இறையன்பு ஓராண்டு உரைகள் தொகுதி 4 நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

இறையன்பு ஓராண்டு உரைகள் தொகுதி 4 நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 050. செல் : 044 - 26251968, 26258410 4 தொகுதிகள் ; விலை ரூ.1500 ****** இறையன்பு ஓராண்டு உரைகள் தொகுதி 4ல் 26 உரைகள் உள்ளன. ஆக மொத்தம் 101 உரைகள். நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக உள்ளது. 101 உரைகளை எப்படி ஆவணப்படுத்தினார்கள் என்பது வியப்புத்தான், அறிவியல் வளர்ச்சியின் விளைவே இந்த நூல். பல ஊர்களில் உரையாற்றிய போது எடுத்த புகைப்படங்களும் உள்ளன. “புல்லாங்குழலின் புலம்பல்” இது முதல் உரை. “அழகாக வடிவமைப்போம்” முடிவாக உள்ள உரை. நாகூர் ரூபியின் நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரை “புல்லாங்குழலின் புலம்பல்”. கவிக்கோ மன்றத்தில் விழா நடந்ததால் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி, அவரது ஆற்றல் பற்றி குறிப்பிட்டு தொடங்கி உள்ளார் நூலாசிரியர். நாகூர் ரூபி அவரது அண்ணன் திருப்புகழ் அவர்களின் நண்பர். நகைக்சுவையாக ஒன்று சொல்லி உள்ளார். பாருங்கள். “நாகூர் ரூபியை விட நாகூர் எனக்கு நன்றாகத் தெரியும். நான் நாகப்பட்டினத்தில் சாராட்சியராக இருந்ததால் குறைந்தது 50 முறையாவது அங்கு சென்று இருப்பேன். இரண்டு கந்தூரித் திருவிழாக்களில் தர்காவின் வாசலிலேயே இரவு முழுவதும் இருந்த அனுபவம் உண்டு. அதுவே ரூபி அவர்களுக்கு சொந்த ஊர் என்பது அவருடன் பழகிய பிறகே தெரிந்தது”. பதச்சோறாக எழுதி உள்ளேன். நாம் ஒரு உரையை நிகழ்த்தும்போது எப்படி தொடங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக 26 கட்டுரைகள் அமைந்துள்ளன. நூல் வெளியீட்டு விழா என்றால், நூல் வெளியிடும் மன்றம் பற்றி, கவிக்கோ பற்றி, நூல் ஆசிரியர் பிறந்த ஊர் பற்றி, இப்படி ஆரம்பித்து வரிசையாக உரையைத் தொடுத்து முத்தாய்ப்பாக முடித்து விடுகிறார். நூலில் சில முக்கியமான கருத்துக்களை அரைவட்ட வடிவில் தனியாக பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு உள்ளனர். நூலை படித்து முடித்துவிட்டு பிறகு மறுவாசிப்பின்போது அரைவட்ட வடிவில் உள்ள கருத்துக்களை வாசித்தால் மனதில் நன்கு பதிந்து விடுகின்றன. வாசகர் மனதில் மாற்றத்தை, முன்னேற்றத்தை, எழுச்சியை, சுறுசுறுப்பை உணர்த்தி விடுகின்றன. பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ! “சிலர் அறிவை அமுக்கி வைப்பார்கள். தங்களுக்குத் தெரிந்ததை யாரோடும் பகிராமல் கமுக்கமாக வைத்திருப்பார்கள். அவர்கள் அறிவும் புழுதியில் எறிந்த வீணையைப் போன்றதே, அறிவைப் பகிரும் போதுதான் அது இசையாகிறது”. உண்மை தான், இப்படிப்பட்ட மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி என பலமொழிகளில் புலமை பெற்றவர். தமிழ் இலக்கியங்கள் தொடங்கி மேல்நாட்டு இலக்கியங்கள் வரை பல நூல்கள் படித்தவர். படித்தவர் மட்டுமல்ல, அவற்றை மனத்தில் அப்படியே உள்வாங்கிக் கொண்டவர். தான் கற்றதை, தனக்குத் தெரிந்த தகவலை பேச்சு, எழுத்து என்ற இரு துறையிலும் வெளிப்படுத்தி இன்றைய இளைய சமுதாயத்தை அறிவார்ந்தவர்களாக மாற்றும் முயற்சியை, புரட்சியை, அமைதியாக செய்து வருகிறார். இலக்கியத்தில் ‘காதல்’ என்ற உரை மதுரை புத்தகத் திருவிழாவில் நிகழ்த்தியது, நான் நேரில் கேட்ட சில உரைகள் உள்ளன. பல உரைகள் கேட்காதவை. அவற்றையும் அனைத்தையும் கேட்ட உணர்வைத் தந்தது நூல். அவர் சொன்ன காதல் கவிதைகள் மறக்க முடியாதவை. கவியரசு வைரமுத்து எழுதிய ‘காதலித்துப் பார்’ கவிதை முழுவதும் உள்ளது. நீண்ட நெடிய கவிதையை கையில் குறிப்பு எதுவுமின்றி மனப்பாடமாக சரளமாகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர். ஊசிகள் என்ற நூலில் கவிஞர் மீரா எழுதிய புகழ்பெற்ற கவிதைகளான. உனக்கும் எனக்கும் ஒரே ஊர் - வாசுதேவநல்லூர். நீயும் நானும் ஒரே மதம், திருநெல்வேலிச் சைவப்பிள்ளையினர் வகுப்பும் கூட. உந்தன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள். எனவே “செம்புலப் பெயல்நீர் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே”. எள்ளல் சுவையுடன் கூடிய இந்தக் கவிதை சிந்திக்க வைத்தது. சிலர் விழிப்புணர்வோடு காதல் செய்வதை குறிப்பிடும் கவிதை. இப்படி மீரா அவர்கள் நூலில் எழுதியுள்ள பல காதல் கவிதைகளை மேற்கோள் காட்டி உள்ளார். “எங்கு போட்டி இருக்கிறதோ, எங்கே நாம் போராடினால் தான் வெற்றி என்கிற சூழல் இருக்கிறதோ, அங்கே நம் மூளை கூர்மையடைந்து விடுகிறது. நம் எண்ணங்கள் செழுமையடைந்து விடுகின்றன”. இப்படி பல கருத்துக்களை சொல்லி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கின்றார். படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மறுவாசிப்பு செய்து நம்மை புதுப்பித்துக் கொள்ள புத்துணர்ச்சி பெற்றுக்கொள்ள உதவிடும் கவிதை நூல். “படிக்கும் தாகத்திற்கும், தண்ணீரால் தணியும் தாகத்திற்கும் வேறுபாடு உண்டு. தண்ணீர் குடித்தால் அந்தத் தாகம் தணிந்து விடும். ஆனால் படிக்கும் தாகமோ படிக்கப் படிக்க அதிகரிக்கும்”. படிப்பின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார். 200க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருந்தாலும் இன்றும் இறையன்பு அவர்கள் படித்துக்கொண்ட இருக்கிறார். இளைய சமுதாயம் அலைபேசி என்ற வலைக்குள் சிக்கிக்கொண்டு வாசிப்புப் பழக்கத்தை வழக்கொழிந்து விடுகின்றனர். வாசிப்பு என்பது சுகமான அனுபவம். இந்த நூலை வாசித்த போது அந்த சுகத்தை முற்றிலும் உணர்ந்தேன்.

கருத்துகள்