நூல் : சிந்திக்கத் தூண்டும் ஹைக்கூ கவிதைகள் 500 நூல் ஆசிரியர் : கவிபாரதி மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூல் : சிந்திக்கத் தூண்டும்
ஹைக்கூ கவிதைகள் 500
நூல் ஆசிரியர் : கவிபாரதி மு. வாசுகி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு மணிமேகலைப் பிரசுரம் ,21 .தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் .சென்னை .600 017.
தொலைபேசி எண்கள் 044-24342926, 24346082, 91764 51934
பக்கம் 108 விலை ரூபாய் 120
******
சிந்திக்கத் ண்டும் ஹைக்கூ கவிதைகள் 500 விருந்து வைத்துள்ளார் நூலாசிரியர் கவிபாரதி மு.வாசுகி அவர்கள். கலைமாமணி பேராசியார் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளார்கள். நூலிற்கு மகுடமாக உள்ளது. மேலூரில் வசித்துவரும் இல்லத்தரசி நூல் ஆசிரியர் கவிபாரதி மு.வாசுகி தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பவர். முற்போக்கு இலக்கியப் பேரவையின் கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் நடத்திய கவிதைப் போட்டியில் வென்று 'கவிபாரதி', 'கவிப்பரிதி' போன்ற விருதுகளையும், பரிசும், கோப்பையும் வென்றவர்.
மூன்று வரி முத்தாய்ப்பு, சொற்ச்சிக்கனம், காட்சிப்படுத்துதல், சிந்தனை மின்னல் என பல்வேறு ஹைக்கூ உத்திகளைப் பயன்படுத்தி ஹைக்கூ கவிதைகள் வடித்து உள்ளார். நூலில் உள்ள 500 ஹைக்கூ கவிதைகளும் பிடித்து இருந்தாலும் மிகவும் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி எழுதுகின்றேன்.
ஆட்டோ ஓட்டுபவனின்
வாசலில் நிற்கிறது
வறுமை.
உண்மை தான். பெட்ரோல் விலை ரூ. 100க்கு மேல் உள்ளது. இறங்கவே இல்லை. எனவே கியாஸ் ஆட்டோ வாங்கி பிழைத்துக் கொள்ளலாம் என்று பலர். கியாஸ் நிரப்ப முடியாமல் வரிசையில் நின்றபடியே தவிக்கிறான் ஆட்டோக்காரன். குறும்பாக ஒருவர் எழுதினார்.
கடவுள் ஆட்டோக்காரராகப் பிறக்க வேண்டும் – அவர்
ஆட்டோ ஓட்டி வேதனையில் வாட வேண்டும். என்று.
அந்த அளவிற்கு அல்லப்படும் ஆட்டோக்காரரின் நிலையை கண்முன் கொண்டு வந்தது இந்த ஹைக்கூ.
குழந்தை துப்பிய சோறு
பசியாறின
எறும்புகள் !
குழந்தைக்கு அம்மா சோறு ஊட்டும்போது சில வாய் குழந்தை துப்பிவிடும். அவ்வாறு துப்பிய சோற்றை எறும்புகள் வரிசையாகச் சென்று உண்ணும் போது பார்த்து, அதனை ஹைக்கூவாக்கி உள்ளார். உற்றுநோக்கினால் படைப்புக்கு பல கருக்கள் கிடைக்கும் என்பது உண்மை. எதையும் கவிதைப் பார்வையுடன் பார்த்தல் வேண்டும்.
பச்சை குத்தாமலே
பதிவாகி விடுகிறது
ஆதரவற்ற குழந்தைகளின் முகம்!
ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்றவர்களுக்குத் தெரியும், அவர்களது முகங்களில் ஒருவித சோகம் எப்போதும் தொற்றியே இருக்கும். அவர்களைப் பார்த்து விட்டு, வீட்டிற்கு வந்தபிறகும் அவர்களின் முகங்கள் நம் மனக்கண்ணில் தோன்றும். அந்த உணர்வை ஹைக்கூவாக்கி உள்ளார்.
உள்ளே குலதெய்வம்
வெளியே காவல்தெய்வம்
பசியால் வாடும் ஊர்!
நம் நாட்டில் தெய்வங்களுக்குப் பஞ்சமே இல்லை. தடுக்கி விழுந்தால் கோயில்கள் தான். பல்வேறு தெய்வங்களை பல்வேறு வழிகளில் வழிபட்டு நின்றபோதும் வறுமை ஒழியவில்லை. பஞ்சம், பசி தீரவில்லை என்பதால் பட்டினியில் ஊர் வாடும் அவலத்தைக் காட்சிப்படுத்தி உள்ளார். நாமும் முயன்றால் தான் எதுவும் நடக்கும். தெய்வங்களால் எதுவும் நடக்காது என்பதை உணர்த்தி உள்ளார்.
ரசமிருக்கும் தெரியும்
ரசிகையுமா இருக்கிறாள்?
நீ பார்க்கும் கண்ணாடியில்!
சிலருக்கு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பழக்கம் உண்டு. அப்படிப்பட்டவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் விதமாக கண்ணாடியில் ரசம் தானே இருக்கும், ரசிகையுமா இருக்கிறாள் என்கிறார் எள்ளல் சுவையுடன்.
கண்கள் எதிர்க்கட்சியாயிருந்தும்
நாக்கு ஆளும் கட்சியாயிருப்பதால்
உள்ளே நுழைந்து விடுகிறது லட்டு.
இனிப்பு நோய் உள்ளவர்கள் இனிப்பை உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாலும், லட்டைப் பார்த்தவுடனே எச்சில் ஊறி லட்டை தின்று விடுவதை கண்ட நூலாசிரியர் கவிபாரதி மு. வாசுகி அதனையும் ஒரு ஹைக்கூவாக வடித்து விட்டார். பாராட்டுகள்.
ஆற்றவும் செய்கிறது
ஊற்றவும் செய்கிறது
கவலையை தனிமை!
உண்மையில் தனிமையில் இருந்து சிந்திப்பது சிலநேரம் ஆறுதலாக இருக்கும். சிலநேரம் கவலையாகவும் இருக்கும். தனிமை சிலநேரம் வரம், சிலநேரம் சாபம். தனிமையின் கொடுமையை உணர்ந்தவர்கள் மட்டும உணரும் நல்ல ஹைக்கூ.
சொற்களால் உன்னை
குறை மதிப்பீடு செய்தவர்களுக்கு
மவுனமாய் மதிப்பெண் போடுவதே வெற்றி!
குறைமதிப்பீடு செய்து, திட்டியவர்களுடன் எதிர்த்து வாய்ச்சண்டை போடுவதல்ல வெற்றி. மவுனமாக இருந்து சாதனை புரிவதே வெற்றி என்பதை உணர்த்துகின்றார்.
விருந்தினர் வருகை
குப்பைக்குப் போனது
மரத்தில் புன்னகைத்த வாழையிலை!
வீட்டுக்கொலைப்புறத்தில் வாழையை நட்டு வைத்திருப்பார்கள். கழிவுநீர் சென்று அதிலேயே வாழை நன்று வளரும். அப்படி உள்ள வீடுகளில் விருந்தினர் வந்ததும் வாழையிலை அறுப்பது வழக்கம்தான், அதனை உணர்த்தி உள்ளார்.
நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் 500 ஹைக்கூ கவிதைகள் நிறைந்துள்ளன, நம் சிந்தையில் பல மின்னல்களை ஏற்படுத்தி வெற்றி பெறுகின்றன, நூலின் தலைப்புக்கேற்றபடி 500 ஹைக்கூ வரிசை எண்களுடன். ஹைக்கூ எழுதி. 500 ஹைக்கூ கவிதைகள் வடித்து ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். நூலாசிரியர் கவிபாரதி மு.வாசுகி அவர்களுக்கு பாராட்டுகள்.


கருத்துகள்
கருத்துரையிடுக