பார்த்தேன்… படித்தேன்… ரசித்தேன்… நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
பார்த்தேன்… படித்தேன்… ரசித்தேன்… நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : அமுதம் பதிப்பகம்,
155, டெபுடி கலெக்டர் காலனி,
3வது தெரு, கே.கே. நகர், மதுரை-625 020
பக்கங்கள் 48, விலை ரூ. 60
******
நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் என்னுரையில் எழுதியுள்ளதைப் படித்து வியந்தேன். “வழக்கமாக என்னைச் செவ்வி (பேட்டி) காண்போர் நீங்கள் பேச்சாளராக வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்பார்கள், அப்போதெல்லாம் நான் மகிழ்ச்சி பொங்க எழுத்தாளராகவோ, நூலகராகவோ ஆகியிருப்பேன் என்று கூறுவேன்”
ஆம், கலைமாமணி கு, ஞானசம்பந்தன் ஐயா முதலில் எழுத்தாளர், பிறகுதான் பேச்சாளர். கலைஓசை என்ற கையெழுத்துப் பிரதி நடத்தி உள்ளார். தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் செய்தி மடல் என்ற பத்திரிக்கைக்கும் ஆண்டுமலருக்கும் எட்டாண்டுகளாக பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் சிரிப்பு மின்னிதழுக்கு ஆசிரியராக உள்ளார். தியாகராசர் கல்லூரியில் படித்தபோது பாஞ்சாலி சபதம் நாடகத்தை வசன வடிவில் மாற்றி, சகுனியாக நடித்து அரங்கேற்றம் செய்துள்ளார். இப்படி எழுத்து அனுபவம் பல உள்ளவர் தான் ஐயா அவர்கள்.
இந்த நூலில் படித்ததையும் பார்த்ததையும் ஒப்பிட்டு ரசித்தவற்றை பயணக்கட்டுரை போல சுவையாகவும் எளிமையாகவும் வடித்து உள்ளார்கள்.
வழக்கம்போல் இந்த நூலிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர் எழுதி, வாழ்த்தையும் நன்றியையும் மறக்காமல் பதிவு செய்துள்ளார்கள். குடும்பத்தினரை ஊக்கப்படுத்தும் பண்பாகவே இதனைக் காண்கிறேன். நானும் ஐயாவிடமிருந்து குடும்பத்தாரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இராமேஸ்வரம் மண்டபம் இடையில் உள்ள நல்லதண்ணீர் தீவுக் கூட்டத்திற்கு மோட்டார் படகினில் சென்று இருக்கிறார். நீருக்கடியில் வட்டமான சூரியகாந்தி பூப்போல நூடுல்ஸ் போன்ற இழைகளோடு காணப்படுகின்ற இந்தத் தாவரத்தின் பெயர் என்ன? என்று கேட்டுள்ளார். உடன் வந்தவர் சிரித்துவிட்டு (இராவணன் போல் சிரித்துவிட்டு) இது தாவரம் அல்ல, உயிரினம். சின்ன உயிரினம் பட்டாலும் உடனே உள்ளே இழுத்து அதைச் சாப்பிட்டுவிடும் என்றார். இப்படி ஒரு உயிரினமா? என வியந்து பார்த்து விட்டு, கம்ப இராமாயணத்தில் மாரீசன் வதை படலத்தை நினைத்துப் பார்த்து ஒப்பிட்டு வியந்து மிக அழகாக விளக்கி உள்ளார். கம்ப இராமாயணத்தை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமளம் ஊருக்கு சென்று கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளின் அதிட்டானம் (சமாதி நினைவிடம்) சென்று பார்த்து உள்ளார். ஐயா எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள நூலகங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சென்று பார்ப்பது வழக்கம். சென்று பார்த்த இடங்களை படித்தவற்றோடு ஒப்பிட்டு ரசித்து கட்டுரைகள் வடித்துள்ளார்.
பத்துக் கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளன. சிறிய கட்டுரைகளாக இருப்பதால் உடன் படித்து விட முடியும். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பார்த்து விட்டு, அதைப் பற்றியும் கட்டுரை உள்ளது. ஹரித்துவார் சென்று உள்ளார். அந்தப் பயணத்தையும் கட்டுரையாக்கி உள்ளார். பயணப்படுவதற்கு சலிப்பே இன்றி. பயணப்படுவது வழக்கம். அப்படி பயணப்படும் போது முக்கியமானவற்றை ரசித்து குறித்து, மனக்குறிப்பில் ஏற்றி வைத்து, பின்னர் வந்ததும் கட்டுரையாக்கும் ஆற்றல் கைவந்த கலையாக உள்ளது. ஐயா சென்று வந்த இடங்களுக்கு இந்த கட்டுரைகளை வாசித்து விட்டு மற்றவர்கள் சென்று ரசிக்கவும் உதவியாக உள்ளன.
சேலத்திற்கு அருகில் தாராமங்கலம் என்றொரு புகழ்பெற்ற ஊர் உள்ளது. அங்குள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சிற்பங்களைக் காண்பதற்காக ஒருமுறை சென்று வாருங்கள். பாடல்பெற்ற தலங்களில் ஒன்று. இப்படி பார்க்காததை சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளார்.
மதுரை திருமலை நாயக்கர் மன்னர் அரண்மனை கட்டுவதற்கு மண்தோண்டிய தெப்பக்குளத்தில் கண்டு எடுக்கப்பட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைக்கப்-பட்டுள்ள பிரமாண்ட பிள்ளையார் பற்றியும், வாதாபி கணபதி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய தமிழ்ச்சங்கம் சென்றது பற்றி, அங்கிருந்தவர்கள் ஐயாவின் பிறந்தநாள் அக்டோபர் 19 என்பதைத் தெரிந்து கொண்டு கேக் வெட்ட ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது கலைஞானி கமலஹாசன் ஐயாவிற்கு வாழ்த்துச் சொல்ல அலைபேசியில் அழைத்துள்ளார். அப்படியே இந்தோனேசியா தமிழ்ச்சங்கத்தினருக்கும் வாழ்த்தை பகிர்ந்து உள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளும் கட்டுரையில் உள்ளன.
இந்தோனேசியாவில் உள்ள நமது சோழ மன்னன் கட்டிய கோவிலைச் சென்று பார்த்து, அதனையும் கட்டுரையாக வடித்துள்ளார். சோழ மன்னர்கள் ருத்திரனாகிய சிவனுக்கும் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இங்கே கோவில் கட்டி இருக்கிறார்கள். மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை அழிந்து விட்டாலும் அவர்கள் கட்டிய கோயில்கள் அழியாமல் இன்னும் உள்ளது வியப்பு. இப்படி நூலாசிரியர் கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சென்ற இடமெல்லாம் நம் கண்முன் எழுத்தால் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.


கருத்துகள்
கருத்துரையிடுக