கலைமாமணி கு .ஞானசம்பந்தன் கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .

கலைமாமணி கு .ஞானசம்பந்தன் கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் . வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை 600 017. தொலைபேசி 044 24342810/24310769 பக்கம் 68 விலை ரூபாய் 70 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com மதிப்பிற்குரிய கவிஞா இரா.இரவி அவர்களுக்கு, தாங்கள் அனுப்பிய கு. ஞானசம்பந்தன் கருவூலம் என்ற மதிப்புரை நூலை வாசித்தேன், இரசித்தேன், சிரித்தேன் என சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு. அட்டைப்படமே நூலுக்கு விளம்பரமாகவும் அமைந்திருக்கிறது. வானதி பதிப்பகத்திற்கு வாழத்துக்கள். நூலை வாசித்து வியந்தவர்களால் தான் மதிப்புரை பிறக்கும். மதிப்புரை நூலை இரசித்தவர்களால் தான் நூலின் மறுபதிப்பு கிடைக்கும். இந்நூலை வாசிப்பவர்களால் கு. ஞானசம்பந்தன் ஐயாவின் நூல்கள் அனைத்தும் பல பதிப்புகள் வரும் என்பதில் ஐயமில்லை. பதின்று தலைப்புகளும் மிக அருமை! முதல் தலைப்பே நம்மை நூலுக்குள் விரைவாக இழுத்துச் செல்கிறது. வாழ்க்கையை பணத்தோடு பொருத்திக் கொண்டு வாழ்பவர்களுக்கு மத்தியில், பணியோடு பொருத்திக் கொண்டு வாழ்பவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள். தன் அகவையை விடவும் அடுத்தவரின் நலனுக்காக தன் சேவையைத் தொடர்பவர். இவரிடம் அறிவின் முதிர்ச்சியும் இருக்கும்! குழந்தையின் சிரிப்பும் இருக்கும்! இவரின் மனவலிமையையும், மனணத் திறமையையும் வியக்காத மனிதர்களே இல்லை! உலகத்தில் அரிதான ஒன்று எளிமை தான் என்பதனை எடுத்துக் காட்டியவர்! இவர் பேச்சால் பல நாடுகளுக்கும் செல்பவர்! அதன் காணொளியால் பல வீடுகளுக்கும் செல்பவர்! மொத்தத்தில் ‘ஒளியாலும் ஒலியாலும்’ பலரின் அறியாமை இருளை அகற்றியவர்! தமிழரின் பொக்கிஷம்! ஆடம்பரம், சிக்கனம், கஞ்சத்தனம் மூன்றுக்கும் இவரின் தந்தையார் கு.குருநாதன் அவர்களின் விளக்கம் அருமை! இவருக்கும், இவரது தந்தையாருக்குமே முதலெழுத்து ‘கு’ என்றே அமைந்திருப்பது சிறப்பு. “உன்னோடு போட்டி போடு” என்ற தலைப்பில் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு நிலையில், மேடைக்கு கீழே இருந்து கை தட்டும் ரசிகனாக. பின் பிறர் கைதட்ட பரிசு பெறும் கலைஞனாக, வருங்காலத்தில் அந்தப் பரிசினைத் தரும் சிறப்பு விருந்தினராக நாம் மாற வேண்டும் என்ற வரிகள் “கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்” என்பேன். பாரதியின், செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாடல் வரிகளுக்கு பரிசு தரவில்லை என்ற செய்தியை அறிந்தபின், சமீபத்தில் எனது ஹைக்கூ நூல் ஒன்று பரிசு பெறாத வருத்தம் முற்றிலுமாக நீங்கிவிட்டது. ‘அங்குச்சாமி’யை ஞானசம்பந்தமாக நமக்கு அறிமுகப்-படுத்திய ஆறுமுகநாவலர் ஐயாவிற்கு நம்மையும் அறியாமல் ‘நன்றி’ சொல்ல மனம் தவிக்கிறது. “விடியலுக்கு ஓர் விளக்கு” என்ற தலைப்பில் மதுரையின் பெருமையை அழகாக கூறியிருக்கிறார். அதிலும் பாரதியின் கவிதைத் தொகுதி அச்சானது மதுரையின் ‘விவேகபானு’ இதழில் தான் என்ற செய்தி மதுரைக்காரர் என்று மார்தட்டிக் கொள்ளும் நமக்கெல்லாம் விருது கொடுத்தது போலிருக்கிறது. இந்நூலை நமக்களித்த கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு பாராட்டுகள். கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் எனது நூலுக்கும், அன்போடு அணிந்துரை அளித்தவர், அலைபேசியில் பேசியவர். அவரின் அழைப்பு கண்ட அலைபேசியை சிறிது நேரம் மகிழ்வில் ஒன்றும் புரியாமல், பின் எடுத்துப் பேசியதை என்னால் மறக்க இயலாது. இவர் மதுரையின் அசையும் சொத்து! இவரின் எழுத்தில் விரைந்து முளைக்கட்டும் அறிவு வித்து! பிறரின் வேலைகளை இறுதி செய்யத் தெரிந்தவர்! சிரிப்புகளை உறுதி செய்யப் பிறந்தவர்!

கருத்துகள்