என் பல்வண்ணக்காட்சிக்கருவி நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
என் பல்வண்ணக்காட்சிக்கருவி
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி, கோயமுத்ர் – 641 001.
தொலைபேசி : 0422 – 2382614
அலைபேசி : 90470 87053
மின்னஞ்சல் : vijayapathippagam@gmail.com பக்கங்கள் 404, விலை ரூ. 400
******
நூல்ஆசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள், நான் மதுரை பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மதுரை மல்லிகை நண்பர்களுடன் நேரில் வந்து சந்தித்தார்கள். ஒருவாரம் கழித்து இல்லம் வந்து இந்த நூலை பரிசளித்தார்கள். அவர் மேனாள் தலைமைச் செயலர். நான் ஒரு சாமானியன். என்னை வந்து சந்தித்து புத்துணர்வு தந்ததற்கு காரணம் அன்பு. பெயரில் மட்டுமல்ல, உள்ளத்திலும் அன்பு மிக்க மாமனிதர்.
இன்றும் நூல்கள் வாசிப்பைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார் என்பதற்க்கு ஏடுத்துக்காட்டு தான் இந்நூல். தான் படித்த சிறந்த நூல்கள் பற்றிய கருத்துரையை, ராணி வார இதழில் தொடராக எழுதி வந்தார்கள். அதன் தொகுப்பே இந்நூல். தொடராக வந்தபோது வாசித்து இருந்தாலும் மொத்தமாக நூலாகப் படித்ததில் பரவசம்.
இந்த நூலிற்கு பொருத்தமான பெயர் சூட்டி உள்ளார்கள். “என் பல்வண்ணக் காட்சிக்கருவி”. அதுபற்றி அவர் நூலில் எழுதியுள்ளதை படித்துப் பாருங்கள். ‘சிறுவயதில் சந்தைக்குச் சென்றபோது சிநேகமாய் வாங்கி வந்தது. அந்த தினமாக இருக்கும் கருவி முப்பது பைசா என்ற நினைவு. அதை விழிகளுக்கு அருகில் வைத்தால் உள்ளே அழகான வடிவமைப்பு காட்சியளிக்கும். ஆர்வத்துடன் திருப்பினால் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு வடிவமைப்பாக காட்டும். சுழற்றினால் வேறொன்று. ஏற்கனவே பார்த்த வடிவமைப்பு போல இன்னொன்றை என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வடிவம். பார்க்கப் பார்க்க பரவசம். இல்லத்தினர் அனைவருமே கைமாறிக் கைமாறிக் கண்டுகளித்தோம்”.
இக்கருவியை பார்த்த அனுபவம் எனக்குண்டு. வாசகர் பலருக்கும் உண்டு. அவர் படித்த நூல்களின் மீதான பார்வையை எழுதியுள்ள நூலிற்கு இப்பெயர் சூட்டியது மிகப்பொருத்தம்.
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் பதிப்புரை வழங்கி உள்ளார். முதன்முதலில் இறையன்பு அவர்கள் கவிதை நூல் பிரசுரம் செய்ய வேண்டிய போது மறுத்தவர், இன்று தொடர்ந்து அவரது நூல்களைப் பதிப்பித்து வருகிறார். நூல்கள் பதிப்பித்து உள்ளார் மனிதநேய மருத்துவர் த.ஜெகதீசன் அவர்களுக்கு நூலை காணிக்கையாக்கி உள்ளார். 50 கட்டுரைகள் உள்ளன.
மிகப்பெரிய எழுத்து ஆளுமை ஜெயகாந்தன் எழுதிய ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ நூல் பற்றி முதல் கட்டுரை. வாபி வாபி என்கிற நோபுவோ சுசகி எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது. அப்போது வாழ்க்கையின் யதார்த்தமான கச்சிதமின்மை என்கிற உண்மை இன்னும் தூக்கலாக என் மனத்தைத் தூண்டியது என்று எழுதி உள்ளார் பூரணம் என்கிற புருகு1 என்ற கட்டுரையில் எழுதி உள்ளார்.
புகழ்பெற்ற ஆங்கில நூல்கள், தமிழ் நூல்கள் பற்றிய கருத்துரையின் தொகுப்பாக நூல் வந்துள்ளது.
“புத்தர் எப்போது படித்தாலும் முன்பிருந்ததை விட நமக்கு இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறார்” உண்மை. புத்தரைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.
நாஞ்சில் நாடனின் ‘ஊருண்டு 'காணி இல்லேன்’, தொ.பரமசிவம் எழுதிய ‘தெய்வம் என்பதோர்’ நூல் மதிப்பும் உள்ளன.
கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்திருந்தால் நல்லா இருக்கும் என்ற வசனத்திற்கு சொந்தக்காரர் தொ.பரமசிவம் அவர்கள். இறையன்பு அவர்கள் தொ.ப. அவர்களை அவரது இல்லத்தில் எழுத்தாளர் முருகேசப் பாண்டியனுடன் சென்று உரையாடி நெகிழ்ந்ததை குறிப்பிட்டு உள்ளார். ‘அறியப்படாத தமிழகம்’ நூல் பற்றியும் உள்ளது. தான் படித்து ல்களின் முகப்பு அட்டைகளுடன் பிரசுரம் செய்து இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்நூல் படிக்கும் வாசகர்கள் அவர் குறிப்பிட்டுள்ள மூல நூல்களையும் வாங்கிப் படித்துப் பயன்பெற வசதியாக நல்ல தகவல்கள் உள்ளன.
இனிய நண்பர் ஹைக்கூ கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய ‘கூடு திரும்புதல் எளிதன்று’ புதுக்கவிதை நூல் பற்றியும் உள்ளது. புதுக்கவிதைகளையும் மேற்கோள் காட்டி உள்ளார். சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
விரல்களும் மனசும் நடுநடுங்கிப் போகிறது மரணித்தவர்களின் அலைபேசி எண்ணை அகற்ற முற்படுவதற்கு சற்றுமுன்.
இக்கவிதையின் அனுபவம் நாம் பலரும் உணர்ந்ததே.
“நோய்களிடத்தில் எதிரிகளின் சாயலிருக்கிறது. மருந்துகளிடத்தில் தான் நண்பர்களின் சாயலில்லை”
அகழ்வாரைத் தாங்கும் நிலமல்ல.
இது புகழ்வாரைத் தாங்கும் நிலம்.
மேற்கோள் காட்டியுள்ள கவிதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
கவிஞர் அறிவுமதி எழுதிய ‘தாய்ப்பால்’ பற்றிய கருத்துரை உள்ளது. இரண்டு அடி கொடுத்தால் தானே திருந்துவாய், வாங்கிக் கொள் வள்ளுவரிடம். நம்மை வள்ளுவம் பற்றி சிந்திக்க வைக்கும் வைர வரிகள். புத்தகங்களின் தலைப்பை தலைப்பாகச் சூட்டாமல் நூலாசிரியர் சிந்தனையில் வந்ததை தலைப்பாக வைத்தது மிகச் சிறப்பு.
எழுத்தாளர் முருகேசபாண்டியன் எழுதிய ‘பாரதியார் மார்க்சியத்திற்கு ஆதரவாளரா?’ இப்படி பல நூல்கள் பற்றிய கருத்துரை உள்ளன. ஆங்கில நூல்கள் நாம் பெரும்பாலும் படித்திருக்க வாய்ப்பில்லை. நூலாசிரியர் தமிழ், ஆங்கில நூல்களின் மதிப்புரையை அழகுத்தமிழில் வழங்கி வாசகர்களுக்கு நூல்களின் விருந்து வைத்துள்ளார். முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் எழுதிய ‘செம்மொழித் தமிழும் திரைஇசை மொழியும்’ பற்றிய கருத்துரையும் அரிய பல நூல்களின் மதிப்புரை களஞ்சியமாக நூல் உள்ளது. வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.
.


கருத்துகள்
கருத்துரையிடுக