கற்றதைச் சொல்லவா? மற்றதையும் சொல்லவா? நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
கற்றதைச் சொல்லவா?
மற்றதையும் சொல்லவா?
நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : அமுதம் பதிப்பகம்,
155, டெபுடி கலெக்டர் காலனி,
3வது தெரு, கே.கே. நகர், மதுரை-625 020
பக்கங்கள் 136, விலை ரூ. 120
******
கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இந்து தமிழ் திசைப் பத்திரிகையில், காமதேனு என்கின்ற மின்னிதழ் பத்திரிகையில் எழுதிவந்த 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலாகி உள்ளது. இக்கட்டுரைகளில் கற்றதையும் சொல்லி உள்ளார். மற்றதையும் சொல்லி உள்ளார். பயனுள்ள கட்டுரைகள். தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமைகளை ஆங்காங்கே விதைத்து உள்ளார்.‘
20 கட்டுரைகளும் சிறிய கட்டுரைகளாக இருப்பதால், படிப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும் உள்ளன. ஆற்றுப்படை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆற்றுப்படை என்றால் என்ன? என்பதை விளக்கி உள்ளார்.‘ “ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல், ஆறு என்பது வழி. தான் பெற்ற இன்பத்தைத் தன்னைப் போன்ற மனிதர்களும் இந்தச் சமுதாயமும் பெற வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கும் அந்த வழியைக் கூறும் மரபு தான் ஆற்றுப்படை என்பது”. ஆற்றுப்படை பற்றி தொல்காப்பியத்திலும் குறிப்பு உள்ளது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்றும், பத்து நூல்களின் தொகுப்பு ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படுத்தும் நூல்கள்.
“திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்-பாணாற்றுப்படை, பொருணநாற்றுப்படை, கூத்தாற்றுப்படை (மலைபடுகடாம்)”. இப்படி ஆற்றுப்படை என்பதற்கு விளக்கம் சொல்லி ஆற்றுப்படை வகையில் உள்ள தமிழ் இலக்கியங்களை வரிசைப்படுத்தி உள்ளார்.
கட்டுரைகள் எள்ளல் சுவையுடன் இருப்பதால் படிக்க விறுவிறுப்பாக உள்ளன. சலிப்பின்றி ஆர்வமாக படிக்க முடிகின்றது.
இந்தச் செய்தியை மறக்காக 7 பேருக்கு அனுப்புனீங்கன்னா, உங்களுக்கு போற இடமெல்லாம் WIFI கிடைக்கும், பார்க்கிங் சுலபமா கிடைக்கும், சிக்னல் சிக்கல் இல்லாமல் கிடைக்கும்” இப்படி எள்ளல் சுவையுடன் கட்டுரை முடித்துள்ளார். சிறப்பு. கட்டுரைகளில் பல தகவல்கள் உள்ளன. எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். இரா. சுந்தரேசனின் இயற்பெயர் பாக்கியம் இராமசாமி. ஸ்ரீ வேணுகோபாலன் புனைப்பெயர் புஷ்பா தங்கத்துரை, நம்ம ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு கிருஷ்ணகுமார் மோகினி என்று புனைப்பெயர்கள். இதை இப்படி பட்டியலிட்டு சொல்லிவிட்டு,
ஐயா ஞானசம்பந்தன் அவர்களுக்கு முதலில் சூட்டிய பெயர் அங்குச்சாமி, இவர் ‘தோடுடைய செவியன்’ பாடல் பாடியதைக் கேட்டு, நாகர்கோயிலில் இருந்து வந்துஇருந்த ஆறுமுகநாவலர் சூட்டிய பெயர்தான் ‘’ஞானசம்பந்தன்”. அப்பெயரே நிலைத்து விட்டது. பாடல் பாடிய திறமைக்குக் கிடைத்தப் பரிசாக இப்பெயர் உள்ளது. இதுபோன்ற பல விஷயங்கள் அறியமுடியும் வண்ணம் நூலில் எழுதி உள்ளார்.
‘வில்லனும் நல்லவனே’ கட்டுரையில் இராவணனின் சிறப்பியல்பை எடுத்து இயம்பி உள்ளார், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் ‘உப பாண்டவர்’ என்னும் நாவலின் என்னுரையில் மிக அழகாக துரியோதனனைப் பற்றி குறிப்பிடுவார். இப்படி தகவல் களஞ்சியமாக நூல் உள்ளது. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால், “வாழ்க்கையும் வார்த்தையும் ஒன்றாக இருந்தால் தான் அந்த வார்த்தைக்கும் மதிப்பு, வாழ்க்கைக்கும் மதிப்பு”,
இப்படி முடித்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என முத்தாய்ப்பாக உள்ளன.
ஒரு கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கச்சிதமாக வடித்துள்ளார், சில சொற்கள் பேச்சுவழக்குச் சொற்களாகவும் இடம்பெற்று இருப்பதால் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளன. மேடையில் பேசும்முன்பு நடக்கும் உரையாடல்கள், பேசப்போகிற போது நாம் படும் பாடல்களையும் மைக்கை பிடிப்பதற்குள் நமக்கு ஏற்படும் இன்னல்களையும் ‘பொன்னியின் செல்வன்’ அளவிற்கு சொல்லிக் கொண்டே போகலாம் என்கிறார்.
முத்தமிழ்அறிஞர் கலைஞர் இருந்த மேடையில், ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் ‘இலக்கியமும் நகைச்சுவையும்’ என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக பேசியதைக் கேட்டுவிட்டு, ‘தமிழ் இலக்கியத்தின் சிற்றரசு’ என்ற பட்டம் வழங்கி பாராட்டி உள்ளார். மலரும் நினைவுகளாக நூலில் பதிவு செய்துள்ளார்,
திரைப்படங்களில் புகழ்பெற்ற பாடல் வரிகளைப் பட்டியலிட்டு அதன் இலக்கியத் சுவையை விளக்கி உள்ள விதம் அருமை.
பரிசு பெறாத பாரதியின் பாட்டு எது தெரியுமா?
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
இவ்வளவு சிறந்த பாடலுக்கு அன்று பரிசு தரவில்லை என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார்,
கட்டுரைகள் முழுவதிலும் தமிழ் இலக்கியத்தின் இலக்கியச் சுவையான வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற திரைப்படப் பாடல் வரிகள், கம்பராமாயணம். மகாபாரத காட்சிகள் என்று தேவையான இடங்களில் எடுத்து இயம்பி கட்டுரைகளை திறம்பட வடித்துள்ளார்,
கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே கையெழுத்து பத்திரிகை நடத்திய அனுபவம் மிக்கவர் பேராசிரியர் ஞானசம்பந்தன். பேராசிரியர் தொ, பரமசிவன் அவர்கள் குறிப்பிடுவது போல, வானொலி. தொலைக்காட்சி. வகுப்பறை, சினிமா, பயணம் தற்போது யூடியூப் சேனல் என அனைத்திலும் வெற்றிகண்ட ‘ஊடக நாயகர்’ இவர். பேச்சு மட்டுமல்ல, எழுத்திலும் வெற்றி கண்டவர் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த நூல் வந்துள்ளது. வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.


கருத்துகள்
கருத்துரையிடுக