இலக்கியச் சாரல் நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

இலக்கியச் சாரல் நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : அமுதம் பதிப்பகம், 155, டெபுடி கலெக்டர் காலனி, 3வது தெரு, கே.கே. நகர், மதுரை-625 020 பக்கங்கள் 76, விலை ரூ. 60 ****** பெயருக்கு ஏற்றபடி தமிழ் இலக்கியச் சாரலாக உள்ளது. இலக்கியச் சாரலில் வாசகர் மனம் நனையும் விதமாக இலக்கிய ரசனையும் நன்கு வடித்துள்ளார்கள். மூத்த எழுத்தாளர் ப.திருமலை சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளபடி அப்படியே தருகிறேன், படித்துப் பாருங்கள். "சற்றே ஒதுங்கியிரும் பின்னால்" எனத் தனது நகைச்சுவைப் பாணி எழுத்தைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு. ஆசிரியர் ஆராய்ச்சியாளர் என்ற தனது இன்னொரு முகத்தை "இலக்கியச் சாரல்" புத்தகத்தின் மூலம் காண்பித்துள்ளார், இக்கட்டுரையின் வாயிலாக இலக்கணம், இலக்கியம், ஆய்வு, ஆன்மிகம், தமிழர் மரபு, வாழ்வுக்கு வழிகாட்டுதல், வரலாறு, நகைச்சுவை என பல விஷயங்களைப் பேசுகின்றன. இந்தப் புத்தகத்தை வாசிப்பவர் எவராயினும் "இலக்கியச் சாரலில்" இன்முகத்துடன் நனைவார்கள் என்பது திண்ணம்". அணிந்துரையில் எழுதியுள்ளவை அனைத்தும் உண்மை. பலாப்பழம் போன்ற இலக்கியங்களை பாங்காக அறுத்து, பலாச்சுளைகளாக வழங்கி இலக்கிய விருந்து வைத்துள்ளார். தொல்காப்பியம் தொடங்கி நூலகம் வரை பத்துக் கட்டுரைகள் இலக்கியத்தரத்துடன் முத்தாய்ப்பாக வந்துள்ளன. படிப்பதற்கு சுவையாகவும், எளிமையாகவும் உள்ளன. ஒரே மூச்சில் நூல் முழுவதும் படித்து முடித்து விடலாம். விறுவிறுப்பாக உள்ளன கட்டுரைகள். நூல் ஆசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள், அவரது அனைத்து நூல்களையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் எழுதி வாழ்த்தி, தட்டச்சு செய்திடும் பணிக்கு துணை நின்றவர்கள், நூலாக்க உதவியவர்கள் அனைவரின் பெயர் குறிப்பிட்டு நன்றி உரைத்து இருப்பது ஐயாவின் உயர்ந்த குணத்தை பறைசாற்றுகின்றன. செவிலித்தாய் பற்றி தொல்காப்பியம் என்ன சொல்கிறது. எட்டுத்தொகை, அகநூல்கள் ஐந்திலும் 30 பாடல்களில் செவிலி கூற்று அமைந்திருப்பது குறிக்கத்தக்கது என்பதை எடுத்து இயம்பி தலைவன் தலைவி அகத்திணையில் செவிலிதிதாயின் உயர்ந்த பங்கு என்ன என்பதை சிறப்பாக விளக்கி உள்ளார். பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதில் பிணந்தழீஇ பற்று, என்ற திருக்குறளுக்கு பரிமேலழகரின் கருத்து என்ன? ஆ. மாதவையரின் கருத்து என்ன? சண்முகனாரின் கருத்து என்ன? மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் கருத்து என்ன? என்பது மிகத் தெளிவாக விளக்கி கருத்து வழங்கி இருப்பது சிறப்பு. திருக்குறளில் ஒரு திருக்குறளை எடுத்து ஆய்வு செய்து விளக்கி இருப்பது நனிநன்று. திருவிளையாடல்கள், பரஞ்ஜோதி திருவிளையாடற் புராணம். சிலம்பில் வரும் திருவிளையாடல்கள். வஞ்சினமாலை காட்டும் திருவிளையாடல், நாட்டார் வாய்மொழிக் கதைகளும் இலக்கியங்களும் இவை அனைத்தையும் சிறப்பாக விரிவாக விளக்கி உள்ளார். வேண்டுதல் வேண்டுமா? என்ற கட்டுரையில் கடவுளிடம் பக்தர்கள் எப்படி வேண்டுகிறார்கள் என்பதை விளக்கி உள்ளார். வேண்டத்தக்கது அறிவாய் நீ’ வேண்ட முழுவதும் தருவோய் நீ (திருவாசகம் மாணிக்கவாசகர்) ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் (இராமலிங்க வள்ளலார்) காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் (மகாகவி பாரதியார்) இப்படி யார்? யார்? எப்படி வேண்டினார்கள் என்பதை கட்டுரையில் விளக்கி உள்ளார். "மிகச்சிறிய எள்ளுப்பூவிலும் தேன் இருப்பதைத் தும்பிகள் அறிவதைப் போல காலந்தோறும் கற்க விரும்புவோர்க்குத் தனிப்பாடல்கள். செந்தமிழ் தேன்துளிகளாய் சுவைக்கட்டும் என்பது உண்மை" சொல் விளையாட்டு பாடல்கள், வறுமையும் புலமையும், மரபும் புதுமையும் உள்ள தனிப் பாடல்களை எழுதி அவற்றிற்கு விளக்கமும் வழங்கி இருப்பது சிறப்பு. தனிப்பாடல்கள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளன. மானுடம் அறிவோம் கட்டுரையில் மு.வரதராசன் கருத்து கவிஞர் காலை இளந்திரையன் கவிதை, திருக்குறள் சிறப்பு, கவியரசு கண்ணதாசனின் வைர வரிகள் யாவும் இடம்பெற்று, மனிதநேயமறிந்து, மானுடம் உணர்ந்து அறநெறிகளின் வழிநின்றால் நல்லநிலையில் வைக்கப்படுவோம் என்று எழுதி முத்தாய்ப்பாக முடித்துள்ளார்கள். தைத்திருநாள் தமிழரின் திருநாள் கட்டுரையில் தைத்திருநாளின் சிறப்பை சிறப்பாக எடுத்து இயம்பி உள்ளார். பொங்கல் திருநாள் என்றதுமே தமிழர்களின் இதயமெல்லாம் உற்சாகம் பீறிட்டெழும். பொங்கல் விழா என்பது ஒற்றை நாள் விழா அல்ல. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் விழா. பொங்கல் விழா பற்றி விரிவாக எடுத்து இயம்பி உள்ளார். பொங்கல் விழா நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளது. சிறுகதை கற்றலும் கற்பித்தலும் கட்டுரையில் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி, வட்டார எழுத்துக்களும் படைப்பாளிகளும், எழுத்தாளர்களின் பெயர் பட்டியல், சிறுகதை கற்பித்தல், சிறுகதை வளர்ச்சயில் அடுத்தகட்டம் என யாவும் உள்ளன. சிறுகதை பற்றிய புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன. பளிங்கு மண்டபத்தில் ஒரு நூலகம் கட்டுரையில் யேல் பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்று வந்த அனுபவத்தை விளக்கி உள்ளார். யேல் பல்கலைக்கழகம் தான் அறிஞர் அண்ணா அவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்தார்கள். இப்படி உலகத்தரமான நூலகம் நமது மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வந்து விட்டதை பெருமை கொள்ள வைத்தது கட்டுரை.

கருத்துகள்