*பாரதியார் பிறந்த நாளில்..*
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இலக்கியகர்த்தாக்களிடம், சீர்திருத்தவாதிகளிடம் காணுகிற முரண்கள், அவர்களது வாழ் நாட்களை போலவே அதிகமாக காணமுடியும். அவர்கள் வாழ்ந்த நாட்களில் தங்களின் மாறுப்பட்ட பார்வையை, வாழும் காலத்திலேயே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை, அவர்களின் வாழ்நாள் தந்திருக்கிறது. இதற்கு பெரியாரையும், கண்ணதாசனையும் சொல்லலாம்.
ஒரு எழுத்தாளன் வாழ்ந்த சூழலில் எழுதிய எழுத்துக்களை, சிறிது காலத்திற்கு பிறகு திருப்பி பார்க்கிற போது, சில கருப்பொருளில் திருப்தி கொள்ள கூடும், சில கருப்பொருளை திருப்பி எடுத்துக்கொள்ள தோன்றும்.
பாரதி வாழ்ந்த தனது குறைவான தலைமறைவு வாழ்க்கையில், தனது முரண்பாடான சில கருத்துக்களை திருத்திக்கொள்ளவும், சில கருத்துகளில் திருப்திப்பட்டுக் கொள்ளவும், அவரது வாழ்நாள் ஒத்துழைக்கவில்லையென்பதே
என் பார்வை. பாரதி இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படுவார். அவரது எழுச்சி மிகு வரிகளோடு, கூடவே திருத்தியமைக்கப்படாத சில வரிகளோடும்.
சோவியத் நாட்டு புரட்சிக் கவிஞனான மயாகோவ்ஸ்கி ஒருமுறை தனது கவிதை பற்றிய விமர்சனம் செய்த ஒருவர், உங்கள் கவி பொருள் நிகழ்காலத்தின் தற்காலிக பிரச்சினை பற்றியது இவை பேரிலக்கியங்களைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் கவிதை நிலைத்து நிற்குமா? என்று கேள்வி எழுப்பினான், அதற்கு மயாகோவஸ்கி, ” முடிந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இந்த கேள்வியை கேள், அப்பொழுது பதிலளிக்க நான் இருப்பேன், ஆனால் கேள்வி கேட்க நீதான் இருக்க மாட்டாய்!” என்றார். இதை இங்கே எனக்கு சொல்ல தோன்றுகிறது பாரதி வாழும் காலத்தில் பரந்துப்பட்ட புகழை அல்லது விசாலமான ஈர்ப்பை பெற்றிருக்கவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கும் குறைவான வாழ்நாட்களில் வீரியமான கருத்துக்களை தனது திரைமறைவு வாழ்க்கையிலும் தெளிவாக சொன்னப்போனதிலும், தனது சோடைப் போன சில சித்தாந்தகளை சிறிதளவு திருத்திக்கொள்ளவும் செய்திருக்கிறார். நீண்டகாலம் வாழ்ந்து, வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை சமூக சீர்த்திருத்த முன்னெடுப்புகளுக்காக அர்ப்பணித்த பலர் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே
சறுக்கல்களையும், வீழ்ச்சிகளையும்
கண்டவர்கள் தான். பாரதி விதிவிலக்கல்ல. திருத்தங்களை செய்ய அவரது ஆயுள் ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் மரணத்திற்குப் பின் தமிழ் மக்களின் தலைமுறையினரிடையே ஒரு சின்னமாக போற்றப்பட்டு, அவர் வழிபாட்டு நிலையை அடைந்துள்ளதை, அவரது பாடல்களும் பிற படைப்புகளும் இந்த நாள் வரை கூட இளைய மக்களிடையே பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளதை கண்கூடாக பார்க்கிறோம்.
பாரதி இறந்து நூறு ஆண்டுகளை தொட்ட நிலையிலும் பல புகழாரங்களுக்கு ஊடாக, சில விமர்சனங்களும் முன் வைக்கப்படுவது என்பது பாரதியின் நித்திய புகழ் மற்றும் மக்களிடையே அவரின் பசுமை மாறா ஈர்ப்பும் உறுதிப்படுத்துகிறது என்பதாக தான் பார்க்கிறேன்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋
கருத்துகள்
கருத்துரையிடுக