பார்வையற்றோர் சுயமாகப் படிக்கவும் எழுதவும் உதவும் பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய லூயிஸ் பிரெயில் அவர்களின் பிறந்த நாள் இன்று.* அவரது கண்டுபிடிப்பு இன்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படுகிறது. உலக பிரெய்லி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 4ல் லூயிஸ் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
லூயிஸ் பிரெய்லி ஜனவரி 4, 1809 இல் பிறந்தார். பிரான்சில் உள்ள கூப்வேய் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். லூயிஸின் தந்தை குதிரைக்கு வேண்டிய தளவாடப் பொருட்களை செய்து விற்பவர். லூயிஸ் அடிக்கடி தனது தந்தையின் பட்டறையில் விளையாடி நேரத்தை செலவிட்டார். ஒரு நாள் அந்த பணிமனையில் கிடந்த சிறிய தோல் பொருளில் துளைகளை உருவாக்க முயன்ற போது, கூர்மையான கருவி நழுவி அவரது ஒரு கண்ணில் பட்டது. அப்போது அவருக்கு மூன்று வயது. லூயிஸின் சேதமடைந்த கண்ணுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை, அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில் அவரது கண் மோசமாக பாதிக்கப்பட்டது. தொற்று அவரது மற்றொரு கண்ணுக்கும் பரவியது. அவருக்கு ஐந்து வயது இருக்கும் போது, லூயிஸ் இரண்டு கண்களிலும் முற்றிலும் பார்வை இழந்தார். விடாமுயற்சியும், அதீத திறமையும் வாய்ந்த அந்த சிறுவன் 10 வயதில், பாரிஸில் உள்ள உலகின் முதல் பார்வையற்ற இளைஞர்களுக்கான ராயல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பள்ளியில் படிக்கத் தொடங்கினான்.
1821 ஆம் ஆண்டில், லூயிஸ் பிரெஞ்சு இராணுவத்தின் கேப்டன் சார்லஸ் பார்பியரால் உருவாக்கப்பட்ட தொட்டுணரக்கூடிய தகவல் தொடர்பு அமைப்பான 'இரவு எழுத்து’ பற்றி அறிந்தார். போர்க்கள தகவல் தொடர்புகளை இருளில் கடத்தும் நோக்கில், தடித்த காகிதத்தில் அமைக்கப்பட்ட புள்ளிகள் மற்றும் கோடுகளின் குறியீட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது அந்த பதிவு.
விரல்களை கொண்டு தொடுவதன் மூலமும், போர்க்களத்தில் பேசவோ அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றவோ தேவையில்லாமல் படையினரை தொடர்பு கொள்ள அனுமதிப்பதன் மூலம் விளக்கப்படும் வகையில் அமைந்த இந்த தகவல் தொடர்பை கண்டு வியந்த லூயிஸ், பார்பியரின் சிக்கலான இந்த அமைப்பால் ஈர்க்கப்பட்டு, பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் அதை எளிமைப்படுத்த தொடங்கினார்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெய்லி உலகம் முழுவதும் பரவியது.
அதன் பிறகு படிப்படியாக பிரெய்லி தொழில்நுட்பம் இயந்திரங்கள் வடிவில் பிரெய்லி எழுத்துக்களை காகிதத்தில் மாற்றும் விசைகள் கொண்ட தட்டச்சுப்பொறிகள் என உருவாக்கப்பட்டு நவீன கால மின்னணு பிரெய்லி குறிப்பு எடுக்கும் கருவி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்பு மென்பொருள் என வளர்ந்து விட்டது.
1952 இல், பிரெஞ்சு அரசாங்கம் இறுதியாக லூயிஸ் பிரெய்லியின் சாதனைகளை அங்கீகரித்தது. அவரது உடல் கூப்வேயில் உள்ள கிராம கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, பாரிஸில் உள்ள பிரபலமான பிரஞ்சு நபர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பாந்தியனில் மீண்டும் புதைக்கப்பட்டது.
நாம் இன்றும் கூப்வேயில் உள்ள லூயிஸ் பிரெயிலின் குழந்தைப் பருவ இல்லத்திற்குச் செல்லலாம். அந்த கட்டிடம் லூயிஸ் பிரெய்லி அருங்காட்சியகமாக இன்றும் மிளிர்கிறது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளை கடந்து லூயிஸ் பிரெயிலியின் புகழ் உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான பார்வையற்றவர்கள் மத்தியில் அவரது பிரெய்லி எழுத்து வடிவில் வாழ்கிறது.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋
கருத்துகள்
கருத்துரையிடுக