படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

முருகேச பாண்டியன்.கடந்த வாரம் 09/10/25 அன்று காலையில் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கடைக்குப் போகும்போது குறுக்குச் சந்தில் இருந்து திடீரென டிவிஎஸ் 50 யில் நுழைந்த பெரியவர் மீது மோதாமல் இருப்பதற்காகப் போட்ட பிரேக்கினால் கீழே விழுந்து விட்டேன். இடது காலில் மட்டும் சிறிய அடி. எழுந்து வண்டியை ஓட்டிக்கொண்டு கடைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். சிராய்ப்புக் காயத்தில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. சரி, மருத்துவமனைக்குப் போய் டிடி இன்ஜெக்சன் ஊசி போட்டுவிட்டு வரலாம் என்று எங்கள் வீட்டுக்கருகிலுள்ள கொன்னவாஞ்சாலையில் இருக்கிற மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலுக்குப் போனேன். அப்பொழுது நேரம் காலை பத்து மணி. மருத்துவரின் பரிந்துரையின்பேரில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேகளைப் பார்த்த மருத்துவர், பிரச்சினை எதுவுமில்லை. ஒரு வாரம் ஓய்வெடுத்தால் சரியாகும் என்று மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். என் துணைவியார் மருந்துக் கடைக்குப் போயிருந்தார். நான் வரவேற்பறையில் இருந்தேன். திடீரென என்னை மீண்டும் அழைத்த மருத்துவர், இரண்டு மணிக்கு ஆர்த்தோ மருத்துவர் வருவார். உங்களுக்கு மாவுக் கட்டு போட வேண்டும்; ஸ்குரூ போட வேண்டும் .உடனடியாக எமர்ஜன்சி வார்டில் சேருங்கள் என்று சொன்னவுடன் ஒரு கணம் திகைப்பாக இருந்தது. நாங்கள் அவருடைய பேச்சை மறுத்துவிட்டு அரசரடியில் இருக்கிற ஆர்த்தோ மருத்துவரான அருண் அவர்களைப் பார்க்கச் சென்றோம். அவர் என்னைப் பரிசோதித்துவிட்டுப் பிரச்சினை எதுவுமில்லை. ஒரு வாரம் மாத்திரைகள் சாப்பிடுங்கள் சரியாயிடும் என்று சொன்னார். வீட்டுக்குத் திரும்பினோம். இப்பொழுதுவரை பிரச்சினை எதுவுமில்லை. அந்த மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவர் ஏன் அப்படிச் சொன்னார்? அவரைப் பின்னிருந்து இயக்குகின்ற முதலைகள் யார் என்ற கேள்வி என்னைப் போலவே உங்களுக்கும் தோன்றுகிறது அல்லவா? என்னுடைய வாழ்க்கையில் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். சமூக வளர்ச்சிக்கு மருத்துவமும் கல்வியும் மிகவும் முக்கியமானவை என்று ஆழமாக நம்புகிறேன். மக்களின் நல்வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கிடும் மருத்துவத்திலும் கல்வியிலும் கறுப்பு ஆடுகள் கணிசமாக நுழைந்திருப்பதன் வெளிப்பாடுதான் என்னுடைய அனுபவம். சரி, போகட்டும். எண்பதுகளில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மருந்துக் கம்பெனிகள்தான் கட்டுப்படுத்துகின்றன என்று வாசித்தபோது வியப்பாக இருந்தது. இன்று அந்நிலைமை இந்தியாவிலும் வந்து விட்டது. அண்மையில் டாக்டர் அனுஷ்வர் தீக்கதிர் நாளிதழில் (18/10/25) ’மருத்துவமும் முதலாளித்துவமும்’ என்ற பெயரில் எழுதியுள்ள கட்டுரையை வாசித்தவுடன் இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி தோன்றியது. மருத்துவத்தை முன்வைத்து மருத்துவர் அனுஷ்வர் எழுதியிருக்கிற கட்டுரை இன்றைய காலகட்டத்தின் தேவை. சமூக அக்கறையுடன் கட்டுரை எழுதியுள்ள இளம் மருத்துவரான அனுஷ்வருக்கு வாழ்த்துகள்! மருத்துவர் அனுஷ்வர் என்னுடைய நண்பர் இறையன்புவின் மகன் என்பது கூடுதல் தகவல். உடல்நலத்தின்மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அனுஷ்வர் எழுதியுள்ள ‘மருத்துவமும் முதலாளித்துவமும்’ கட்டுரையை அவசியம் வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்துடன் இணைத்துள்ளேன். மருத்துவமும் முதலாளித்துவமும் 2024 டிசம்பர் 4-ஆம் நாள், அமெரிக்காவின் யுனைடெட் ஹெல்த்கேர் நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் தாம்ஸனை 27 வயது இளைஞர் லுயிஜி மான்ஜோனி நியூயார்க்கின் மான் ஹாட்டனில் சுட்டுக்கொன்றார். கைதான மான்ஜோனியிடம் கிடைத்த கடிதத்தில், “இதை நான் தனியாகத்தான் செய்தேன். உலகில் அமெரிக்காவின் மருத்துவச் செலவுகள்தான் அதிகம். ஆனால் நாமோ சராசரி ஆயுளில் 4 2-ஆம் இடத்தில்தான் உள்ளோம். கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் அளவுகடந்து விட்டது. ஏனெனில் அமெரிக்கப் பொதுமக்கள் இவர்களைத் தப்பிக்க விடுகிறார்கள்” என்று எழுதியிருந்தார். உலகெங்கும் மக்கள் மான்ஜோனியின் பக்கம் நின்றனர். இதற்குக் காரணம், மருத்துவம் என்னும் பெயரில் முதலாளித்துவம் செலுத்தும் ஆதிக்கமேயாகும். மருத்துவத் துறையின் வளர்ச்சி மருத்துவத்துறையின் வளர்ச்சி மக்களின் நோய்களை விரைவில் கண்டறியவும் சிகிச்சையை ஆற்றலோடு செலுத்துவதற்கும் பல்வேறு முறைகளை வடிவமைக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புதிய தடுப்பூசிகள், நுண்ணுயிர்க்கொல்லிகள், பரிசோதனை இயந்திரங்கள் போன்ற கண்டுபிடிப்புகளால் சராசரி ஆயுள் 30 ஆண்டுகளிலிருந்து 48 ஆண்டுகளாக உயர் ந்தது. 1950-1980 காலம்தான் மிகவும் வேகமான சராசரி ஆயுள் வளர்ச்சியை உலகம் கண்டது. தொற்று நோய்களின் மீதிருந்த கவனம், இன்று நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வுமுறை தொடர்புடைய தொற்றாத நோய்களின் பக்கம் திரும்பியுள்ளது. எச்.ஐ.வி போன்ற கொடிய நோய்களுக்கும் தீர்வு காணும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். க்ரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் கொண்டு சிசிஆர்5 (CCR5) மரபணு மாற்றத்தின் வாயிலாக எச்.ஐ.வி (HIV) எதிர்ப்பை உருவாக்க முடியும். வெள்ளை இரத்த அணுக்களில் ஏற்படும் புற்றுநோய்களை எதிர்க்க கார்-டி செல் சிகிச்சை (CAR-T Cell therapy) இன்று இந்தியாவிற்கும் வந்துள்ளது. ஆனால் கார்-டி செல் சிகிச்சைக்கு 25-50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதிநவீன சிகிச்சைகள் பல லட்சங்களை செலவழித்தால் மட்டுமே பெற முடியும். மருத்துவத்துறையில் முதலாளிகளின் பங்கு பால் ஸ்டார் எழுதிய ‘அமெரிக்க மருத்துவமும் சமூக மாற்றமும்’ என்னும் நூலில், “அமெரிக்க மருத்து வம் இயற்கையாக வளரவில்லை, அது முதலாளித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்டது” என்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொது சேவையாக இருந்த மருத்துவம், இருபதாம் நூற்றாண்டில் இலாபத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபின் அதிகாரம் சில கைகளில் குவிந்தது. இது மருத்து வத்தில் ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது. மருத்துவமனைகள் சேவை நிறுவனங்களிலிருந்து லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறின. மருத்துவக் காப்பீடும் முதலாளித்துவமும் மருத்துவக் காப்பீடு தனியார் சந்தையில் உருவானது; அரசினால் உருவாக்கப்படவில்லை. விசென்ட் நவாரோவின் ‘முதலாளித்துவத்தின் கீழ் மருத்துவம்’ என்ற நூல் குறிப்பிடுவதுபோல், காப்பீட்டாளர்கள் குறைந்த ஆபத்துள்ள ஆரோக்கியமானவர்களை மட்டும் சேர்க்க விரும்புகிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காப்பீடு, வேலையுடன் இணைக்கப்பட்டது. இதனால் முறைசாரா தொழிலாளர்கள், வேலையில்லா மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்படைந்தனர். மருத்துவப் பாதுகாப்பு என்பது, ஒரு உரிமை என்பதில் இருந்து வாங்கு பொருளாக மாறிவிட்டது. இவையனைத்தும் காச ளிக்கும் திறனை மட்டுமே கருத்திற்கொண்டவையே தவிர மக்களின் தேவைகளைக் கருதவில்லை. மருத்துவமே வர்க்கப் பிரிவினையை வலுப்படுத்தி யது. மேல்தட்டு மக்கள் உலகத்தர மருத்துவ வசதிகளை அனுபவிக்கும்போது, ஏழைத் தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. சோஷலிச நாடுகளில் மருத்துவம் அனைவருக்கும் இலவசம். ஆனால் முதலாளித்துவ நாடுகளில் இலாபமீட்டும் கருவியாகவும், வர்க்க ஆதிக்கத்தின் உந்துசக்தியாகவும் இருக்கிறது. புதிய ஜி.எஸ்.டி சலுகைகளின் கீழ் காப்பீட்டிற் கான ஜி.எஸ்.டி 0% ஆகக் குறைந்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அடிப்படைத் தொகையை உயர்த்தி இலாபம் ஈட்டுகின்றன. இதை அரசு கண்காணிக்க வேண்டும். 0% ஜி.எஸ்.டி சலுகையின் கீழ் உள்வரிச் சலுகைகள் (உள்ளீட்டு வரிக் கடன்) கிடையாது. எனவே அந்தச் செலவுகளும் மக்களிடமிருந்தே வசூலிக்கப்படும். ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் பூஜ்ய விகித வழங்கலில் (பூஜ்ய விகித வழங்கீடு) காப்பீடு வருவதில்லை. காப்பீடு ‘வரி விலக்கின் கீழ்’ (வரி விலக்கு) உள்ளதால், இச்சலு கைக்குக் கால அளவு உண்டு. கியூபாவின் சுகாதாரத்துறை கியூபாவில் மருத்துவமும் சுகாதாரத்துறையும் முழுமையாக அரசால் நடத்தப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் என்பதே கியூபாவின் தாரக மந்திரம். மருத்துவப் பாதுகாப்பு அடிப்படை உரிமையாகும்; வர்த்தகமயமான வாங்குபொருளல்ல. உலகத்தின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்கும் நாடுகளில் ஒன்று கியூபா. உலகமெங்கும் கியூபாவின் மருத்துவர்கள் பல பேரிடர்களில் மக்களுக்கு மருத்துவ உதவியளிக்கும் உயரிய தொண்டினை ஆற்றுகின்றனர். கியூப குடிமக்களின் சராசரி ஆயுள் 79 ஆண்டுகள். குழந்தை இறப்பு ஆயிரம் பிறப்புகளில் நான்கு மட்டுமே - இலத்தீன் அமெரிக்காவிலேயே மிகக்குறைந்த எண்ணிக்கை. உள்நாட்டிலேயே பல தடுப்பூசிகளையும் மருத்துவ தொழில்நுட்பத்தையும் கியூபா தயாரிக்கின்றது. மருத்துவர்-நோயாளி விகிதம் மிக உயர்வானது (150 குடிமக்களுக்கு ஒரு மருத்துவர்). ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவரையும் செவிலியரையும் அரசு அளிக்கின்றது. இந்தியாவில் இரு முகங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சோஷலிச கொள்கைகள் அடங்கியுள்ளன. அரசியல் சட்டப் பிரிவு 39 c & f, 47 போன்றவை மக்களின் உடல்நலம், பொது சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது என்கின்றன. முதல் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான எம்.என்.ராயின் மனிதநேய தத்துவம் பரிந்துரைத்த மக்களின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும், சமூக நீதியையும் கருத்திற்கொண்டு சோஷலிச கருத்துகளை அரசியலமைப்பு விவாதங்களில் நிபுணர்கள் வழங்கினர். இந்தியாவிலும் அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படு கின்றது. கேரள அரசின் சாதனைகளால்தாம், இந்தியாவிலேயே மருத்துவத்தில் தலைசிறந்த மாநிலமாக அது திகழ்கின்றது. இந்தியாவிலேயே அதிக சராசரி ஆயுள், குறைந்த குழந்தை இறப்பு, மகப்பேறு இறப்பு விகிதம்கொண்ட மாநிலமாகக் கேரளா திகழ்கிறது. ஆனால் இந்தியாவில் தனியார் மருத்துவமனை கள் 63 சதவிகிதம். 80 சதவிகித மருத்துவர்கள் தனியார் துறையில் உள்ளனர். இந்திய தனியார் மருத்துவ சந்தையின் மதிப்பு 2022-இல் 31 லட்சம் கோடி ரூபாய்; ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சி. மக்களின் சொந்தச் செலவுகள் (சுய செலவுகள்) இன்னும் 40 சதவிகிதம். 54 சதவிகித தனியார் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டை ஏற்பதில்லை. ஏற்பவர்களும் தேவையற்ற செலவுகளைக் கணக்கில் சேர்த்து அதிக லாபம் திரட்டுகின்றனர். அதிநவீனச் சிகிச்சைகள் ஏழை மக்களுக்குக் கிடைப்பதில்லை. சிதைக்கும் மருத்துவச் செலவுகள் (பேரழிவுகரமான சுகாதார செலவுகள்) 26 சதவிகிதம். நிதி ஆயோக்கின் ஆய்வில், தனியார் மருத்துவமனைகளில் இந்தியக் குடும்பங்கள் 37 சதவிகிதம் அதிக சிதைக்கும் செலவுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா 140 கோடி மக்கள்தொகைக் கொண்ட நாடாகும். 2050-இல் 20 சதவிகித முதியவர்களைக் கொண்ட நாடாக மாறிவிடும். அமர்ந்த இடத்திலிருந்தே வேலை புரியும் இன்றைய காலகட்டத்தில் வாழ்வாதார நோய்களும், சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் நோய்களும் பன்மடங்காகும். இச்சூழலில் வலுவான எதிர்காலத்தை அமைக்க வலுவான மருத்துவத்துறையைக் கட்டமைக்க வேண்டும். இந்த நவீன உலகில் கண்டுபிடிக்கப்படும் எண்ணற்ற மருத்துவ தொழில்நுட்பங்களின் கனிகளை அனைவரும் பெற வேண்டும். அதற்கு மருத்துவம் அனைவராலும் அடை யக்கூடியதாகவும், குறைந்த செலவு அளிக்கக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் அமைய வேண்டும். அதற்குச் சோஷலிச சித்தாந்தத்தை இளைய மருத்துவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தீக்கதிர் நாளிதழ் (18/10/25)

கருத்துகள்