நூல் : திருக்குறள் 100, வெளியீடு : NCBH நூலாசிரியர் : இறையன்பு நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை

நூல் : திருக்குறள் 100, வெளியீடு : NCBH நூலாசிரியர் : இறையன்பு நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை சனவரி 2026 இல் வெளிவந்த திருக்குறள் 100 என்கிற நூலை மேனாள் தலைமை செயலாளரும் மிகச்சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமாகிய முனைவர் திருமிகு இறையன்பு அவர்களின் அருமையானதொரு படைப்பு. நூலை வாங்கும்போது திருக்குறள் 100 என பெயரிடப்பட்டிருக்கிறதே 100 குறட்பாக்கள் மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு விளக்கம் கொடுத்திருப்பாரோ அல்லது முதல்பாகமாக 100 குறள்களை எடுத்துக்கொண்டுள்ளாரோ என்ற யோசனை மிகுதியாக ஆர்வத்துடன் இருந்தேன். புத்தகம் கைக்கு கிடைத்தவுடன் நூலாசிரியர் திருமிகு இறையன்பு அவர்களின் முன்னுரையை வாசித்தபின் தான் தெரிந்தது 100 கேள்வியாக கேட்கப்பட்டு பதிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆழமாக அகலமாக தேடிக் கண்டுப்பிடித்துக் கொடுத்த முத்துக்கள் போல வினாக்களுக்கான கருத்துகள் நிறைந்த பதில்களை படிக்க ஆரம்பித்தேன். திருக்குறளில் முதல் குறளான ‘அகரமுதல’ என்பதில் ஏதேனும் தனிக்சிறப்பு உள்ளதா? என்று ஆரம்பாக்கிறது நூலின் முதல் அத்தியாயம். ‘அ’ கரம் எவ்வாறு மற்ற மொழிகளில் முதன்மை பெறுகிறது. ‘அ’ என்கிற ஓசையின் சிறப்பு பற்றி நுணுக்கமாகக் குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்பு. நாம் பள்ளியில் படிக்கறபோது தமிழ் பாடத்தில் செய்யுள் பகுதிளாக 10 குறட்பாக்காள் வரும் கல்லூரிக்காலத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக படித்திருப்போம். குறளை மனம்பாடம் செய்து கொள்வது போல அதன் விளக்கத்தையும் மனப்பாடம் செய்து எழுதிவிட்டு பரிட்சையோடு மறந்து விடுவோம். நாம் நம் வாழ்க்கையில் கடைபிடிக்கத்தான் இவற்றையெல்லாம் நம் பாடப்பகுதியில் வைத்துள்ளார்கள் என்கிற புரிதல் அந்த இளம் வயதில் நம் காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. வயது ஆக ஆக வாழ்க்கையை வாழும் போதுதான் நம் அன்றாட வாழ்வின நிகழ்வுகள் தினம் நான்கைந்து குறள்களை நினைவில் கொண்டு வரும். திருக்குறள் 100 புத்தகத்தில் திருவள்ளுவரின் கருத்துகள் ஆங்கில எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான வில்லியம் சேக்ஸ்பியரின் கருத்துகளோடும் சில குறட்பாக்களில் சேக்ஸ்பியரும் கம்பர் இருவருக்கிடையேயான ஒத்த கருத்துகளாக இருப்பதை திருமிகு இறையன்பு அவர்கள் ஆழ்ந்த ஆய்வுகளுடன் தனது கருத்தையும் இணைத்து வழங்கி மக்கள் மனதில் ஆழமாக பதித்துள்ளார். போகிற போக்கில் மிக எளிமையாக வாசிக்க வசதியாக உள்ளது, ஒப்பீடு செய்து திருக்குறளின் பதத்தை ருசிக்கிறபோது கூடுதல் சுவையாகவே உள்ளது. 39 வது வினா உடுக்கை இழந்தவனுக்கு ஒப்பாக சேக்ஸ்பியர்; ஏதாவது கூறியிருக்கிறாறா? எனும் கேள்விக்கு அளித்திருக்கும் விளக்கமும் சிறப்பு. He that is thy friend indeed. He will help thee in thy need. சேக்ஸ்பியர் தேவைக்காக உதவுகிறவனே உண்மையான நண்பன் என்று நட்புக்கு இலக்கணம் வகுக்கிறார். 8 வது கேள்வியில் எந்நன்றி கொன்றார்க்கும் என்கிற குறளில் தொனிக்கும் கருத்து சங்கப்பாடலில் பிரதிபலிப்பதை ஆய்வு செய்து விளக்கம் கொடுத்திருப்பது அருமை! வான் சிறப்பு அதிகாரத்தின் சிறப்பையும் வேளாண்மை பற்றிய குறள்களின் ஆய்வு விளக்கமும் சிறப்பு. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார். என்கிற குறளில் “சிறியர் செயற்குரிய செய்கலாதார்” என்று அமைத்திருந்தால் பொருத்தம் என்பதை தமிழறிஞர்கள் ச.கு. கணபதி ஐயர் அவர்களும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களும் சொன்ன கருத்தை ஒலைச்சுவடிகளைப் பார்த்து படியெடுக்கும்போது செயற்கரிய என மாறியிருக்க வாய்ப்புண்டு என்று முடித்திருக்கிறார் நூல் ஆசிரியர். இந்த ஆய்வும் சிறப்பு. 63 வது கேள்வியில் “ செம்புலப்பெயல்நீர் என்று சங்கப்பாடல் ஒன்று உள்ளது திருவள்ளுவர் நிலத்தியல் பால் திரிந்தற்று என்று கூறுகிறார். எவ்வாறு இக்குறள் வேறுபடுகிறது என்று வினா எழுப்பி விளக்கம் கொடுத்துள்ளது நம் கவனத்தை ஈர்க்கிறது. நல்ல சேர்க்கை நன்மை தரும் மேன்மை தரும் என்பதை மிக அழமாக விவரித்துள்ளார். “ நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.” நல்ல மனிதர்கள் நம்மை வழிநடத்துவதோடு நம்மிடமுள்ள தீயவற்றை அகற்றி நமக்குள் இருக்கும் சிற்பத்தை அறிய உதவுகிறார்கள். 20 வது வினா ‘கொல்லான் புலாலை மறுத்தானை’ குறள் குறித்த ஆய்வில் ஞானிகள் புத்தர், புனித பிரான்சிஸ், து. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மிலரேப்பா ஆகிய தெய்வீக மனிதர்களையும் அவர்களின் கருணையுள்ளம் அன்புள்ளம் கொண்ட சிறப்புகளையும் மிக ஆழமாக விளக்கி உள்ளார் ஆசிரியர்,. திருக்குறள், அதற்கான உரை, சிறுகதைகளோடு விளக்கம், விரிவான உரை அயல்நாட்டினர் திருக்குறளுக்கு தங்கள் மொழியில் மொழிபெயர்த்து உரை என்று பல அறிஞர் பெருமக்கள் தமது பங்களிப்பை தந்திருந்தாலும் இதிகாசங்களின் கருத்துகள், அறிஞர் பெருமக்கள் பார்வைகள், மேலை நாட்டு அறிஞர்கள் படைப்புகளின் கருத்துகள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து வள்ளுவரின் ஆழ்ந்த அகன்ற சாரங்களை, நோக்கங்களை அறிவியல், உளவியல், சட்டம் மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் என பல கோணங்களில் தொடர்பு படுத்தி திருக்குறளின் பன்முகத் தன்மையை தனது பார்வையோடும் சேர்த்து சுவை கூட்டி வழங்கியுள்ளார் நூலாசிரியர் இறையன்பு அவர்கள். 100 வது அத்தியாயத்தில் ஒல்லோர் அதிகாரத்திலும் கடைசிக் குறள் சிறப்பாக இருப்பதாக அந்திமழையில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அது பற்றி உரைக்க முடியுமா? என்ற வினாவுக்கு, திருவள்ளுவர் அதிகாரங்கள் தோறும் இறுதிக் குறட்பாவில் அந்த அதிகாரத்தின் சாரமாக வடித்திருப்பதை விவரித்து நூலாசிரியரும் நூலின் இறுதியில் திருக்குறள் 100 புத்தகத்தின் சாரமாகவும் திருக்குறளின் அனேக அதிகாரங்களை குறிப்பிட்டு கற்றதை தெளிவாக விளக்கு வதற்கு பூவின் மணத்தை ஒப்பிட்டு முடித்திருப்பது சிறப்பினும் சிறப்பு. இந்நூலை பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வைத்தால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். நூலாசிரியரின் ஆய்வு வெற்றி கலந்த பல்சுவை நூல்.

கருத்துகள்