இதயத்தில் ஹைக்கூ - ஹைக்கூக்கள்- இரா. இரவி - ஒரு பார்வை - பொன். குமார்
இரவும் பகலும் இடைவிடாது வந்து கொண்டேயுள்ளன. ஒரு தொடர் நிகழ்வு. இது போலவே இரா. இரவி ஹைக்கூ கவிதைகள் ( 1999), விழிகளில் ஹைக்கூ( 2000), நெஞ்சத்தில் ஹைக்கூ ( 2005), உள்ளத்தில் ஹைக்கூ என்னும் ஹைக்கூத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது தந்திருக்கும் தொகுப்பு ' இதயத்தில் ஹைக்கூ'. இரா. இரவியின் இதயத் துடிப்பும் ஹைக்கூ, ஹைக்கூ என்றே ஒலிக்கும்.
சுனாமியால் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. இப்பெரும் சோகத்தை பல கவிஞர்கள் கவிதையால் படம் பிடித்துக் காட்டினர். கவிஞர் இரா. இரவியோ
தாய் இருக்க சேய்
சேய் இருக்க தாய்
சுனாமிகள் கொலை
என சோகத்திலும் சோகமான பிரிவு சோகத்தைக் கூறியுள்ளார். இது முதல் ஹைக்கூ. தொடர்ந்து சுனாமி தொடர்பாக பல ஹைக்கூக்களை எழுதி தொகுப்பில் இணைத்துள்ளார். ஒரு சுனாமி கவிஞருக்கு பல ஹைக்கூக்களைத் தந்துள்ளது.
உயிர்கள் மரித்தன
மரிக்கவில்லை மனிதநேயம்
குவிந்தன நிதிகள்
என்பது குறிப்பிடத் தக்கது. இதில் கவிஞரின் மனித நேயமும் வெளிப்பட்டுள்ளது. சுனாமியால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்படுத்திய பாதிப்பாலும் ஒரு ஹைக்கூ எழுதியுள்ளார்.
வெந்த புண்ணில் வேல்
நிர்வாணம் ரணமானது
சோகத்தில் ஏழைகள்
என்கிறார். சொல்லாடலும் உள்ளது.
ஹைக்கூ என்பது அனுபவமாயிருக்க வேண்டும் என்பர்.
மேலே உள்ள எனக்கு
பழகி விட்ட ஒட்டகத்திற்கு
சுடவில்லை மணல்
என்பது கவிஞரின் கற்பனையாக இருக்க வேண்டும்.
விளம்பரம்
குளிப்பாட்டி அழுக்காக்குகிறான்
பெண்ணை
தொலைக்காட்சியில்
என நறுக்குகள் தொகுப்பில் ஒரு கவிதை எழுதி பெண்ணை அவமானப்படுத்துபவர்களைக் கண்டித்துள்ளார் காசி ஆனந்தன். விளம்பரங்கள் பெண்ணை பலவாறாய்ச் சீரழித்து வருகிறது. பண்பாட்டையும் சிதைக்கிறது. ஒரு மெண்டோ ஃபிரஷ்க்காக ஒரு பெண் சோரம் போவதாக விளம்பரத்தை சொரணையில்லாமல் ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். கோபமுற்ற கவிஞர்
பெரும்பங்கு
பண்பாட்டைச் சிதைப்பதில்
விளம்பரங்கள்
என சாடியுள்ளார். பண்பாடு காக்க கவிஞர் ஆற்றியுள்ள சிறுபங்கிது.
ரோஜா அழகு. ஆனால் அருகேயே இருக்கும் முள். ரோஜா எனில் முள்ளே நினைவிற்கு வரும். இரண்டையும் இணைத்தே எழுதப்பட்டு வந்துள்ளன. கவிஞரின் பார்வையோ வேறாக உள்ளது.
அழகிய மீன்
உள்ளே முட்கள்
என்றெழுதி மூன்றாம் அடியில்
ஆபத்தானது அழகு என எச்சரிக்கிறார். ' அழகு ஆபத்து' என இருப்பதே அழகு.
ஆலயங்களில் அர்ச்சனை மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத பாஷையிலேயே இருந்தது. தமிழையும் தீண்டாமைப்பட்டியலில் வைத்திருந்தது. தமிழில் செய்ய உத்தரவிட்டு தகர்த்தது அரசு. ஆயினும் விடவில்லை ' அவாள்கள்'. தாக்கினர். கவிஞர் ' அவாள்களை' ஹைக்கூவில் தாக்கியுள்ளார்.
தமிழில் பாடியவரை
தாக்கிய முட்டாள்கள்
தீட்சிதர்கள்
என குட்டியுள்ளார். இதன் மூலம் கவிஞரின் தமிழ் ஆர்வமும் அவாள்கள் மீதான கோபமும் ஒரு சேர வெளிப்பட்டுள்ளது.
எல்லாம் புரிந்த
இறைவனுக்குப் புரியாதாம்
தேவாரம்
என்பது சரியான சாடல்.
' தென்றலின் சுவடுகள்' தொகுப்பில் கவிஞர் கு. அ. தமிழ்மொழி எழுதிய ஹைக்கூ
குடி
குடியைக் கெடுக்கும்
பெப்சி - கோலா.
கவிஞர் இரா. இரவி எழுதியுள்ளது
காசு கொடுத்து
வாங்கும் நஞ்சு
கோக், பெப்சி.
ஒன்று குடியைக் கெடுக்கும் என்கிறது. இரண்டாவது குடலைக் கெடுக்கும் என்கிறது. இரண்டுமே கெடுதல் என்கிறது. அன்னிய குளிர்பான்களை எதிர்க்கிறது.
வானைத் தொட்ட கட்அவுட் கலாச்சாரத்தால் வீழ்ந்து போனது அரசியல் அதிகாரம் என்பது வரலாறு. ஆனால் இன்று அனைவரையும் தொற்றி விட்டது கட்அவுட் கலாச்சாரம். வடிவம் வேறு. தலைவரை வரவேற்கும் தொண்டனும் கட்அவுட்டில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறான்.
மக்களையும் தொற்றியது
அரசியல்வாதி வியாதி
கட்அவுட் கலாச்சாரம்
என விமர்சித்துள்ளார். எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் நாய் வளர்ப்பர். வளர்க்கும் நாய்க்குத் தரும் மரியாதையை வீட்டுக்கு வரும் மனிதருக்குத் தருவதில்லை. நாயினும் கீழானவர்களாயுள்ளனர். இந்நிலைக் கண்டு வருந்திய கவிஞர்
அம்மா தாயே
மனிதனை விரட்டிவிட்டு
நாய்க்குத் கறிச் சோறு
என எழுதி மனிதாபிமானமற்றவர்களாக மனிதர்கள் உள்ளனர் என்கிறார். கவிஞரின் மனிதநேயத்தைக் காட்டுகிறது.
உலகமயம், பொருளாதார மயம் , தாராளமயம் என பல மயங்கள். மயங்கள் எல்லாம் மக்களை மயக்கி சுருட்டவே செய்கின்றன. கவிஞர் தாராளமயத்தைத் தாராளமாகத் தாக்கியுள்ளார்.
தாராளக் கொள்ளை
பன்னாட்டு நிறுனங்கள்
தாராளமயம்
என வெளிச்சப் படுத்தியுள்ளார். அரசுக்கும் கூறியுள்ளார்.
பரவியது
பட்டிக்காட்டிலும்
பட்டிணம் பொடி
என்னும் ஹைக்கூவில் ஒரு புதிய நெடி வீசுவதை உணர முடிகிறது. ஆனால் பட்டிணம் என்பது வேறு. பட்டணம் என்பது வேறு. பட்டிணம் என்பது பூம்புகார் பட்டிணம் போன்ற ஊர்களைக் குறிக்கும். பட்டணம் என்பதே நகரத்தைக்குறிக்கும்.
இந்தியா ஒரே நாடு என்கிறது அரசியல் சாசனம். ஆனால் உரிமை என வரும்போது வேறாகிறது. குறிப்பாக நீர். தேவைக்கு அதிகமிருந்தாலும் தாகத்துக்கும் தரமறுக்கிறது அண்டை மாநிலம். பேச்சு வார்த்தையிலும் பயனில்லை. நீதி மன்றத் தீர்ப்புகளையும் புறக்கணிக்கிறது. ஏற்பதில்லை. ஒரே தீர்ப்பு இருமாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாய் எதிரொலிக்கிறது.
விசித்திரமாக உள்ளது
இருவருமே எதிர்க்கின்றனர்
காவிரிநடுவர் மன்றத் தீர்ப்பு
என இந்நிலையை ஹைக்கூவாக்கி சிந்திக்கச் செய்துள்ளார்.
கேட்கும் போது மறுப்பார்கள்
ஆபத்தென்றதும் திறப்பார்கள்
சுயநல கர்நாடகம்
என்பது முந்தையதற்கு முரண்பாடு.
நல்ல வாய்ப்பு
காவலர் கையூட்டுக்குத்
தலைக் கவசம்
என்னுமொரு ஹைக்கூ. உருவான ஒரு சூழலை வைத்து எழுத கவிஞருக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். கவிஞர் இதுபோன்ற ' நல்ல வாய்ப்பு' களைத் தவறவிடுவதேயில்லை. கவிஞரின் பலம், பலவீனம் இதுவே.
வலிகள் மிகுந்தது
வாள்முனையை விட
பேனா முனை
என்று ஒரு ஹைக்கூ எழுதப்பட்டுள்ளது. இது ஒரு கருத்தே. ஹைக்கூவில் நெடிய அனுபவமுள்ள கவிஞர் கருத்துக்களாக, அறிவுரைகளாக, பொன்மொழிகளாக, விடுகதைகளாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். எழுதினாலும் தொகுப்பில் இணைக்கக் கூடாது.
விளையாட்டு
வியாபாரமானது
கிரிக்கெட்
என பொன். குமார் கிரிக்கெட்டை விமர்சித்துள்ளார். ஒத்த சிந்தனைகள் ஹைக்கூவில் ஒரு தொடர் விபத்தாகவே நிகழ்கிறது.
தொகுப்பின் பின்பகுதியில் புகைப்படங்களையும் புகைப்படங்களுக்கு எழுதிய ஹைக்கூக்களையும் இணைத்துள்ளார். ஒரு படத்துக்கு ஒன்று எழுதுவதே கடிது. கவிஞரோ ஒவ்வொன்றுக்கும் பல எழுதி அசத்தியுள்ளார். படம் கூறும் கருத்துக்களை ஹைக்கூவில் பல்வேறாய் பிரதிபலிக்கச் செய்துள்ளார். படம் இல்லா விட்டாலும் ஹைக்கூவாக இருப்பது சிறப்பு.
கூலி ஆகிவிட்டான்
பொறியாளராக வேண்டியவன்
கொடியது வறுமை
கல்வி கற்கும் வயதில்
கல் சுமக்கும் அவலம்
ஏழ்மையான சுவடு.
கூலி கொஞ்சம்
வேலை அதிகம்
குழந்தைத் தொழிலாளி.
சீண்டாமல் தீண்டாது
மதிக்காமல் கடிக்காது
நல்ல பாம்பு.
ஆணிற்கு ஒரு நீதி
பெண்ணிற்கு ஒரு நீதி
தொடரும் அநீதி.
என்பவை படங்களையும் தாண்டி பொருள் தரக்கூடிய தன்மை மிக்கது. பெரும்பாலானவை குழந்தைகளைப் பற்றியதாகவும் வறுமையைப் பற்றியதாகவும் உள்ளன. ஹைக்கூவாக எழுதியதை விட படங்களுக்கு எழுதியவைகளில் கவிஞரின் சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது.
ஹைக்கூ படைப்பதில் இடையறாது இயங்கி வரும் இரா. இரவி பாராட்டுக்குரியவர். ஒவ்வொன்றிலும் அவரின் அக்கறையை உணர முடிகிறது. கவிஞர் இனிவரும் காலங்களில் ஹைக்கூ மீதும் கரிசனம் கொண்டு ஹைக்கூவாக உருவாக்க வேண்டும். ஐந்து தொகுப்புகளின் மூலம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேல் ஹைக்கூ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடும்படியான ஹைக்கூ எழுத வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியீடு
ஜெயச்சித்ரா
மதுரை

கருத்துகள்
கருத்துரையிடுக