என்னவள்! - கவிஞர் இரா. இரவி

என்னவள்! - கவிஞர் இரா. இரவி ***** என் உயிரோடு உயிராகக் கலந்தவள் என் உணர்வோடு உணர்வாக நின்றவள்! கண்ணை இமை காப்பது போலவே கண் என காத்து வந்தவள்! திருமணத்திற்குப் பின்னே காதலித்தேன் திரு மனத்தை அவளிடம் தந்து இருந்தேன்! அசைவம் அவள் சாப்பிடுவதில்லை – ஆனால் அசைவத்தில் அத்தனையும் சமைத்துத் தந்தாள்! கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை கல் கண்ட இடமெல்லாம் வணங்குவாள்! என் வழியில் அவள் குறுக்கிடவில்லை அவள் வழியில் நான் குறுக்கிடவில்லை! வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம் வேதனையை பரிசளித்து மறைந்து விட்டாள்! இருசக்கர வாகனத்தில் வந்தான் வில்லன் இனியவளை சாய்த்து விட்டான் கொலைகாரன்! சாலையை கடக்க முயன்ற பாதசாரி மனைவியை உலகத்தை விட்டே அனுப்பி விட்டான் பாதகன்! மாதா, பிதா, குரு மூன்றும் ஒரே வடிவில் மனைவி மாண்பு மிக்கவள் மண்ணிற்கு இரையானாள்! முப்பத்தி நான்கு ஆண்டுகள் மணவாழ்க்கை முத்திரை பதிக்கும் இனிமையான நினைவுகள்! மறக்க முடியவில்லை வாழ்ந்த தருணங்கள் மனதில் கல்வெட்டாக பதிந்து வாட்டுகின்றன! என் கவிதையை எப்போதும் பாராட்ட மாட்டாள் இன்னும் நான் நன்றாக எழுத வேண்டும் என்பதற்காக! மனைவியை மதியுங்கள் நன்றி சொல்லுங்கள் மனைவியைப் பாராட்டுங்கள் போற்றிப் புகழுங்கள்! இறந்தபின் வருந்துவதை விட இருக்கும்போதே பாராட்டுங்கள் இருக்கும்போதே பாராட்டாத கஞ்சன் நான்! ••••••

கருத்துகள்