என்றும் நினைவிலாடும் நன்னாள்...மு .முருகேஷ்
நேற்றைய தினம் (2026 மே 24, ஞாயிறு) மிகுந்த மகிழ்வோடும் நெகிழ்வோடும் கழிந்தது.
நான் எப்போதும் மதித்துக்கொண்டாடும் இரண்டு தமிழ்ப் பேராளுமைகளுடன் உடனிருக்கும் வாய்ப்பும், அவர்களது பாராட்டினைப் பெற்ற தருணமும் என்றும் என் நினைவில் பதிந்திருக்கும்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யும் இணைந்து முன்னெடுத்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் யுபிஎஸ்சி தேர்விற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் நடைபெற்றது.
காலை 9 மணியிலிருந்தே மாணவக் கண்மணிகள் வரத் தொடங்கிவிட்டார்கள். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான திரு. வெ.இறையன்பு, ஐஏஎஸ்., மற்றும் திரு. வெ.திருப்புகழ், ஐஏஎஸ்., இருவரும் அரங்கிற்குள் நுழைந்த போது, அரங்கம் நிறைந்த கூட்டம். நேரம் செல்லச் செல்ல உட்கார இருக்கையின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் நின்றுகொண்டே உரைக்குச் செவிமடுத்தனர்.
மதுரை, விழுப்புரம், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களிலிரிந்தும் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நம் தமிழ்நாட்டு மாணவர்கள் வரும் ஆண்டுகளில் இந்திய குடிமைப்பணித் தேர்வில் இன்னும் அதிகமான அளவில் வெற்றிப்பெற வேண்டுமென்கிற உயர்ந்த எண்ணத்தோடு உள்ளத்திலிருந்து வாழ்த்துக்களையும் வார்த்தைகளையும் பகிர்ந்துகொண்டனர் இரு ஆளுமைகளும்.
தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் முன்னோடியாகக்கொண்டு முன்னேற வேண்டிய இரு ஆளுமைகளின் அன்பிலும் வாழ்த்திலும் கழிந்தோடிய நேற்றைய நாள்... என்றும் இனிய நாளே! குறைவாகக் காண்க







கருத்துகள்
கருத்துரையிடுக