நூல் : சிந்தனைக்கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி

நூல் : சிந்தனைக்கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி ****** கவிஞர் இரா.இரவி அவர்களின் 37வது நூலான சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் என்ற நூல், தலைப்பிற்கு ஏற்றாற்போல் வெற்றி, வெற்றி, வெற்றி என வெற்றியைப் பற்றியே முழக்கமிட்டுச் செல்கிறது. கவிதாசன் அவர்கள் தனது சிந்தனையின் மூலமே சிந்தனைக் கவிஞர் என்ற பட்டத்தை முயன்று பெற்றிருக்கிறார். தான் தயாரித்த உணவை பிறருக்கு விருந்தாக பரிமாறி அவர்கள் அதை இரசித்து, ருசித்து, பாராட்டுவதைப் பார்த்து மனம் மகிழ்வதைப் போன்றே இந்நூலும் அமைந்துள்ளது, கவிதை படைத்தவரைப் பாராட்டுவதா? அதைப் படித்து பாராட்டுபவரைப் பாராட்டுவதா? என வியக்க வைக்கிறது. இந்நூலின் நாயகனாகத் திகழும் சிந்தனைக் கவிஞர் அவர்கள் வெற்றி நீற்றுகள். நம்பிக்கை நாற்றுகள். வெற்றிச் சிந்தனைகள். வெற்றிச் சுடர்கள். தன்னம்பிக்கை மொழிகள் என்ற நூல்களில் சதம் அடித்திருக்கிறார். வாசிக்கும் வாசகருக்கும் நம்பிக்கையையும் வெற்றியையும் உறுதி செய்து விடுகிறார். கவிஞருக்கு பாராட்டுக்கள் மலைபோல் குவிந்து விடுவது உறுதி. சரி. இந்நூல்களை மதிப்புரை செய்து தொகுத்த நமது ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள், பொறியாளர் கட்டிய வீட்டிற்கு புது வண்ணமடித்து மேலும் அதனை அழகூட்டச் செய்வது போல தனது மதிப்புரையால் மதிப்பு உயர்ந்து விட்டார் இரா.இரவி. இரண்டு கைகள் குலுக்குவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இரண்டு நம்பிக்’கைகள்’ கைகுலுக்கி நிற்பதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி என்பது ஒரு விபத்தல்ல – அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்! என்ற வரிகளை வாசிக்கும் போதே புத்துணர்வு ஏற்படுகிறது. முதியோர் இல்லத்திற்கு / உணவு கொடுங்கள் உடுக்க உடை கொடுங்கள் / ஆனால் / ஒருபோதும் உங்களுடைய பெற்றோர்களை அங்கே கொடுத்து விடாதீர்கள் என்ற வரிகளை வாசிக்கையில் மனம் கனத்து விடுகிறது. உச்சியை அடையத் தொடர்முயற்சி வேண்டும் உச்சியிலேயே நிலைக்க கடும் முயற்சி வேண்டும். என்ற வரிகள் எல்லாத் தலைமுறை மனிதர்களுக்கும் பொருத்தமான வரிகளாகவே இருப்பது சிறப்பு. எனக்கு மிகவும் படித்த வரி “முடியாது என்பதைக் கூட முயற்சித்த பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்” இவ்வரிகள் நமது முயற்சியை மேலும் ஒருபடி உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. “செயலாக்கம் பெறாத அறிவும் செல்லாத காசும் ஒன்று தான்” என்ற வரிகளும் நம் அறிவு செயல்வடிவம் பெறுவதில் தான், வெற்றி அடங்கியுள்ளது என்பதனை வலியுறுத்துகிறது. இந்நூல் முழுவதும் தன்னம்பிக்கை வரிகள் நிரம்பி வழிகின்றது, அனைத்து வயதினரும் இந்நூலை வாசிக்கலாம், புதிய உத்வேகம் பிறக்கும். வயது முதிர்ந்தவர்கள் கூட இந்நூலை வாசித்தால் சாதனை செய்ய புறப்பட்டு வருவார்கள். அவ்வளவு நம்பிக்கைகளை இந்நூல் வாரிவாரி வழங்கி இருக்கிறது. ******

கருத்துகள்