றிட பரிதவிக்கும் பரிதவிப்பை காட்சிப்படுத்தி உள்ளார். மாற்றுத் திறனாளிகளின் இன்னலையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
பிணத்தைப் பார்த்து
அழுகிறது சொந்தம்
நாளை நமக்கும்!
மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் உறுதி. என்று? என்பதுதான் தெரியாது. யாருக்கும் விதிவிலக்கு என்பது இல்லை. பிணத்தைப் பார்த்ததும், நாளை நமக்கும் மரணம் வரலாம் என்ற எண்ணம் சொந்தங்களுக்கு வரும். அதனைக் காட்சிப்படுத்தியது சிறப்பு.
குட்டி மானை
விரட்டிப் பிடித்த புலி
குட்டிகளைத் தேடுகிறது!
வெளியிலே புலி, வீட்டிலே எலி என்று ஆண்களைச் சொல்வார்கள். அதுபோல மான்களை வேட்டையாடிய வீரப்புலிக்கு தன் குட்டிகளை தேடுவது சிரமமாக உள்ளது. குட்டிப்புலிகள் மிகவும் சுறுசுறுப்பாக ஓடி மறைந்து விடுகின்றன. வீரப்புலி தேடி அலைகிறது என காட்சிப்படுத்தி உள்ளார்.
வியர்வைத் துளிகளை
முந்தானையில் சேமித்தாள்
வெயிலில் சித்தாள்!
உலகம் முழுவதும் வெப்பமயமாகி வருகிறது. வெப்பத்தில் வேலை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் சித்தாள் வேலையே வெயிலில்தான் நடக்கும். வெயிலுக்கு அஞ்சிட முடியாது. வழியும் வியர்வையை முந்தானையில் துடைத்துவிட்டு, வேலையைத் தொடர வேண்டிய நிலை சித்தாளுக்கு. உழைப்பின் மேன்மையை, தன்மையை ஹைக்கூவில் வடித்துள்ளார்.
வேப்ப மரத்தடியில்
வெயிலுக்கு ஒதுங்கினேன்
விரட்டியது காக்கை எச்சம்!
வேப்பமர நிழல் இதமாக இருக்கும். மரத்தின் நிழலில் ஒதுங்கி ஓய்வெடுப்பவர் மீது காக்கை எச்சமிட்டு விரட்டி விடுகிறது. மரத்தை வெட்டிய மனிதனே, மரநிழலில் நிற்காதே போ என விரட்டுவது போல எண்ணத் தோன்றியது.
ரேசன் கடைக்கு
நடந்தார் பெரியவர்
சர்க்கரை குறைந்திருந்தது!
நடந்தால் சர்க்கரையின் அளவு குறையும் என்று மருத்துவர் சொல்வதால் பலரும் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். ரேசன் கடைக்கு வாகனத்தில் செல்லாமல் நடந்து சென்றால், சர்க்கரை அளவு குறையும் என்கிறார். இதில் இன்னொரு பொருளும் உள்ளது. ரேசன் கடையில் போடும் சர்க்கரையின் அளவும் குறைந்தே இருக்கும். சரியான எடையில் அவர்கள் போடுவதே இல்லை. என்றும். இப்படியும் பொருள் கொள்ளலாம்.
படித்த பாடங்கள்
பயன் தரவில்லை
தேர்வில் வினாத்தாள்!
மாணவன் படித்துவிட்டு செல்கிறான், ஆனால், இவன் படித்த பகுதியிலிருந்து வினாக்கள் வரவில்லை. படிக்காத பகுதியிலிருந்து வினாக்கள் வந்து இருப்பதால், விரக்தியில மாணவன் தேர்வு அறையில் விழித்துக் கொண்டு இருப்பதை காட்சிப்படுத்திய ஹைக்கூ நன்று.
மஞ்சள் கயிறு மலிவாய் கிடைக்கிறது
முடிச்சுப் போடுவது
அரிதாய் நடக்கிறது!
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், திருவிழா வந்துவிட்டால் மஞ்சள் கயிறை நன்கொடையாகவே பலரும் வழங்குவார்கள். நிறைய கொடுப்பார்கள். வாங்கியவற்றில் ஒன்றைக் கட்டிக்கொண்டு, மீதியை வீட்டில் வைத்து விடுவார்கள். வரதட்சணைக் கொடுமை மற்றும் ஜாதகப் பொருத்தம், ராசிப்பொருத்தம் காரணமாக ஆண், பெண் இருபாலாருக்குமே திருமணம் நடக்காமலே முதிர்கன்னிகளும், முதிர்காளைகளும் பெருகி விட்டனர். அதனை நினைவூட்டியது இந்த ஹைக்கூ.
காலை நனைக்க
கடற்கரைக்கு வந்தேன்
ஊரை நனைத்தது “சுனாமி”!
சமுத்திரத்தில் காலை நனைக்க கடற்கரைக்கு செல்வது வழக்கம். ஆனால் சுனாமி வந்து ஊரையே நனைத்து காட்டிவிட்டு சென்ற கொடுமையை நினைவூட்டும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.
வெளிச்ச மோகத்தில் விட்டில்கள்
போலிகளில் மயங்கி
மனிதர்கள்!
ஆம். வெளிச்ச மோகத்தில் விளக்கில் வந்து விழுந்து, விட்டில்கள் மடிவது போல, இன்றைய மனிதர்கள் நாகரீக மோகத்தில் துரித உணவை உண்டு, துரிதமாக இறக்கிறார்கள். துரித உணவின் தீங்கை இன்னும் உணரவில்லை இவர்கள். அதனை உணர்த்தும் ஹைக்கூ நன்று.
மொத்தத்தில் ஹைக்கூ விருந்து வைத்து, சிந்தனை மின்னலை ஏற்படுத்தி உள்ளார். உள்ளே சென்று படித்து சுவைத்துப் பாருங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக