ஹைக்கூ 500- ஹைக்கூக்கள் - இரா. இரவி - ஒரு பார்வை - பொன். குமார்

ஹைக்கூ 500- ஹைக்கூக்கள் - இரா. இரவி - ஒரு பார்வை - பொன். குமார் ஹைக்கூக்கள் 560 அடங்கிய தொகுப்பு சரவிளக்குகள் எழுதியவர் பிரபாகர் பாபு. ஒரே கவிதை நூலில் 560 ஹைக்கூ கவிதைகளுடன் பவனி வரும் முதல் நூல் என்னும் அடைமொழியுடன் வந்தது. ஏழைதாசன் இதழ் 500 ஹைக்கூக்கள் அடங்கிய இதழைக் கொண்டு வந்தது. கவிஞர் இரா. இரவியே ஆயிரம் ஹைக்கூக்கள் அடங்கிய ஆயிரம் ஹைக்கூ என்னும் தொகுப்பைக் கொண்டு வந்தார். மீண்டும் அவரே ஹைக்கூ 500 என்னும் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். இத்தொகுப்பு வித்தியாசமானது. படங்களை வைத்து எழுதப்பட்டவை. படங்களுக்கு ஏற்ப இயற்றப்பட்ட.வை. " இந்த நூல் எனது 19ஆவது நூல். புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் முகநூலில் அவருக்குப் பிடித்த புகைப் படங்களைப் பதிவு செய்து அவற்றிற்குப் பொருத்தமான ஹைக்கூ கவிதைகள் எழுத வேண்டுமென்று போட்டி வைத்தார். பலரும் எழுதினார்கள். நானும் எழுதினேன். எல்லோரும் ஒரு கவிதை எழுதுவார்கள். ஆனால் நான் ஒரு படத்திற்கே ஐந்து கோணங்களில் சிந்தித்து ஐந்து ஹைக்கூ பதிவு செய்தேன். முகநூலில் பலரும் பாராட்டினார்கள். முகநூலில் புகைப்படத்திற்காக நான் எழுதிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளேன். இந்நூல் வருவதற்குக் காரணமாக இருந்த படங்களைப் பதிவு செய்த இனிய நண்பர், பகுத்தறிவாளர், தமிழ் இன உணர்வாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களிடமே அணிந்துரை வேண்டினேன். ஓர் அற்புதமான அணிந்துரையைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி" என தொகுப்பு குறித்து கவிஞர் இரா. இரவியே எழுதியுள்ளார். " பரிதி இல்லாமல் உலக உயிர்கள் இல்லை. அதுபோல இரவி இல்லாமல் துளிப்பா வரலாறில்லை. துளிப்பா வரலாற்றில் பத்தியல்ல, பக்கமல்ல, அத்தியாயம் ஒன்றைத் தம்மிடத்தே தக்க வைத்துள்ளார் " என அணிந்துரையில் கவிஞர் புதுமை தமிழ் நெஞ்சன் எழுதியுள்ளார். தாயில்லாக் குழந்தை தானே சமைக்கின்றது பசியாற என்பது படத்திற்கு எழுதப்பட்டதாயினும் ஒரு ஹைக்கூவாக தனித்து நிற்கிறது. தாயிருந்தால் சமைத்து தருவாள். தாயில்லாக் குழந்தைகள் தானே சமைத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளதைக் காட்டியுள்ளார். கைகால்கள் இழந்த போதும் நம்பிக்கை இழக்கவில்லை குடும்பத் தலைவர் என்னும் ஹைக்கூ ஒரு நல்ல ஹைக்கூ. விபத்து ஏற்படுவது இயல்பு. கை கால்களை இழப்பதும் தவிர்க்க முடியாதது. கை இழந்தாலும் கால் இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது என்கிறார். தன்னலமில்லாத ஒரே உறவு தாய் என்பது பொது. விலங்குகளின் படத்திற்கு எழுதப் பட்டாலும் மனிதருக்கும் பொருந்தும். தாயே முதன்மை என்கிறார். பெண் குழந்தையைப் போற்றி வளர்க்கும் தந்தை உயர்ந்தவர் என ஒரு ஹைக்கூவில் தந்தையை உயர்த்திக் காட்டியுள்ளார். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது என்பர். கவிஞர் ஏன் உறங்காது என்கிறார். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்னும் இரண்டு வரிகள் எழுதி மூன்றாமடியில் துளிர்த்து மரமாகும் என்கிறார். விதை விருட்சமாகும் என்பது இயற்கை. தப்பாட்டம் என்பது தோலால் செய்யப்பட்ட ஓர் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஆடும் ஆட்டமாகும். இது சரியாட்டம். சரியாக ஆடினாலும் இதற்கு பெயர் தப்பாட்டமாகும். இதனாலே பெயர் வைத்தது யாரோ சரியான ஆட்டத்திற்கு தப்பாட்டம் என்று என்றொரு கேள்வியைக் கேட்கிறார். தப்பு என்பதும் இந்த இசைக்கருவியின் பெயராகும். இதிலிருந்தே தப்பாட்டம் என்னும் பெயர் உருவாகியிருக்கிறது. மனிதர்கள் ஆண்டவனை வழிபடுவர். வழிபாடு செய்வர். இதெல்லாம் மக்கள் நலனுக்கு என்பர். கவிஞர் சிறந்தது வழிபாட்டை விட உதவுதல் என்னும் ஒரு சிறிய ஹைக்கூ மூலம் வழிபாட்டை விட மக்களுக்கு உதவுவதே சிறந்த சேவை என்கிறார். வழிபாட்டை விட வேண்டும் என்று வேண்டியுள்ளார். மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ பங்களாக்களைக் கட்டி வாழ்கின்றனர். ஆனால் நிம்மதியாக வாழ முடியாத நிலையிலேயே உள்ளனர். கவிஞரோ குடிசை வீடுதான் குடியிருக்கிறது குதூகலம் என்கிறார். குடிசை வீட்டில் இருக்கும் மனிதர்களே குதூகலமாக வாழ்கிறார்கள் என்கிறார். ஒரு நாட்டின் முதுகெலும்பு கிராமம் என்பர். விவசாயமே கிராமத்தின் முக்கியமான தொழில். விவசாயத்திற்கு என்று ஒரு துறையும் உள்ளது. ஆனால் விவசாயம் நசிந்து விட்டது. விவசாயியோ மெலிந்து விட்டான். இன்று வறுமையையே அறுவடைச் செய்கிறான். வறுமையிலேயே வாழ்கிறான். வெள்ளையன் ஆண்டபோது கூட இல்லை இவ்வளவு வறுமை உழவனுக்கு என்று உழவர் குறித்து வருத்தப்பட்டுள்ளார். இந்திய அரசைச் சாடியுள்ளார். விவசாயியின் வறுமை நிலைக்கு இந்திய அரசே பொறுப்பு என்கிறார். உறங்கும் மக்களை எழுப்புவது சூரியன். சூரியன் உதித்த பின்னே உழைக்கச் செல்வர் என்பர். ஆனால் பெரும்பாலான உழைப்பாளிகள் சூரியனுக்கு முன்பே புறப்பட்டு விடுகின்றனர். ஆதவன் வருகைக்கு முன் பயணம் உழைக்கும் வர்க்கம் என உழைப்பாளிகளைப் போற்றியுள்ளார். ஆதவனே உழைப்பாளிகளைக் கண்டு அதிசயித்து போவான் என்கிறார். இலைமீது பனித்துளி இருக்கும். பனித்துளிக்குள் சூரியனே தெரியும். பனித்துளி சிறியதானாலும் காணும் பகலவன் பெரிது. அது போல் ஹைக்கூ என்னும் சிறுதுளியில் பெரிய வானமே தெரியும் என்கிறார். சிறு துளியில் பெரிய வானம் ஹைக்கூ என்னும் ஒரு சிறிய ஹைக்கூ ஒரு பெரிய விசயத்தைக் காட்டுகிறது. நாற்று நடும் பெண்கள் எல்லாம் அழுக்கு அவர்களிடம் அவர்கள் பாடலைத் தவிர என்பது ராய்ஸானின் ஹைக்கூ. இருக்கலாம் சேலையில் அழுக்கு இல்லை மனதில் அழுக்கு நாற்று நடும் பெண்கள என்பது இரவியின் ஹைக்கூ. ராய்ஸானின் ஹைக்கூவை நினைவுப்படுத்துகிறது இரா. இரவியின் ஹைக்கூ. உலக அதிசயங்களில் ஒன்று குருவிக்கூடு. உயரத்தில் இருந்தாலும் மனிதரை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. அதிசயிக்கச் செய்கிறது. மழைக்கு ஒழுகாது வெயிலும் படாது குருவியின் வீடு என்று கவிஞரும் வியக்கச் செய்கிறார். கவிஞர் கூடு என்று சொல்லாமல் வீடு என்று சொல்கிறார். ஓர் ஆசிரியர் பள்ளியில் ஒரேயொரு மாணவன் அரசுப் பள்ளி என்பது கவனிப்பிற்குரிய ஒரு ஹைக்கூ.. அரசுப்பள்ளிகளின் அவல நிலையைக் காட்டுகிறது. ஓர் ஆசிரியர் பள்ளி என்பது சரி. ஒரேயொரு மாணவன் என்பது மாற வேண்டும். பதவி ஆசை மனிதர்களை விடுவதில்லை. மனிதர்களை ஆட்டுவிக்கிறது. பதவியை அடைய பல குற்றங்களையும் செய்கிறான். எனவே இருக்கைக்கான ஆசைதான் பலரைத் தள்ளியது சிறை இருளில் என்கிறார் கவிஞர். பதவி என்பது தேடி வருவதாக இருக்க வேண்டும். பதவியை தேடி போனால் பல சிக்கல் வரவே செய்யும். துன்பம் தராதவரை துன்பம் தருவதில்லை யானைகள் என்று ஒரு ஹைக்கூவில் எழுதியுள்ளார். யானையை நாட்டுக்குள் அழைத்து வந்ததே துன்பம்தானே..? தமிழ்நாட்டின் மரமாக பனைமரம் அடையாளப்படுகிறது. மனிதர் வளர்க்காமலே மனிதர்களுக்கு முழுவதும் பயன்படுவது பனைமரம். ஆனால் பனைமரங்களைக்காணமுடியவில்லை என கவலைப்படுகிறார். தமிழ்நாட்டின் மரம் தேட வேண்டி உள்ளது பனைமரம் பனைமரங்களை மக்கள் வெட்டி விடுகிறார்கள். பனைமரத்தை பாதுகாப்பது நல்லது. ஹைக்கூ என்பது காட்சி என்பர். ஹைக்கூவை வாசிக்கும் போது காட்சிகள் கண் முன் விரியும். ஹைக்கூ 500 என்னும் இத்தொகுப்பில் கவிஞர் இரா. இரவி புகைப்படங்களுக்கு ஏற்ப, புகைப்படங்களை வைத்து ஹைக்கூக்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஹைக்கூக்களை எழுதி மொத்தம் 500 ஹைக்கூக்கள் எழுதியுள்ளார். ஒரு புகைப்படத்தை பல கோணங்களில் பார்த்துள்ளார். சில ஹைக்கூக்கள் படங்களைத் தாண்டி பொதுவாகவும் உள்ளது. சிலவில் சிலவையே இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கவிஞர் இரா. இரவிக்குள் ஹைக்கூ என்னும் ஊற்று வற்றாமலே ஊறுகிறது. தொடர்ந்து ஊற வாழ்த்துகள். " இரவியின் ஹைக்கூ கவிதைப் புனைதிறன் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதலாம். மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். எனினும் சுருங்கச் சொல்வல் என நன்னூலார் குறிப்பிடும் நூலழகின் நெறி நின்று கவியரசர் கண்ணதாசனின் மொழிகளில் கூறுவது என்றால் இப்படிச் சொல்லலாம். சொல்லில் வந்தது பாதி- நெஞ்சில் ததும்பி நிற்பது மீதி ஆம் சிறு துளியில் பெரிய வானம் (இரவியின்) ஹைக்கூ என்று பாராட்டியுள்ளார் முனைவர். இரா. மோகன். பாராட்டுக்கு பொருத்தமானவர் கவிஞர் இரா. இரவி. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை கவிஞர் இரா. இரவி 9842193103 பொன். குமார் 9003344742

கருத்துகள்