ுட்டும் விழி - ஹைக்கூக்கள் - இரா. இரவி - ஒரு பார்வை - பொன். குமார்

சுட்டும் விழி - ஹைக்கூக்கள் - இரா. இரவி - ஒரு பார்வை - பொன். குமார் கவிஞர் இரா. இரவி தமிழக ஹைக்கூ கவிஞர்களில் முக்கியமானவர். ஹைக்கூக்களை தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்ந்து ஹைக்கூ தொகுப்புகளையும் வெளியிட்டு வருகிறார். கவிஞர் இரா. இரவியின் முயற்சியில் சுட்டும் விழி என்னும் ஹைக்கூ தொகுப்பு வெளியாகியுள்ளது. இத்தொகுப்பை அவரின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் வெ. இறையன்பு இ. ஆ. ப. அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். இரவியின் இன்னொரு குருவான பேராசிரியர் இரா. மோகன் அணிந்துரை தந்துள்ளார். தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழ்ப் பேசுவதில்லை. தமிழில் பேசுவதே கெளரவ குறைவு என்று எண்ணுபவர்கள். . தடுக்கி விழுந்ததும் தமிழ் பேசினான் அம்மா என்னும் ஹைக்கூவில் ஒருவன் எப்போது தமிழ் பேசுகிறான், பேசுவான் என்கிறார். தடுக்கி விழும்போதே தமிழ் நாவில் வருகிறது என்கிறார். மனிதர் மறுத்தாலும் மனம் தமிழை மறக்காது என்கிறார். காவி நிறம் என்றால் ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது. காவி என்றால் அமைதி என்றும் அன்பு என்றும் ஓர் அடையாளம் இருந்தது. ஆனால் இன்று காவி என்றால் வம்பு என்றாகி விட்டது. வன்முறை என்னும் நிலை உருவாகிவிட்டது. காவி என்றால் வன்முறை என்றானது ஒரு பெரும் வரலாறு. கவிஞர் இரா. இரவி அந்த வரலாறை அன்பின் நிறம் வம்பின் நிறமானது காவி என்று மூன்றே வரிகளில் கூறியுள்ளார். காவி மீதான ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார். அரசியல் என்பது மக்களுக்கு பணி செய்யும் ஒரு வாய்ப்பாகும். தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்தது ஒரு காலம். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைவர். தற்போது கூட்டணி என்பது வாக்கு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டே அமைக்கப்படுகிறது. எண்ணங்களால் அன்று எண்ணிக்கைகளால் இன்று கூட்டணி என்று எண்ணிக்கையை மனத்தில் கொண்டு கூட்டணி அமைக்கும் அரசியல்கட்சிகளை விமர்சித்துள்ளார். எண்ணங்களாலே அரசியல் கூட்டணி அமைய வேண்டும் என்பதே கவிஞரின் எண்ணம். இன்று இலக்கியத்தில் தனித்த குரல்களாக சுய வலியுடன் ஒலித்துக் கொண்டிருப்பன தலித்தியம், பெண்ணியம். தலித் குரலில் ஒரு நியாயம் இருக்கிறது. மு. முருகேஷ் அவர்களின் ஹைக்கூ முழங்கும் பறை அதிரும் செவிப்பறை விடுதலை நாதம் தலித்துக்கு ஆதரவாக ஒலித்துள்ளது. இந்த ஹைக்கூ அடிக்க அடிக்க அதிரும் பறை தலை முறைக்கோபம் என்னும் மித்ரா ஹைக்கூவையும் அரசுக்கு கேட்பதேயில்லை பறையொலி என்னும் பொன். குமாரின் ஹைக்கூவையும் நினைவுப்படுத்தியது. கவிஞர் இரா. இரவி இதே தொனியில் கொன்ற கோபம் இன்னும் தீரவில்லை அதிரும் பறை என்று எழுதி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கோபத்தைத் தீர்த்துக்கொண்டுள்ளார். ஆதிக்க சாதிகளின் மீதான கோபமே பறையாக ஒலிக்கிறது என்கிறார். காதல் திருமணங்கள் முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்து விட்டன. அதே வேகத்தில் விவாகரத்துகளும் தொடர்கின்றன. பக்குவப்படாத காதல் அவசரத் திருமணம் விரைவில் மணவிலக்கு என்னும் ஹைக்கூ மூலம் கவிஞர் விவாகரத்துகளுக்குக் காரணம் பக்குவப்படாதே காதலே காரணம் என்கிறார். கவிஞர் காதலை எதிர்க்கவில்லை. காதலர்கள் திருமண முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். காதலுக்கு பக்குவப்பட்ட மனம் வேண்டும் என்கிறார். மனிதர்கள் அழகு என்று ரசிக்கிறார்கள். அழகுக்கு அடிமையாகிறார்கள். அழகு என்பது ஒரு மாயை. அழகு என்பது நிரந்தரமில்லாதது. அழகு என்பது தற்காலிகமானதே. உணர்த்தியது நிரந்தரமற்றது அழகு வானவில் என கவிஞர் வானவில்லை அழகு நிரந்தரமில்லை என்பதற்கு உதாரணமாகக் காட்டுகிறார். வானவில் வானில் அழகாக தோன்றும். ஆனால் சில நிமிடங்களில் மறைந்து விடும். தமிழைக் காத்ததில் பெரும் பங்கு பெற்றன பனைமரங்கள் என்பதில் ஒரு வரலாற்றுச் செய்தி உள்ளது. திருக்குறள் போன்ற பல இலக்கிய படைப்புகள் பண்டைய காலங்களில் பதப்படுத்தப்பட்ட பனை ஓலைகளிலேயே எழுதி வைக்கப்பட்டன. அதனால் தமிழைக் காத்த பெருமை பனை ஒலைகளே என்பதைக் கவிஞர் தெரிவித்துள்ளார். தமிழை மட்டுமல்ல தமிழர்களையும் காத்து வருபவை பனைமரங்களே. எனினும் யுகங்கள் கடந்தும் இளமை குன்றவில்லை தமிழ் என்றும் தமிழின் பெருமைப் பேசியுள்ளார். சிறப்பைக் கூறியுள்ளார். ச பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும் என்று இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இராமர் கட்டிய பாலம் இருப்பதாகக் கூறி அரசியல் காரணங்களால் முறியடிக்கப்பட்டது. கவிஞர் இரா. இரவி மூட நம்பிக்கையால் முற்றுப் பெற்றது சேதுக் கால்வாய் என்று மூன்றே வரிகளில் இச்செய்தியைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு ஜீவன் வாகனமாக இருக்கும். விநாயகரின் வாகனம் எலி என்று புராணம் கூறுகிறது. அதற்கு ஒரு பெருங்கதையும் உள்ளது. விநாயகர் என்றால் யானை முகத்தை உடைய ஒரு பெரிய உருவம். எலி ஒரு சிறிய உருவம். இதனால் கவிஞர் எலி மீது யானை எப்படி சாத்தியம் பிள்ளையார் என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சிறிய உருவமான எலி மீது ஒரு பெரிய உருவமான யானை போன்ற விநாயகர் எப்படி அமர முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். சிந்திக்கச் செய்துள்ளார். மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார். நிலம் விற்றுப் பெற்ற மனத்தில் அப்பாவின் முகம் என்பது குறிப்பிடத்தகுந்த ஹைக்கூ. அப்பாக்கள் சம்பாதித்து வாங்கிய நிலத்தை பிள்ளைகள் விற்று சுகமாக வாழ்வார்கள். சுயமாக சம்பாதிக்க தெரியாது. அப்பா தந்த நிலத்தை விற்று தின்று வாழ்பவர்களைச் சாடியுள்ளார். ஹைக்கூவில் அதிகம் பாடப்பட்டவர் அய்யனார். பெரும்பாலும் ஊருக்கு வெளியே நின்று அய்யனார் ஊரைக்காப்பதாகவே இருக்கும். ஆனால் கவிஞர் அனுமதிக்கவில்லை காவல் அய்யனாரை ஊருக்குள் என்று புதுமையாக சிந்தித்துள்ளார். ஊருக்குள் அனுமதிக்காததற்கு ஏதும் காரணம் இருக்குமோ, அரசியல் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வோர் ஊரிலும் ஓர் ஆலைத் தொடங்கும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர். வருமானமும் கிடைக்கும். வருமானத்தைவிட தீங்கு அதிகம் ஆலைக்கழிவுகள் என்னும் ஹைக்கூவில் கவிஞர் ஆலைக்கழிவுகளால் தீங்கே அதிகம் என்று கவிஞர் சுற்றுச்சூழல் அக்கறையுடன் எழுதியுள்ளார். ஆலைக்கழிவுகள் ஆறுகளை சாக்கடையாக்கியதுடன் மக்கள் வாழ்வையும் பாதிக்கிறது. கரும்புகை பெரும்பகை தவிக்கும் உயிர்கள் என்பதும் ஆலையினால் ஏற்படும் ஆபத்தேயாகும். பெண்ணை விட ஆணே அழகு மயில் என்று ஒரு ஹைக்கூவில் எழுதியுள்ளார். மயில் மட்டுமல்ல மனிதர் தவிர மற்ற ஜீவராசிகளில் ஆண் ஜீவன்களே அழகு. இயற்கையின் படைப்பே விந்தையானதுதான். பலனில்லை பெயர் மாற்றம் எண்ணம் மாற்று என்பது நல்ல அறிவுரை. மனிதர்கள் எண்ணைக் கணக்கில் வைத்து பெயரை மாற்றிக்கொள்கின்றனர். வாஸ்து படி வீட்டைக்கட்டுகின்றனர். ஆனால் இவை மூடநம்பிக்கை என்கிறார் கவிஞர். எண்ணை மாற்றாதே எண்ணங்களை மாற்று என்கிறார். எண்ணம்போல் வாழ்வு என்பதை எண்ணிப்பார்க்கச் செய்கிறார். பெண்களைப் போற்றும் ஆண்கள் அரிது. மனைவியைப் பாராட்டும் கணவன்கள் அரிதிலும் அரிது. கவிஞர் இரா. இரவி மாதா பிதா குரு ஒரே வடிவில் மனைவி என்று போற்றியுள்ளார். பாராட்டியுள்ளார். பெண்களை உயர்த்தியுள்ளார். தெய்வம் என்று குறிப்பிடவில்லை. விலைவாசி ஒருபுறம் உயர்ந்து கொண்டே போகிறது. மறுபுறம் கூலி உயர்வதேயில்லை. உயர்த்தப்படுவதேயில்லை. கூலி உயர்வு போராட்டம் நடத்தினாலும் பயன் இருப்பதில்லை. இதனால் பாதிக்கப்படுவது ஏழை மக்களே என்று கவலைப்பட்டுள்ளார். உயராது கூலி உயரும் விலைவாசி வேதனையில் ஏழைகள் என்னும் ஹைக்கூவில் ஏழை மக்களின் நிலையை எடுத்துக்காட்டியுள்ளார். வேதனையிலேயே மக்கள் வாழவேண்டிய நிலை தொடர்கிறது என்கிறார். கவிஞர் இரா. இரவி அவர்களின் முந்தைய ஹைக்கூ தொகுப்புகளிலிருந்து சுட்டும் விழி வேறுபட்டுள்ளது. புதியதாய் பல பாடுபொருள்களைக் காணமுடிகின்றன. ஹைக்கூக்கள் அளவான சொற்களுடன் அழகாக அமைந்துள்ளன. தொகுப்பிலுள்ள ஹைக்கூக்கள் மூலம் ஒரு சமூக பிரதிநிதியாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார். அனைத்து மக்களின் சார்பாக குரல் கொடுத்துள்ளார். சமூக அவலங்கள் அனைத்தையும் பேசியுள்ளார். தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலிலியம், மூடநம்பிக்கையியம், முற்போக்குவியம் என எல்லா இயங்களையும் பேசியுள்ளார். இதயங்களில் இடம்பிடித்துள்ளார். ஒரே பிரச்சனையை பலவிதமாக பேசுவதில் வல்லவராக உள்ளார். ஒரே பொருளையும் பலகோணங்களில் எழுதி வருகிறார். ஹைக்கூ என்னும் மூன்றடி வடிவம் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதையே சுட்டும் விழி சுட்டுகிறது. கவிஞர் இரா. இரவி சுற்றுலாத் துறையில் பணியாற்றுபவர். இரா. இரவியின் ஹைக்கூக்களும் சுற்றுலா சென்றுள்ளன. வாசகர்களையே சுற்றி சுற்றி வருகின்றன. வெளியீடு ஜெயசித்ரா மதுரை

கருத்துகள்