: உன்னோடு போட்டி போடு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

நூல் : உன்னோடு போட்டி போடு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : அமுதம் பதிப்பகம், 155, டெபுடி கலெக்டர் காலனி, 3வது தெரு, கே.கே. நகர், மதுரை-625 020 பக்கங்கள் 312, விலை ரூ. 250 ****** கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தினமணி நாளிதழில், வாரம் ஒரு நாள் தொடராக எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளனர். 52 வாரங்கள் வந்த கட்டுரைகள் தினமணியில் பிரசுரமான அன்றே படித்துவிட்டு முகநூல், வலைப்பூக்களில் பதிந்த கட்டுரைகளை மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி. சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர் என்பதை மெய்ப்பிக்கும் கட்டுரைகள், திரைப்படப் பணி, தொலைக்காட்சிப் பணி என பல்வேறு பணிகள் இருந்தாலும், திட்டமிட்டு நேரம் ஒதுக்கி எழுத்துப்பணியிலும் கவனம் செலுத்தி எழுதி வருகிறார். நமது மண்வாசம் மாத இதழிலும் ஐயாவின் கட்டுரைகளை தொடர்ந்து ரசித்து வாசித்து வருகிறேன். “உன்னோடு போட்டி போடு” நூலின் தலைப்பே சிறப்பாக வைத்துள்ளார். வேறு யாருடனும் போட்டி போட வேண்டாம். உன்னுடன் போட்டி போடு, உனது முந்தைய சாதனைகளை நீயே முறியடித்து முன்னேறு என்ற விதமாக தன்முன்னேற்றம் விதைக்கும் விதமான கட்டுரைகள். சிறிய கட்டுரைகளாக இருப்பதால் படிப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும் உள்ளன- ‘உன்னோடு போட்டி போடு’ என்று ஏன் பெயர் சூட்டினார் என்பதற்கு அவரே தரும் விளக்கம், பாருங்கள். “வழக்கமாக அவரோடு போட்டி போடு, இவரோடு போட்டி போடு என்று சொல்லுகின்ற காலம் மாறி உன்னோடு போட்டி போடு என்று நான் எழுதவேண்டிய அவசியம் என்ன? என்றால் எட்டுமுறை ஒலிம்பிக்கில் பரிசினை வென்ற தடகள வீரர் ‘உசேன் போல்ட்’, தன்னோடு போட்டி போட்டுத்தான் தன்னைத்தானே ஜெயித்திருக்-கிறார். மூன்றுமுறை தொடர்வெற்றியாக (ஹாட்ரிக்) ஒலிம்பிக்கில் கோப்பையை வென்றவர் இவரே. இவரைப் போலத்தான் இளையதலைமுறையினர் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ஓட்டமாக வைத்துக்கொண்டு ஓடி ஜெயிக்க வேண்டும் என்பதைச் சொல்வதற்காக இந்நூலை நான் தொடர் கட்டுரையாகத் தினமணியில் எழுதி வந்தேன். ‘உசேன் போல்ட்’ போல பல தகவல்கள் நூலில் உள்ளன. தன்னம்பிக்கை விதையை நூல் முழுவதும் தூவி உள்ளார். வாசகர் மனதில் உத்வேகத்தை அளித்து உள்ளார். ஓய்ந்திருக்கலாகாது என்னைப் போலவே இளைஞர்கள் சுறுசுறுப்பாக எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். நூலில் தினமணி ஆசிரியர் வைத்திநாதன் அவர்கள் தொடங்கி. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து, நன்றி சொல்லி அட்டைப்படம் வடிவமைத்தவர் தொடங்கி நூல் உருவாக தட்டச்சு செய்தவர் வரை ஒருவர் விடாமல் பெயர் சொல்லி, நன்றி கூறி இருப்பது சிறப்பு. கட்டுரைகளின் தலைப்புகளும் முத்தாய்ப்பாக சூட்டி உள்ளார், தலைப்பைப் படித்தாலே கட்டுரையை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் சூட்டி உள்ளார். பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுக்கத் தயங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் தந்து, பெயர் கொடுக்க வைத்து, பேசப் பயிற்சியளித்து, முதற்பரிசையும் பெற வைத்த கல்லூரி அனுபவத்தை கட்டுரையில் விவரித்து உள்ளார், தயக்கம் தகர்த்தால் சாதனைகள் புரியலாம் என்பதை உணர வைத்துள்ளார். பேசுவது, இடம், பொருள், மேடை அறிந்து எப்படிப் பேச வேண்டும் என்பதற்கும் விளக்கம் தந்துள்ளார், உலகின் பிரபலமான புத்தகங்களைப் பட்டியலிட்டு அதில் உள்ள சிறப்பு அம்சங்களையும் எடுத்து இயம்பி உள்ளார், ஒவ்வொரு கட்டுரை முடிக்கும் போதும் அடுத்த கட்டுரையை தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும்வண்ணம் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்போடு கட்டுரையை முடித்திருக்கும் யுத்தி சிறப்பு. கம்பஇராமாயணக் காட்சிகளும் சுவைபட விளக்கி உள்ளார், கடல்வாழ் உயிரினங்கள் பற்றி, சங்குப்பூச்சிகள் பற்றி, சங்குகள் பற்றி பல தகவல்கள் கட்டுரைகளில் உள்ளன, தகவல் களஞ்சியமாக உள்ளது. நூலாசிரியர் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்கப் பணியாற்றிய காரணத்தால் கட்டுரைகளில் தமிழ் இலக்கியம் ததும்பி வழிகின்றன. புறநானூறு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், கணியன் பூங்குன்றன் பாடல் என கட்டுரைகளில் பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி எழுதியுள்ள கட்டுரைகள் சிறப்பு. இலக்கிய நயம்பட இருப்பதால் படித்தால் மறப்பதும் இல்லை. நினைவில் தங்கி விடுகின்றன. பட்டிமன்றங்களோ, வழக்காடு மன்றங்களோ தமிழ்மொழியில் இருப்பது பிறமொழிகளில் இருப்பதில்லை என்பதையும் உணர்த்தி உள்ளார். தமிழ்மொழியில் மட்டுமே உள்ள சிறந்த கொடை இவை என்பதை விளக்கி உள்ளார். விக்ரமாதித்தன் கதையும் கட்டுரையில் வருகின்றது. படிக்காத மேதை படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிய வாழை மரம் படித்ததில்லை, கனி கொடுக்க மறந்ததா? வான்முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா? சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா? சுதந்திரமாய்ப் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா? படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. இந்த அற்புதமான வரிகள் கட்டுரையில் உள்ளது. படிக்காத மேதை, கல்வி வள்ளல் காமராசர் பற்றியும் சிறப்பாக எழுதி உள்ளார். முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறப்பு. ஒரு நிலையில் மேடைக்குக் கீழே இருந்து கைதட்டும் ரசிகனாக. பின் பிறர் கைதட்ட பரிசுபெறும் கலைஞனாக வருங்காலத்தில் அந்தப் பரிசினைத் தரும் சிறப்பு விருந்தினராக நாம் மாற வேண்டும் என உறுதியோடு நடைபோடுகிறோம், மதுரை நகைச்சுவை மன்றத்தில் இந்த முன்னேற்றமே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது ஐயாவின் தலைமையில்.

கருத்துகள்