மதிப்புரை நூலின் பெயர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா, M.A., M.Ed.,
மதிப்புரை
நூலின் பெயர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா, M.A., M.Ed.,
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை – 600 017.
விலை : 100 பக்கங்கள் : 102
கவிஞர் இரா. இரவி ஐயா அவர்கள் எனது குரு. எனக்குக் கவிதை உலகை அறிமுகம் செய்து வைத்தவர். அவரின் 37-ஆவது நூல் இது. கவிஞர் இரா. இரவி அவர்கள் சுற்றுலாத்துறையில் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பாராட்டும் பெற்ற இவர் தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற்றவர். கவிஞர்களால் ‘ஹைக்கூ இரவி’ என அழைக்கப்படுபவர். பல்வேறு ஹைகூ நூல்களின் ஆசிரியர். அவரின் 37ஆவது நூல் ‘சிந்தனைக் கவிஞரின் கவிதாசனின் வெற்றி முழக்கம்’.
கோவையின் தன்னம்பிக்கைக் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட கவிதாசன் ஐயாவின் பல்வேறு நூல்களைப் படித்து மதிப்புரை எழுதி தான் எழுதிய மதிப்புரைகளை கவிஞர் இரா. இரவி அவர்கள் நூலாக தொகுத்துள்ளார்.
இந்நூல் முழுவதும் தன்னம்பிக்கைக் கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றது. நூலின் இறுதி பக்கங்களில் கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கைக் கவிதைகள் இடம்பெறுகின்றது. இனி நூலிற்குள் செல்வோம்.
வானவில் வாழ்க்கை
நூலாசிரியரிடம் சிறிது நேரம் உரையாடினால் போதும் அவரிடம் உள்ள சுறுசுறுப்பு நம்மிடம் தொற்றிக் கொள்ளும் என்கிறார்.
வாழ்வை உயர்த்தும் பண்புகள்
எதிர்நீச்சல் போடும் இயல்பு வேண்டும். எளிதில் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி, பயிற்சி அவசியம். நம்பிக்கை வெற்றியின் மந்திரம் என்கிறார்.
உழைப்பு! உழைப்பு! உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. இளம்பருவத்திலிருந்தே உழைப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். உயர உயரச் சென்றாலும் உழைத்துக் கொண்டே இருங்கள். உயரம் அடைந்துவிட்டோம் என்று உழைப்பை நிறுத்தக்கூடாது.
முப்பது நாட்களில் முன்னேற்றம்
இந்நூலை ஒரு சோம்பேறி கையில் கொடுத்துப் படிக்கச் சொன்னால் அவன் சுறுசுறுப்பான வளம் பெறுவான் என்பது உறுதி. படிக்கும் வாசகர்கள் மனதில் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்ற சராசரி வாழ்வுக்கு முடிவுரை எழுத வைத்து பிறந்தோம் உயர்ந்தோம் சாதித்தோம் இறந்த பின்னம் வாழ்வாம் என்ற நிலைக்கு உயர்த்திவிடுகிறார்.
வெற்றிப்பூக்கள்
‘‘உங்கள் பேச்சு வெட்டிக்கிழிக்கின்ற
கத்திரிக்கோலாக இல்லாமல்
கிழிசல்களைத்
தைக்கிற
ஊசியாக இருக்கட்டும்!’’
நாம் சந்திக்கும் மனிதர்கள் அனைவரிடமும் இதனைக் கடைபிடித்தால் சண்டை வராது. சமரசம் நிலவும்.
வெற்றிக்கீற்றுகள்
‘‘உயிருடன் இருக்க சுவாசிப்பு அவசியம்
உயிர்ப்புடன் இருக்க வாசிப்பு அவசியம்.!’’
திறன்பேசி வருகையின் காரணமாக பலரிடம் வாசிப்பு குறைந்துவிட்டது. சிலரிடம் வாசிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் திறன்பேசி ஒரு நேரம் விழுங்கும் கருவி. அதனை உணர்ந்து அதற்கு அடிமையாகாமல் அளவோடு பயன்படுத்திவிட்டு வாசிப்பிற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் படித்தால் நம்மை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள உதவும். வாசிப்பை நேசிக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
தன்னம்பிக்கை மொழிக்ள் 100
சும்மா இருந்தால் இருப்பு கூட துருப்பிடித்துவிடும். அதுபோல மனிதர்களும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தால் புத்திக்கு துரு பிடித்து விடும். இங்கிக் கொண்டே இருப்பது தான் மனிதருக்கு அழகு. உழைத்துத் தேய்வது குற்றமல்ல உழைக்காமல் தேய்வது தான் குற்றம் என்கிறார். நூலாசிரியர் ‘சிந்தனைக் கவிஞர்’ கவிதாசன் அவர்கள் தன்னம்பிக்கை வளர்பதையே இலட்சியமாகக் கொண்டு நூல்கள் வடித்துள்ளார்.
ஆங்கிலத்திலும்
1. EMOTIONAL INTELLIGENCE
2. SUCCESS AT YOUR REACH
என்னும் இரண்டு நூல்கள் எழுதி உள்ளார். கல்லூரி மாணவர்கள் இந்த நூல்களைப் படித்தால் ஆங்கிலப் புலமையையும் தன்னம்பிக்கையையம் வளர்த்துக் கொள்ளலாம்.
நூலின் இறுதியில் கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
‘‘தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும்
நம் பிக்கை கடலளவு இருக்கட்டும்!’’
‘‘இறுதி செய்யப்பட்ட வெற்றி உனக்கு உறுதி
பரிதியாகப் பயணம் தொடர் சிகரம் உனது!’’ – கவிஞர் இரா. இரவி
என்பதாக நூல் முழுவதும் நேர்மரைக் கருத்துக்களும் தன்னம்பிக்கைத் தகவல்களும் நம்மை சுயமுன்னேற்றதிற்கும் புத்துணர்வுக்கும் வெற்றி வழிகாட்டுதலுக்கம் உறுதி செய்வதாக உள்ளது. கவிதாசன் வெற்றி முழக்கம் என்னும் இந்நூல் படிப்பவர் தன்னம்பிக்கை பாதையில் நடக்க நிச்சயம் உதவும் வெற்றிநூல்.

கருத்துகள்
கருத்துரையிடுக